பெஸ்கி அடிகளாரது தமிழ்க்கொடை
இந்திய மக்களுக்கு நற்செய்திப் பரப்புரை செய்யவே பெஸ்கி அடிகளார் இத்தாலியிலிருந்து வந்தார். நற்செய்தியைத் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கும், தமிழ் நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கட்டாயமாகத் தமிழ் படித்துத் தீரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், தமிழைக் கற்று அதில் புலமைப் பெற்று, தமிழ் வித்தகராகவும் சிறந்தார்.
ஆண்டு மடல்கள் வாயிலாக, எத்தனை பேர்களை அவர் கிறித்தவர்களாக்கினார்? எத்தனை பேர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்? எத்தனை பேருக்கு ஒப்புரவு அருளடையாளம் அருளினார்? என்னும் விவரங்களை நாம் அறிய முடிகிறது. (பேதகம் - மனவேறுபாடு 1 தன்மை வேறுபாடு 2 வஞ்சனை. அருளி, அயற்சொல் அகராதி ப.437). சீர்த்திருத்த கிறித்தவர்களது பேதகங்களை எதிர்கொள்ள அவர் இறையியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். தம் பராமரிப்புக்குரிய கிறித்தவர்கள் நலன் கருதியும் எழுதினார். வழிபாட்டு ஆலயங்கள் பல அவர் கட்டியுள்ளார்.
நம் ஆண்டவராகிய இயேசுவின் அன்னை மரியாவுக்குப் புதிய முறையில் வணக்கம் செலுத்தும் அணுகுமுறையை முனிவர் அறிமுகம் செய்தார். நற்செய்தியை அறிவிப்பதற்கு அது பேருதவியாக அமையும் என்று நம்பினார். கிறித்தவம் தழுவிய மக்கள் பாதுகாப்புடன் வாழ வழி பிறக்கும் எனவும் எண்ணினார். அதனால் அன்னை மரியாவின் ஆதரவும், அரவணைப்பும் வாய்ந்த உதவிபெற அன்னை வணக்கம் நிறுவி, அவ்வணக்கமுறை மக்களிடையே பரவச் செய்யத் தீர்மானித்தார். எங்கெல்லாம் திருக்கோயில்களை எழுப்பினாலும், அவற்றை அன்னைக்கே அர்ப்பணம் செய்தார். என்னவெல்லாம் தமிழ்ப் பாடல்கள் இயற்றினாரோ அவற்றின் மூலமாக அன்னை மரியாவின் புகழ்பாடினார். அன்னையின் பரிந்துரை ஆற்றலை எடுத்துணர்த்தினார்.
பெஸ்கி அடிகளார் நற்செய்தி அறிவிப்பதற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதுடன், நிறைவு பெறவில்லை. மக்கள் மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டினார் என்கிறார் பேராசிரியர். சூ. இன்னாசி. மக்களுக்கு எப்போதெல்லாம் இன்னல்கள், பிரச்சனைகள் என அறிய நேர்ந்தாலும், முனிவர் உடனடியாகத் தீர்த்துவைப்பதில் முனைப்பாகச் செயல்பட்டார். ஆவூர் மக்கள் பசுக்களைக் களவாடியதாகப் பழிபோட்டுக் குற்றம் சுமத்தப்பட்டபோது, மக்களுள் பெரிதும் மதிக்கப்பட்ட ஊர்த் தலைவர்களுடன் முனிவர் தொடர்பு கொண்டு, பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாதவாறு அவர்களைப் பாதுகாத்தார். அவரது மறைப்பணி அலுவல்களுக்கு அவர் உதவி பெற்று வந்தார். வேதியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு மடல் எழுதி, அவருடைய சேசுசபையின் உலகத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழறிஞர் பெஸ்கி அடிகளார்
திருத்தூதுப் பணியாளராக மேதைமையுடன் திகழ்ந்தவரான பெஸ்கி அடிகளார் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஓர் மறைத்தூதர் என்பதைவிடத் "தமிழ் அறிஞர்" என்றுதான் முதன்மையாக அறியப்பட்டிருந்தார். இந்தப் புலமை நலம் இருவகையானது. அறிவாராய்ச்சியில் சிறப்புற்றுத் தனது சொந்தப் பயன்பாட்டுக்காகத் தமிழ்மொழியைக் கற்று, தேர்ச்சி பெற்று, வித்தகரானது முதன்மையானது. தன்னுடைய சக மறைத்தூதுப் பணியாளர்களுக்குத் திறம்படக் கற்கச் செய்கிற கற்பிக்கும் திறமையில் சிறந்திருந்தமை இரண்டாவது. இதற்கான முனிவரது முனைப்பான அறிவு உழைப்பால் அவர் இலக்கண ஆக்கம் செய்த ஆசான், சதுரகராதி சமைத்த சமர்த்தர், பனுவல் எழுத்தாளர், தமிழ் எழுத்து வரி வடிவம் சீர்த்திருத்தியவர், வானியல் வாணர் எனப் பன்முகப் பல பரிமாண மேதையாக விளங்கினார்.
