Namvazhvu
அரசியல் பழகு
Thursday, 20 Jun 2019 06:30 am

Namvazhvu

கிறிஸ்தவர்களே! தயவுசெய்து அரசியல் பழகுங்கள். கல்வி, மருத்துவம், அறிவியல், நிர்வாகம், வங்கி, தொழிலாளர் நலன், சமூகப் பணி, விண்வெளி, இராணுவம், விளையாட்டு, இந்திய ஆட்சிப் பணித்துறை, நீதித்துறை, காவல்துறை, கணிணி மென்பொருள், ஊடகத்துறை, சினிமா,  ஆராய்ச்சி, கடல்வழி, வான்வழி, தரைவழி போக்குவரத்துகள், உயிரி தொழில்நுட்பம் என கிறிஸ்தவர்கள் கால் பதிக்காத, முத்திரை பதிக்காத துறைகளே இல்லை. ஆனால் அரசியல் தவிர. 
கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை, குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் என்றாலே எட்டிக்காய் கசப்பு கசக்கிறது. அரசியல் என்றாலே சற்று அல்ல, முற்றும் ஒதுங்கி விடுகின்றனர். நமக்கேன் வம்பு? என்று பதுங்குகிற அவலம். ‘இது நம்மால் இயலாது’ என்று விட்டோத்திகளாக விலகுகிற நிலை. டீக்கடை பெஞ்சில் பேசுகிற அரசியலை, வீட்டுக்குள்ளே நுழைய விடுவதில்லை. தமிழ்ச் சமூகத்தில் கிறிஸ்தவப் பெண்கள் கல்வியில் பாராட்ட தகுந்த நிலையை எட்டிப் பிடித்திருந்தாலும் ஆணாதிக்கச் சூழலில் அரசியலைப் பொருத்தவரை அப்படியே பின் தங்கி விடுகின்றனர். கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில கல்வி பயின்ற பிற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம் ஒரு கட்சியின் நிறுவனர்களாக கோலேச்சும் நிலையில் அதே கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற கிறிஸ்தவ மாணவர்கள் அரசியல் என்றாலே ஒதுங்கி நிற்கின்றனர். ஜார்ஜ் ஜோசப் நேசமணி, லாசர், சைமன் லூர்தம்மாள், அடைக்கலராஜ், பீட்டர் அல்போன்ஸ் போன்ற காங்கிரஸ் காலத்து கத்தோலிக்க அரசியல்வாதிகளையே நம்மால் அடையாளம் காட்ட முடிகிறதே ஓழிய, ஞ.கூ. பன்னீர்செல்வம் போன்ற நீதிக்கட்சி காலத்து உதாரணப் புருஷர்களையே விரல் நீட்ட முடிகிறதே ஓழிய அரசியலில் சுயமாக, தன்மானத்தோடு, சுதந்திரத்தோடு, எவ்விதமான முற்சார்பு அரசியல் கொள்கைகளுமின்றி, தனித்தக் கொள்கையுடன் தனித்துவத்தோடு விளங்கக் கூடிய, சுயம்புவாக கிறிஸ்தவர்களைத் தாண்டி பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான, நல்ல பெயர்பெற்ற கிறிஸ்தவ அரசியல்வாதிகளையோ, கிறிஸ்தவ அரசியல் கட்சியையோ நம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை.
 அரசியல் என்றாலே ஒரு வெறுப்பும், அரசியல் என்றாலே கட்சி அரசியல் என்ற மோலாதிக்க மனநிலையும் அரசியல் என்றாலே பகையுணர்ச்சியும் ஊழலின் எச்சமும்தான் நம்முன் நிழலாடுகின்றனவே ஒழிய, அது ஒரு புனிதப்பாதை, சமுதாயத்தின் அடித்தளம், சமூக அமைப்பின் அசைக்கமுடியாத அங்கம்... அனைத்துத் துறைகளின் மையப்புள்ளி என்ற முற்போக்கானப் பார்வை நம்மிடம் இல்லை. ஒரு காயிதே மில்லத்தைப் போல.. நம்மிடம் அரசியல் பெருந்தலைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நிழலாகவும் நீட்சியாகவும் அவர்களின் அடியொற்றி அரசியல் வாதிகளை நாம் உருவாக்கவில்லை; அல்லது வளர்த்தெடுக்கவில்லை. 
பொதுக்குருத்துவத்தில் பங்கேற்கும் திருமுழுக்குப்பெற்ற நாம் அனைவருமே,  பணிக்குருத்துவத்தையும் குருத்துவத்தின் நிறைவையுமே சார்ந்து இருப்பதால்.. இந்தத் தொய்வு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அல்லது ஒரு கக்கனைப்போல.. ஒரு காமராசரைப் போல.. தியாகச் சிந்தனையோடு இனி இருப்பது கடினம்; அரசியல் அதற்கான அறத்தை இழந்து நிற்கிறது. எனவே புறக்கணிப்போம் அல்லது பங்கேற்காதிருப்போம் என்று கிறிஸ்தவம் தனக்குத்தானே கடிவாளம் போட்டுக்கொண்டதுகூட ஒரு காரணியாக இருக்கலாம். நேருவும் காந்தியும் அம்பேத்கரும் கட்டிக்காத்த மத சார்பின்மைக்கு ஒருபோதும் சேதாரம் ஏற்படாது என்று இறுமாந்திருந்ததும் கிறிஸ்தவர்கள் அரசியலை தூரமாக வைப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.  ஆனால் இனியொரு விதி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. 
