Namvazhvu
பயங்கரவாதம் பூச்சாண்டி காட்டும் பயங்கரவாதிகள்
Wednesday, 16 Nov 2022 12:41 pm
Namvazhvu

Namvazhvu

இந்தியத் துணைக் கண்டம் ஓர் அசாதாரண சூழலைச் சந்தித்து வருகின்றது. இந்தச் சூழமைவுக்கு யார் காரணியோ அவர்களே, இச்சூழமைவுக்கு உரமூட்டுகின்றனர்; வளர்க்கின்றனர்; காப்பாற்றியும் வருகின்றனர்.

அது என்ன? காஷ்மீர் மாநில விஜயத்தில் இந்நாட்டு உள்துறை அமைச்சர் பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறார். எல்லை தாண்டி நடத்தப்படும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருப்பதாகப் பேசுகிறார். பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதம் 35 விழுக்காடாக குறைந்து போனதாக மார்தட்டிக் கொள்கிறார். பயங்கரவாதம் நீங்கிய அமைதிப் பூங்காவாக காஷ்மீரை மாற்றிட மக்கள் துணை நிற்க கோருகின்றார்.

அண்மையில் இந்தியத் தலைநகர் புது தில்லியில் பயங்கரவாதத்திற்கு எதிரான தில்லி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை ஐக்கிய நாட்டு அவையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக தலை நகரில் கூடிய கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய யுக்திகளைப் பற்றி விவாதித்தது. இவ்வமர்வில் உரையாற்றிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜெய்சங்கர் பயங்கரவாதம் மனுக்குலத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆபத்து (Threat) என்று பேசினார். தீவிரவாதத்தை அல்லது பயங்கரவாதத்தை எள்முனை அளவு கூட நாம் சகித்துக் கொள்ளக் கூடாது (Zero tolerance) என்றார், இத்தீவிரவாதம் இன்றைய தொழில் நுட்பம் தரும் அனைத்து வசதிகளையும் மிகச் செம்மையாகப் பயன்படுத்தி, வேகமாக வளர்ந்து வருகிறது. பிரச்சார யுக்திகள் அதி தீவிரவாதம், சதி கருத்துக்கள் என்பன மூலம் சமூகம் ஒரு நிச்சயமற்ற சூழமைவைச் சந்தித்து வருகிறது. இப்பயங்கரவாதத்தை நம் அண்டை நாடான பாகிஸ்தான் எரியூட்டி வளர்த்து வருகிறது. (இந்து 30.10.22)

மேற்படி தில்லி பிரகடனம் தில்லியில் வெளியிடப்படுகிறது. எங்கே? உலகமெங்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் பெருகி வரும் நிலையில் ஐக்கிய நாட்டு அவையின் பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதத்தை எதிர் கொள்ளும் யுக்திகளை வகுக்க இந்தியாவை, இந்தியத் தலைநகரை தெரிவு செய்தது ஏன்? ஐக்கிய நாட்டின் ஏனைய உறுப்பு நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதம் கொடிய நோயாக பரவி வரும் நிலையில் பாரத தேசம் மட்டுமே அமைதியைத் தர முடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து கூட்டினரோ? வேதம் மூலம் சனாதனத்தையும், தர்மத்தையும் காத்து வரும் நாட்டில் பகைமைக்கு இடமில்லை, வெறுப்புக்கு இடமில்லை. மனிதரை பிளவு படுத்தும் கருத்தியல் இல்லை. ஒடுக்கலும், ஒதுக்கலும், பாகுபாடும் இவ்வுயர் கலாச்சாரத்தில் இல்லையென்று எவரோ எழுதி வைத்ததை அல்லது நாளும் வாய்கிழிய நீட்டி முழங்கும் மோடியின் பிரச்சாரங்களைக் கேட்டு அதனை அப்படியே நம்பியதன் விளைவுதான் ஐக்கிய நாட்டவை இப்படியொரு பிரகடனத்தை வெளியிட இந்தியத் தலைநகரை தெரிவு செய்ததோ?