பேச்சுத்தமிழைப் பற்றி இலத்தீனில் ஓர் இலக்கண நூல் எழுதினார். அது தமிழ்-இலத்தீன் பேச்சுமொழி அகராதி என்று பெயர் பெறும். தமிழ் மொழியின் பெயர்-பொருள்-தொகை-தொடை என்னும் நான்குவேறு அமைப்புகளைப் பற்றிய சதுர அகராதியை உருவாக்கினார். இவ்வகராதி செந்தமிழ் மொழிக்கென்றே படைத்தார். இன்னொன்று போர்த்துக்கீசு - இலத்தீன் - தமிழகராதி என்பன.
சதுரகராதி அமைப்புப் பகுப்பில் முதலில் பெயரகராதியில் பெயர்ச்சொற்கள், அவற்றின் வகைச் சொற்கள் பொருள் விளக்க முறைகள் இடம் பெறுகின்றன. அதிலிருந்து வேறுபடுகிற வளர்ச்சியே பொருளகராதி, பொருள் விளக்கும்போது மேற்கொள்ளப்பெறும் முறைகள் இடம் பெறுகின்றன. செய்யுளின் தொடைப்பதங்கள் தனிச்சொற்களாகத் தொடையகராதி, செய்யுள் எழுதும்போது உதவுகிற முறையில் தொடையமைக்கத் துணையாகும் சொற்கள் இடம் பெறுகின்றன. தொகையகராதியில் அகர முதல் முறையில் 293 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
மொழி பெயர்ப்புச் செய்கிறவர் தருமொழி-பெறுமொழி புலமை பெற்றிருந்தாலன்றிப் பெறுமொழியில் படைப்பாக்கம் செய்தல் அரிது. பெஸ்கி அடிகளார் 208 திருக்குறள் அறநூலின் குறள் வெண்பாக்களை, மறைத்தூதுப் பணிபுரிவோர் படிக்கவும், மனத்துள் பதிக்கவும், பயன்படுத்தவும், அதன் நுட்பம் அறிந்து பாராட்டி மகிழவும் இலத்தீனில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், இலத்தீனிலிருந்து தமிழ் மொழிக்குத் திருப்பாடல் மற்றும் திருவெளிப்பாடு 9:1-12 திருவசனங்கள் மற்றும் திரிதெந்து (Trent) பொதுச்சங்கம் (திரிதெந்து விசுவாச அறிக்கை) நம்பிக்கை அறிக்கை ஆகியவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார். தமிழ் உயிரொலியின் வரி வடிவங்களில் குறில்-நெடில் ஆகியவற்றைச் சீர்த்திருத்தினார். உயிர்மெய் எழுத்துக்களில் எ+க் = கெ, ஏ+க் = கே,- ஒற்றைக்கொம்பு ‘b’, ‘n’ இரட்டைக் கொம்பு ஓ + க் = கோ போன்ற சீர்த்திருத்தங்களைச் செய்தார்.