இந்தியாவில் சிறுபான்மையினருள் பெரும்பான்மையினராக உள்ள முஸ்லீம்கள் ஜின்னா வழியிலும் காயிதே மில்லத் பாணியிலும் இந்திய அளவில் அரசியல்படுத்தப்பட்டதால் இயல்பாகவே அவர்களிடம் அரசியல் ஆர்வம் உள்ளது. அரசியல் பங்கேற்பும் பங்களிப்பும் உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினரான கிறிஸ்தவர்கள் தங்களை அரசியல்படுத்துவதில் முற்றிலும் பின்தங்கியுள்ளனர். கேரளாவைப் போல, கோவாவைப் போல அல்லது வட கிழக்கு மாகாணங்களைப் போல முற்றிலும் நேர்மையான அரசியலை கிறிஸ்தவர்கள் கையிலெடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் திராவிடத்தில் நீர்த்துபோய், (காங்கிரசின்) தேசியத்தில் கரைந்துபோய் அடையாளமிழந்து நிற்கின்றனர். 
பாகிஸ்தான் இருப்பு, பங்களாதேஷ் போர், காஷ்மீர் பிரச்சினை, அயோத்தி மசூதி இடிப்பு, மும்பை கலவரம் என ஒன்று மாற்றி ஒன்று, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முஸ்லீம்களை மதரீதியாக ஒன்று சேர்த்தே வந்துள்ளது.  மத்தியில்  வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க. பதவியேற்ற நாள்முதலே சிறுபான்மைவாதம் - பெரும்பான்மைவாதம் பேசுபொருளாகிவிட்டது. இன்றைய இந்திய அரசியலின்
கருப்பொருளும் அதுதான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திணிக்கப்பட்ட கந்தமால் கலவரம் கிறிஸ்தவர்
களை அணியமாக்கினாலும் இன்னும் அது ழுழுமை
யடையவில்லை. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கோவாவிலேயே பாஜக தொடர்ந்து பதவியேற்கிற போது கிறிஸ்தவர்களை அரசியல்படுத்துவது என்பது சற்று மலைப்பாகிபோனது. 
கடந்த இருபது ஆண்டுகளாக விழித்துக்கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைமை, குறிப்பாக ஆயர் பெருமக்கள், கிறிஸ்தவர்களை அரசியல்படுத்துவதற்கு கடுமையாக முயற்சியை மேற்கொண்டனர். பொதுநிலை
யின அரசியல் தலைவர்களை அடையாளப்படுத்தினர். பொதுநிலையினருக்கான அரசியலை வலிமைப்படுத்தினர். அந்த வகையில்தான் "கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம்" தமிழக ஆயர்பேரவையின் அரவணைப்பில் (2008)பிறந்து, இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ என்ற அடையாளத்துடன் பிரிவினைச் சபையின் தலைவர்கள் அரசியலில் திமுக-அதிமுக என்ற கட்சிகளின் தலைமையில் தேர்தல் சமயத்தில் ‘மேடை அரசியல்’ செய்தாலும் விழாக்காலங்களில் முஸ்லீம்களைப் போல (நோன்பு அரசியல்)ஆண்டுக்கொருமுறை (கிறிஸ்மஸ்) கொண்டாட்ட அரசியல் செய்தாலும் அவர்களால் முழுமையாகப் பரிணமிக்க முடியவில்லை.
இந்தியா  சுதந்திரம் பெற்றது முதல் கிறிஸ்தவர்களை அரசியல்படுத்தாத காரணத்தால் திராவிட அரசியலிலும் சாதிய அரசியலிலும் அவர்கள் கரைந்து போய் உள்ளனர்.  எனவே இன்றைய காலக்கட்டத்தில் வளரும் புதிய கிறிஸ்தவ இளந்தலைமுறையை அரசியல்படுத்தி வலிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.  கிறிஸ்தவர்களை சாதிய ரீதியாக அரசியல் கட்சிகள் பாகுபடுத்தினாலும் அல்லது சாதிய அமைப்புக்குள் கிறிஸ்தவம் சிக்குண்டியிருப்பினும் இனி காரணங்களை ஆராய்ந்திடாமல் நம்மை நாமே ‘கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம்’ என்னும் பதாகையின் கீழ் அரசியல்படுத்திக் கொள்ள வேண்டும்.  தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து அங்கிகரிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ அரசியல் கட்சிகளையும் அடையாளம் காண வேண்டும். லெட்டர்பேடு இயக்கங்களைக் களையெடுக்க வேண்டும். 
அன்பியங்களில் அரசியல் பழக வேண்டும். பங்குப்
பேரவைகளில் தலைமைத்துவத்தைத் திணிக்க
வேண்டும். பொதுவெளியில் பிற துறைகளில்  வெற்றி பெற்ற கிறிஸ்தவர்களை நாம் பாராட்டிக் கொண்டாட வேண்டும். கிறிஸ்தவம் சாதியத்தைப் புதைத்து அரசியலை வளர்க்காவிட்டால் அது மதச்சார்புள்ள இந்தியாவில் தோற்றுப் போக நேரிடும். அரசியல் பழக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அணியமாவோம். பாராளுமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களாக அணிவகுப்போம். வாக்கை
விற்காமால் வாக்குரிமையைப் பயன்படுத்தி ஐனநாயகத்தின், மதச்சார்பின்மையின் கைகளை வலிமைப்படுத்து வோம். (மேமிகு கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களின் கடிதத்தைப் படியுங்கள்)