Namvazhvu
துருக்கியின் இஸ்தான்புல் நகர் உக்ரைனில் இடம்பெறும் ஏவுகணை தாக்குதல்கள் தவிர்க்கப்பட...
Friday, 18 Nov 2022 07:19 am
Namvazhvu

Namvazhvu

உக்ரைனில் இடம்பெறும் ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அந்நாட்டில் அமைதி ஏற்படவும், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதனன்று கூறியுள்ளார்.

நவம்பர் 16, புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் குறித்த பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின்னர், உக்ரைனின் போர், மற்றும் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் நினைவுகூர்ந்தார்.

உக்ரைனில் நடத்தப்பட்டுள்ள சக்திமிக்க ஏவுகணை தாக்குதல்கள், அப்பாவி குடிமக்களின் உள்கட்டமைப்புகளுக்குப் பெருமளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன என்ற செய்திகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, தொடர்ந்து போரை நடத்தவேண்டும் என்று விரும்பும் மனிதர்களில் மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று ஆண்டவரை மன்றாடுவோம் என திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.

மக்களில் அமைதி குறித்த ஆவல் மேலோங்கவேண்டும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, போரினால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனில் இடம்பெறும் எல்லாவிதமான தாக்குதல்கள் நிறுத்தப்படவும், இடைக்கால போர்நிறுத்தம், மற்றும், உரையாடலுக்கான பாதை திறக்கப்படவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

துன்பத்திலும், அமைதிக்கான நம்பிக்கையிலும் உக்ரேனியர்களுக்கு ஆறுதல், மற்றும், மனஉறுதியை ஆண்டவர் அளித்தருளுமாறு இடைவிடாமல் செபிப்போம் என்றும், ஆண்டவர் நமக்கு விரைவாய் உதவிபுரிய வேண்டும் என்றும் அவரிடம் வேண்டுவோம்  என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் நகரங்களில் ஒரே இரவில் இரஷ்யா நடத்திய பல ஏவுகணைத் தாக்குதல்களில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளின் உள்கட்டமைப்புகளும் மின்சக்தி நிலையமும் கடுமையாய்ச் சேதமடைந்துள்ளன எனவும், உக்ரைனின் போலந்து நாட்டு எல்லைப் பகுதியில், இரு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன எனவும்  பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேலும், நவம்பர் 13, ஞாயிறன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்தோர், அதில் காயமடைந்தோர் மற்றும், அவர்களின் குடும்பங்களையும் திருத்தந்தை நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபித்தார்.