Namvazhvu
பொதுக்காலம் 34 ஆம் ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா 2சாமு 5:1-3, கொலோ 1:12-20, லூக்கா 23:35-43
Thursday, 17 Nov 2022 07:06 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவர் இயேசு ஒருவரே அரசர்களுக்கெல்லாம் பேரரசர் என்ற நம்பிக்கையை இப்பெருவிழாவானது நிலை நாட்டுகிறது. பொதுவாக, திருவருகைக் காலத்தை தொடங்குவதற்கு முன், பொதுக்காலத்தினுடைய கடைசி ஞாயிறை, கிறிஸ்து அரசர் பெருவிழாவாக, தாயாம் திரு அவையானது கொண்டாடி மகிழ்கின்றது. கடவுள் நிலையில் இருந்த அவர் நமக்காக அடிமையானார் என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். நமக்காக அனைத்தையும் துறந்த இறைவனை நாம் எதற்காக பேரரசர் எனப் புகழ்ந்து விழா எடுக்கிறோம். இதற்கான காரணம் என்ன? முதல் உலகப்போர் முடிவுற்ற நேரத்தில் உலகநாடுகள் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் தங்களின் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, எந்த நாடு சிறந்தது, எந்நாட்டு மக்கள் உயர்ந்தவர்கள், எந்நாட்டு அரசர் அல்லது அதிபர் வலிமையானவர் என்பதை பிற நாடுகளுக்கு காட்டுவதற்காக மீண்டும் போர் மற்றும் வன்முறையை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தார்கள். இத்தருணத்தில் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், மனித சக்திகளுக்கும், அதிகாரங்களுக்கும் ஓர் எல்லையிருக்கிறது. ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் எல்லையேயில்லை. ஏனெனில், அவர் என்றும் அழியாமல் ஆட்சி செய்யும் பேரரசர். அரசர்களுக்கெல்லாம் பேரரசரான இவரில் நம்பிக்கை கொண்டு, இவரைக் கொண்டாடி வழிபடுவோம் என்று, 1925 ஆம் ஆண்டு, தனது சுற்றுமடல் வழியாக சிதறி சென்ற மக்களை மீண்டும் ஒன்று சேர்த்தார்.இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை கிறிஸ்து அரசர் பெருவிழாவினை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். அமைதியின் அரசராம், இரக்கத்தின் அரசராம், அன்பின் அரசராம் கிறிஸ்து அரசரின் ஆட்சியில் பங்குபெற்றிட இத்திருப்பலியில் பக்தியோடு இணைந்திடுவோம்.

முதல் வாசக முன்னுரை

அரசர் சவுல் இறந்ததும், இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி தாவீதிடம் வந்து, இனிமேல் நீரே எங்களை அரசாள வேண்டும். எங்களுக்கு வழி காட்ட வேண்டுமென்று சொல்லி, தாவீதை அரசராக அருட்பொழிவு செய்ததை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் அனைவரும் தந்தை கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், அவர் தமது திருமகன் வழியாக நம்மை உரிமை வாழ்வுக்கு அழைத்து வந்திருக்கிறார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எம்மை படைத்தவரே! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், தங்களை ஆள்பவர்களாக எண்ணிக்கொள்ளாமல், மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் என்றுணர்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மைக் காப்பவரே! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் அனைவரும், போர் மற்றும் வன்முறைகள் மூலம் யார் பெரியவர் என்று காட்டுவதை நிறுத்திவிட்டு, உம் திருமகன் கிறிஸ்து ஒருவரையே அரசராக ஏற்றுக் கொண்டு வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எம்மை வழிநடத்துபவரே! எங்கள் குடும்பங்களில், எங்களின் அதிகாரங்களை மற்றவர்கள் மீது திணித்து வாழாமல், ஒருவரை ஒருவர் அன்புசெய்து பணிவோடு வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைத்துலகோரின் ஆண்டவரே! நாடுகளில் பெருகிவரும் மதவெறுப்பு போக்குகள் குறையவும், உம் திருமகன் இயேசுவைப் போல அனைவரையும் அன்பு செய்து நாங்கள் கனிவோடு வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமுள்ளவரே! உம் திருமகன் கிறிஸ்துவை தங்கள் கடவுளாகவும், அரசராகவும் ஏற்றுக்கொள்ளாத மக்களை ஆசீர்வதித்து, அவர்களின் நம்பிக்கையை நீர் ஆழப்படுத்துவதன் மூலம் உமது இறையரசை நோக்கி அவர்கள் வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.