பாரத நாடு எனும் பழம்பெருநாட்டில் சனாதனத்தைக் காத்தருள வேத விற்பன்னர்கள் தோன்றியதுண்டு, முனிகளும், ஞானிகளும் கடவுளராகப் போற்றப்பட்ட நாடும் இதுவே. இதே நாட்டில், வேத முனிகள் வாழ்ந்த நாட்டில் அன்பையும், சாத்வீகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் தன் வாழ்வியல் அறமாகக் கொண்டு வாழ்ந்த மகாத்மா எனும் மனிதரை அகிம்சை வழியிலா அழிக்கப்பட்டார்? பெரும்பான்மை மதத்தை சார்ந்த இம்மனிதர், சிறுபான்மையினர்க்கான மத நம்பிக்கையை ஏற்க துணிந்தார் என்பதால் பெரும்பான்மை மதவாத அடிப்படையில் ஒரு பகை இயக்கத்தை கட்டமைத்தவர் வீர சாவர்க்கர். வீர சாவர்க்கர் இந்துத்துவா என்ற பதத்தை உலகுக்கு உருவாக்கி தந்தவர். இந்துக்களே தேசம் என அழைக்கப்படலாயினர். இந்துவும், இத்தேசமும் ஒன்று என்று, இத்தேசத்துக்கு உரு கொடுத்தவர். இந்த சாவர்க்கர் இந்துக்களை அரசியல்படுத்த சொன்னார்? இவர்களை இராணுவ மயமாக்க அறிவுறுத்தினர். இராணுவ மயமாக்கும் இந்துக்கள் வேதம் போதிக்க தயார்படுத்தப்படவில்லை. இராணுவத்தினர் கைகளில் வேத புத்தகமா இருக்கும்? இந்துக்களை தேசமாக உருவாகப்படுத்திய சாவர்க்கர் இந்தியாவில் இந்து மதத்தில் தோன்றிய முதல் தீவிரவாதி, பயங்கரவாதி, இவரின் பகைக் கருத்தியல் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே காந்தியை உடல் ரீதியாக மட்டும் கொலை செய்யவில்லை, காந்தியின் அறக் கோட்பாடுகள் கொலை செய்யப்பட்டன. இவர் கொலையை நிகழ்த்திய கோட்சேயே முதல் இந்து பயங்கரவாதி (Terrorist) என்று, துணிச்சலாகச் சொன்னவர் பிரபல திரைப்பட நடிகரும், மனிதநேய மக்கள் மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள். இப்படியொரு உண்மையை தைரியத்தோடு அறிவித்த இவரின் நாக்கை துண்டிக்க அழைத்தவர் அன்றைய அண்ணா திமுக அரசின் அமைச்சராக இருந்த இராசேந்திர பாலாஜி. இந்தியா எனும் அமைதிப் பூங்காவில் தோன்றிய சாவர்க்கரும் அவர் வழிவந்த கோட்சேயும் இன்று இந்திய பெரும்பான்மைவாதிகளால் கொண்டாடப்படுவது பயங்கரவாதத்திற்கு வழங்கப் பெறும் அங்கீகாரம் ஆகாதா? அகிலம் போற்றும் காந்தியைச் சுட்டுக் கொல்ல காரணமாயிருக்கும் சாவர்க்கரும், கோட்சேயும் கொண்டாடப் படுகின்றனர். அந்தக் கொண்டாட்டத்தின் உள்ளடக்கம் பயங்கரவாதமில்லையா?

இந்துப் பயங்கரம்

மதத்தின் பெயரால் நாடு துண்டாடப்பட்டது என்பது உண்மை. மத அடிப்படையில் பாகிஸ்தான் அரசு உருவானது என்பதும் உண்மை. நாட்டுப் பிரிவினையின் போது எழுந்த மதக்கலவரங்களின் போது, இரு மதம் சார்ந்தோரும் கொல்லப்பட்ட செயல் மதமாச்சரியத்தின் விளைவு மட்டுமா? இதன் பின்னே தொக்கி நின்றது பயங்கரவாதமில்லையா? நாடு பெற்ற சுதந்திரத்தைக்கூட கொண்டாட முடியா நிலையில், கொல்கத்தா வீதிகளில் வலம் வந்த மகாத்மாவின் செயல் பயங்கரவாதத்திற்கு எதிரான வலுமிக்க செயலாகக் கருதப்படுகின்ற வேளை குஜராத்திலும், கந்தமாலிலும் அத்வானியின் ரத யாத்திரையிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது, மௌனம் காத்த கலாச்சார தேசியர்களை அமைதி விரும்பிகள் என்றழைக்கலாமா? பயங்கர வாதிகள் எனறு ஏன் நாமகரணம் சூட்டக் கூடாது.