ஒ-ஓ நெடில் கீழ்சுழி பெறுதல் மூலம் உணர்த்துதல் அவர் செய்த சீர்த்திருத்தமே. இவ்வாறு, இலக்கண-இலக்கிய-அகராதிப் படைப்பாக்கங்களில் மட்டுமல்ல; மொழியியல் வல்லுநராகவும் சிறந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் அவரது தமிழ், இத்தாலியம், போர்ச்சுக்கீசியம், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு ஆகிய பன்மொழி அறிவாற்றலை வியந்து பாராட்டினர்.
இந்தியாவில் பெஸ்கி அடிகளார் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆனால், அவர் படைப்பாக்கங்கள் செய்தவை 36 நூல்கள். தமிழறிஞர்கள் அவர் ஆக்கியன 27 நூல்களே என்று கருத்து வேறுபடுகின்றனர். சி. இராசமாணிக்கம் சேச., ஆ. ஜோசப் சே.ச ஆகியோரிலிருந்து வேறுபடும் பிறர் தரும் பட்டியல் வேறுபட்டது.
எட்டுச் செய்யுள் இலக்கியங்கள்
1. தேம்பாவணி
2. திருக்காவலூர்க் கலம்பகம்
3. அன்னை அழுங்கல் அந்தாதி
4. அடைக்கலமாலை
5. அடைக்கல நாயகிமேல் வெண்கலிப்பா
6. கித்தேரியம்மாள் அம்மானை
7. கருணாம்பரப் பதிகம் அல்லது தேவாரம்
8. வண்ணம் /வண்ணகலைகள் (சூ.இ)
உரைநடை நூல்கள் பத்து
1. பரமார்த்தகுருகதை
2. வாமன் சரித்திரம்
3. வேதவிளக்கம்
4. வேதியர் ஒழுக்கம்
5. பேதகமறுத்தல் (24 கொள்கைவேறுபாடுகள் சுட்டப்பெறுகின்றன)
6. லூத்திரினத்தியல்பு-‘லுத்தேரினத்தியல்பு’
7. திரு அவைக்குப் பொதுநிருபம், முற்றுப்பெறாத கையெழுத்துப் படிவம்) (கா.மீ)
8. திருக்கடையூர் திரு அவைக்கு எழுதிய நிருபம் - கடிதம்
9. ஞானஉணர்த்துதல்
10. ஞானக் கண்ணாடி
இலக்கண நூல்கள் நான்கு
1. தொன்னூல் விளக்கம்
2. செந்தமிழ் இலக்கணம்
3. கொடுந்தமிழ் இலக்கணம்
4. இலக்கணத் திறவுகோல்
அகராதிகள் மூன்று
1. சதுரகராதி
2. தமிழ்-இலத்தீன் (பேச்சுத்தமிழ் அகராதி)
3. போர்ச்சுக்கீசு-இலத்தீன்-தமிழ் அகராதி)
பதிப்பித்தவை
1. திருக்குறள் - பரிமேலழகர் உரை
2. திருக்குறள் - வீரமாமுனிவர் உரை
மொழிபெயர்ப்பு
208 திருக்குறள் வெண்பாக்களை இலத்தீனில் மொழி பெயர்த்துள்ளார். அவற்றைப் பேச்சுமொழி வடிவில் மறுவரைவு செய்துள்ளார். அண்மைக்கால ஆய்வுகளின்படி, இவற்றுக்கான ஆதாரம் இல்லை என்பர். ஆனால், “ஐரோப்பியர் தமிழ்ப்பணி” பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் “திருக்குறளில் தமக்கிருந்த புலமையோடு பெஸ்கி அதனை இலத்தீனில் மொழி பெயர்த்தார்” என்று அறுதியிட்டுப் பதிவுசெய்துள்ளார்.
அன்னை மரியின் பக்தன்
அன்னை மரியாவுக்காகவே நான்கு செய்யுள் இலக்கியங்களை முனிவர் இயற்றியுள்ளார். ஒரு நூலுக்கு மட்டும் உரை எழுதப்பட்டுள்ளது, மற்றவைக்கு உரை எழுதப் பெறவில்லை. ஆனால், இங்கும் அங்குமாக பேராசிரியர்களும் அறிஞர்களும் இந்தப் பாடல்கள் பற்றி கருத்துரைகள் எழுதியுள்ளனர். தமிழறிந்தவர்களால் இப்பாடல்களை வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்.
முடிவாக
ஓர் சிறந்த நம்பிக்கையாளர், மறைபரப்பாளர், மனித நேயம் கொண்டவர், உரையாடலின் மனிதர், பிறர் நலமுடன் வாழ பரிந்து பேசியவர், மக்களை கிறித்துவின்பால் கொண்டு வந்து அவர்களை நம்பிக்கையில் உறுதியோடு இருக்க ஞான ஒழுக்கத்தையும், இறைவனை தியானிக்கவும் கற்று கொடுத்தவர். கிறித்துவை நம்பியவர்களையும், நம்பாதவர்களையும் அன்போடு வழி நடத்தியவர். அதுமட்டும் இன்றி இயேசுவுக்காகவும், அவரின் நற்செய்திக்காகவும் தன் உயிரையே தந்திட ஏங்கியவர். ஏன் இன்னும் திரு அவை அவரை புனிதர் நிலைக்கு உயர்த்த முயற்சிக்கவில்லை என்ற கேள்வி இப்போது தமிழ் பேசும் மக்களிடமும், முனிவர் எழுதிய நூல்களை கற்றவரிடமும் இருந்து எழுகின்றது. தமிழுக்கு முனிவர் அழகூட்டியதால் தமிழக அரசு உலகப்புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் சிலை வடித்துபெருமைச் சேர்த்து, ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுக்கின்றது.
தனது மறைபரபுப்பப் பணியால் பல்லாயிரம் மக்களை கிறித்துவின்பால் கொண்டுவந்து, அவர்களை நம்பிக்கையில் நிலைகொள்ளச் செய்து, கிறித்துவக் கோட்பாடுகளையும், திரு அவையின் பாரம்பரியத்தையும், மரியாவின் மீதுகொண்ட பக்தியை கலாச்சார சூழலுக்கு ஏற்றார்ப் போல் கொடுத்தவர். கிறித்துவ கோட்பாடுகளை எளிதாக மக்களுக்கு புரியச்செய்து கிறித்துவ வாழ்வை வாழச்செய்தவர் முனிவர். இந்திய மற்றும் தமிழ் பாரம்பரியத்தில் முனிவர் என்றால் தவத்தில் சிறந்தவர், இறைவனில் ஒன்றிணைந்தவர், இறைவனில் ஒளிர்ந்து நின்றவர் என்று பொருள்படும். தமிழ் மக்களும் தமிழும், முனிவர் என்று அழைக்கும் போது, புனிதர் என்றே அழைக்கின்றனர். பெஸ்கி அவர்கள் வீரமாமுனிவர் என்று தமிழர்களால் அழைக்கப்படுவது இன்னும் சிறப்பே. வீரமாமுனிவர் எல்லாவித புண்ணியங்களையும் கொண்டு வாழ்ந்தவர் என்றுதான் பொருள்படும். இந்த தூய, புனிதமான சன்னியாசி உலக மக்களால் உலகளாவிய திரு அவையால் புனிதர் என்று அழைக்கப்பட வேண்டும். இதற்கு இயேசு சபையினரும், தமிழகத் திரு அவையாரும் உலகளாவியத் திரு அவையும் ஆவன செய்து, வீரமாமுனிவரை "புனிதர்" வீரமாமுனிவர் என்று அழைக்க வேண்டும். வீரமாமுனிவரின் 342 ஆவது பிறந்தநாளில் இதை கோரிக்கையாக வைத்து தூய ஆவியானவர் இதற்கு உந்துதல் தரும்படி கேட்போம்.