பயங்கரவாதம் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல். மாந்தருக்கு எதிராக நிகழ்த்தப் பெறும் இக்கொலை நிகழ்வை எவர் செய்தாலும் மன்னிக்க முடியாது. மன்னிக்கவும் கூடாது. எல்லை தாண்டிய நிலையில் பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்தும் பயங்கரவாத நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கதே. பாகிஸ்தான் அரசின் தூண்டுதலில் நிகழ்த்தப்பெறும் பயங்கரவாத செயல்கள் ஒரு புறம் என்றால், பாகிஸ்தான், இந்தியா என்ற இரு நாடுகளுக்கு இடையே நிலவும் தீராப் பகையை சாதகமாக்கி, பயங்கர வாதக் குழுக்கள் செயல்படுவதைப் பார்க்கிறோம். இக்குழுக்கள் அவ்வப்போது காஷ்மீருள் புகுந்து, தாக்கிவருவதையும் அறிவோம்.

எல்லைத்தாண்டி நிகழ்த்தப் பெறும் வன்முறைத் தாக்குதல்களை நாம் ஏற்க முடியாது. வன்மையாகக் கண்டிக்கவே வேண்டும். அயல் நாட்டிலிருந்து நடத்தப் பெறும் தாக்குதலை கண்டிக்கும் வேளையில், இசுலாமியத் தீவிரம் என்று முத்திரை குத்தி, இந்திய இசுலாமியரை பயங்கரவாதிகளாகக் காட்டி வரும் இந்து மதவாதிகளின் துர்க்குணத்தை எப்படி புரிந்து கொள்வது. இசுலாமியரை இந்திய எதிரிகளாக, இந்தியக் கலாச்சார விரோதிகளாக, சாத்தான்களாக (Demonise) சித்தரித்து வரும் இந்திய இந்துத்துவ சக்திகள், இந்நடைமுறையில் பெரு வெற்றி பெற்றுள்ளனர் என்பதே உண்மை. இசுலாமியர் மீது திட்டமிட்டு வளர்க்கப்பெறும் முற்சார்புக் கருத்துகளும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியென்பதை மறுக்க இயலுமா? இந்தியாவின் மிகப்பெரிய மதச்சிறுபான்மையினராம் இசுலாமியர் மீது கட்டமைக்கப்படும் பொய்யான இவ்வடிவத்தின் விளைவு என்னவாயிருக்கும?

தீவிரவாதத்தின் உருவகமாக இசுலாமியரை காட்டி, சமூக பெருவெளியில் நாளும் அன்னியப் படுத்திவரும் பெரும்பான்மை மதவாதிகளின் செயல் பயங்கரவாதமில்லையா? இசுலாமிய தீவிரம் (Islamic Terror) எனும் வார்த்தையை மக்கள் சாதாரணமாக புழங்கும் வார்த்தையாக மாற்றிவிட்டமை பயங்கரவாதத்துள் அடங்காதா? வன்முறை எனும் பயங்கரவாதம் ஒற்றைப் பரிமாணமுடையதல்ல. வன்முறை வெறுமையிலிருந்து தோன்றாது. வன்முறைதான் வன்முறையின் வித்து, வன்முறைதான் வன்முறையின் விளைநிலம். இசுலாமியர் சிலர் முன்னெடுக்கும் தீவிரப் போக்கின் மூலமும் எங்கிருக்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த .சிதம்பரம் அவர்கள், மும்பையின் மலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பைப் பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்த போது, இந்து தீவிரவாதம் (Hindu terror) வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டு, மலேகானில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்து தீவிரவாதிகளே என்று குற்றம் சுமத்தினார். இக்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்தா, மலேகானிலும் இதற்கு முன் ஐதராபாத் இரயில் நிலைய குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளவர் குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்டத்தில் கிறிஸ்தவ பழங்குடியினர்க்கெதிரான தாக்குதலிலும் பங்கு கொண்டவர்.

விசுவ இந்து பரிஷத்தின் முக்கிய உறுப்பினர். இவரோடு கைதுசெய்யப்பட்ட சாத்வி எனும் பெண் துறவி, இப்போது போபால் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் வழக்கு முடியவில்லை. மலேகானில், குண்டு வைத்தவர்கள் இசுலாமியர் அல்லர், பெரும்பான்மை மதம் சார்ந்தவர்களே என்பதால், உள்துறை அமைச்சர் இந்துத்தீவிரம் பற்றிப் பேச வேண்டிய தாயிற்று.

நானூறு ஆண்டுகால வரலாற்றையுடைய பாபர் மசூதி இடிப்பு வெறும் ஒற்றை நிகழ்வா? இந்து வகுப்புவாத அமைப்புகள் தொடர்ந்து நிகழ்த்தி வந்த பரப்புரைகள், வரலாற்றுத்திரிபுகள், பாடப்புத்தகங்கள் மூலம் திணிக்கப்பட்ட பகைக் கருத்தியல்கள், தொடர் யாத்திரைகள் மேலும் பல அடையாள வழி கட்டமைக்கப்பட்ட பொய்மை மூலம், பயங்கரவாதம் வெற்றிபெற வளர்க்கப்பட்ட யுக்திகள். இந்த யுக்திகளின் அனைத்திலும் பயங்கரவாத சாயல் தொக்கி நிற்கும். தொண்ணூறுகளில், அத்வானி முன்னெடுத்த ரத யாத்திரை வெறும் ரத யாத்திரை அல்ல; இது ஒரு இரத்த யாத்திரை.

இந்த யாத்திரையின் தடம் பதித்த இடமெல்லாம் இரத்த ஆறு ஓடியது. இறை வடிவைத் தாங்கி நகரம் இரத்தம் இரத்தம் கக்கி சென்ற உச்சத்தில், கர சேவகர்கள் எனும் கடையர்களால் நானூறு ஆண்டு மசூதி தரை மட்டம்hனது. இடிபட்டது வெறும் கல்லும் மண்ணும் கூடிய கட்டடம் மட்டுமா? இடிபட்ட மசூதியின் மூன்று கோபுரங்களில் ஒன்று இந்திய மதச்சார்பின்மையை, மற்றொன்று ஜனநாயகத்தை, இன்னொன்று சமத்துவத்தை என்று வர்ணிப்பார் வி.பி.சிங் அவர்கள். இந்திய அரசமைப்பின் முக்கிய கூறுகளை தகர்க்க வழிகோலிய இந்நிகழ்வு சமாதான சக வாழ்வுக்கான அடையாளமா? அல்லது பயங்கர வாதத்தின் உச்சமா?

மசூதி இடிப்பு இந்திய சமூக வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. இசுலாமியரின் மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் மதவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, இசுலாமிய சிறுபான்மையினர் இந்நாட்டின் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து குப்புற தள்ளப்பட்டு அன்னியராயினர். இவர்களது அடையாளம் களவாடப்பட்டது. இன்றைய ஆளும் சக்திகளோடு சமரசம் செய்தாலன்றி வாழ இயலாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இரண்டாந்தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இவர்கள் இந்நாட்டில் வாழ்தல் என்பது பெருத்தவர்களின் கருணையாலன்றி வேறு இல்லை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்நிலை, இவ்விழிநிலை தொடர்ந்து இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதத்தின் நீட்சியல்லவா?

அண்மையில் பரிதாபத்தில் நடந்த அரசுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் என்ன சொன்னார்?

தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் கடுமையாகட்டும் நாட்டில் செயல்படும் நக்சல் பாரிகளை எதிர் கொள்ள நம் போலீசார் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். நக்சல் பாரிகள் தங்கள் பேனா முனையால் மட்டுமின்றி, குண்டுகளாலும், இளைஞர்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் தம் பணிக்கு அந்நிய நாட்டு நிதி பெறுகின்றனர். இத்தீய சக்திகள் இந்நாட்டில் காலூன்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில், இந்நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் அழிக்க கங்கணம் கட்டியுள்ளனர்.(இந்து 29.10.22)

மோடியின் குற்றச்சாட்டிற்கு ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த பதிலைத் தருவது இங்கு பொருத்தமாக இருக்கலாம்.

2018-2020 ஆம் ஆண்டுகளில் 4690 பேர் உபாவில் (UAPA) கைது செய்யப்பட்டனர். ஆனால், இவர்களுள் மூன்று சதவீதத்தினர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர் பிரதமர் கூறியது சரியே. உபா (UAPA) எனும் சட்டம் இவரின் அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளது. இவ்வதிகாரத்தின் மூலம் யாருக்கும் எந்த பதிலையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இவர் தன்னிச்சையாய் செயற்பட முடியும். ‘உபா ஒரு தீய (evil) சட்டம். இச்சட்டத்தின் மூலம் தீவிரவாதத்தை ஒடுக்கி விட முடியாது. (இந்து 29.10.22)

நாளும் நாட்டில் நிகழ்த்தப்பெறும் அனைத்து அரசு நடவடிக்கைகளிலும், பயங்கரவாத சாயல் தெரிகின்ற போது, பயங்கரத்தின் சூத்திர தாரிகளே பயங்கர வாதப் பூச்சாண்டியைச் காட்டுவது வேடிக்கை இல்லையா?