மறையுரைக் குறிப்பு 1
(திருத்தந்தை பிரான்சிஸ்,
மூவேளை செபம், 1 டிசம்பர் 2019)
ஆண்டும், ஆலயமும், விழித்திருத்தலும்
புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகின்றோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், “இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும். எல்லாக் குன்றுகளுக்கும் மேலாய் உயர்த்தப்படும். மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்” (எசா 2:2) என, இறைவாக்குரைக்கிறார் எசாயா. மக்களினங்கள் இணைந்துவரும் மற்றும் சந்திக்கும் இடமாக ஆலயம் முன்நிறுத்தப்படுகிறது. தன் மனுவுருவாதலுக்குப் பின்னர் இயேசு, தம்மையே உண்மையான ஆலயம் என முன்மொழிந்தார். ஆக, எசாயாவின் காட்சி இறைவனின் வாக்குறுதியாகவும், அது இயேசுவில் நிறைவேறுவதாகவும் உள்ளது. கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை இன்று நாம் பெறவேண்டும். நீதிக்கான வேட்கை கொள்பவர்கள் ஆண்டவரின் வழிகளைப் பின்பற்றுவதன் வழியாகவே, அதைப் பெற்றுக்கொள்ள முடியும். தங்களுடைய தீய வழிகளைப் பின்பற்றுவோர் பாவத்தையே கொணர்கின்றனர். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்த வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்மை விழித்திருக்க அழைக்கிறார் இயேசு (மத் 24:42). விழித்திருத்தல் என்பது, கண்களைத் திறந்திருப்பது அல்ல; மாறாக, விடுதலைபெற்ற இதயத்துடன், சரியான திசையை நோக்கி, நம் கண்களைத் திருப்பி, கொடுப்பதற்கும், பணிசெய்வதற்கும் தயாராகக் காத்திருப்பது. நாம் விழித்தெழ வேண்டிய தூக்கங்கள் எவை? கண்டுகொள்ளாத்தன்மை, தற்பெருமை, உறவுகளுக்கு நம்மையே மூடிக்கொள்ளும் மனநிலை, மற்றவர்களுக்குப் பொறுப்பேற்காத உளப்பாங்கு, தேவையில் உள்ளவர்களைக் கண்டுகொள்ளாத நிலை ஆகியவையே. விழித்திருத்தல் என்பது, தேவையில் இருப்பவர்கள் கேட்பதற்கு முன்னரே அவர்களுக்கு உதவுகின்ற தயார் நிலையையும் குறிக்கிறது.
நம் சிந்தனைக்கு : (அ) இத்திருவழிபாட்டு ஆண்டுக்கென நான் எடுக்கும் வாக்குறுதி என்ன? ஆன்மீக வாழ்வு வளர்ச்சிக்கு இப்புதிய ஆண்டை நான் எப்படிப் பயன்படுத்திக் கொள்வேன்? (ஆ) இயேசுவின் அன்றாட வருகையை நான் அறியாவண்ணம் வாழக் காரணங்கள் எவை? (இ) இயேசு என்னும் ஆலயத்தை நோக்கிய என் வாழ்க்கைப் பயணம் எந்த நிலையில் இருக்கிறது? அந்த மலைப் பயணத்தில் நான் எதிர்கொள்ளும் தடைகள் எவை? (ஈ) நான் என் அயலாரின் தேவைகளுக்கு விழித்திருக்கிறேனா?
மறையுரைக் குறிப்பு 2 (திருத்தந்தை பிரான்சிஸ்,
மூவேளை செபம், 27 நவம்பர் 2016)
அன்றாட வாழ்க்கையும், ஆண்டவரின் வருகையும்
அன்றாட வாழ்க்கையின் நடுவே, ஆண்டவரின் வருகை நடந்தேறுகிறது என மொழிகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்கு முன்னர் மக்களின் வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதில் - உண்பது, குடிப்பது, பெண் எடுப்பது, பெண் கொடுப்பது - அவர்கள் கருத்தாய் இருக்கின்றனர். ஆனால், திடீரென ஒரு நாள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அவர்கள் அழிந்து போகின்றனர். பெரிய ஆபத்துகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் நடக்கும் முன்பும், ஒரு மாதிரியான அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கையில் நாம் இருக்கிறோம். அன்றாடப் பணிகள் மற்றும் பயணங்களில் மும்முரமாய் இருக்கிறோம். திடீரென வாழ்க்கை தலைகீழாகத் தடம் புரள்கின்றது. நற்செய்தி வாசகம் நம்மை அச்சுறுத்தவில்லை. மாறாக, வாழ்வின் மறுபக்கத்திற்கு நம் கண்களைத் திறக்கின்றது. அந்த மறுபக்கம் குறித்த பார்வையே நம் வாழ்க்கையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதுடன், அன்றாட வாழ்க்கையை நன்றாகவும், பயனுள்ளதாகவும் வாழ நம்மைத் தூண்டுகிறது. எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ, அதை அதை அப்போது செய்யவும், வாழ்வின் முதன்மையானவற்றை, முதன்மையற்றவை ஆக்கிரமித்துக் கொள்ளா வண்ணம் காத்துக் கொள்ளவும் அறிவுறுத்துகிறது. நம்மைச் சந்திக்க வருகின்ற ஆண்டவரோடு நாம் கொள்ளும் உறவே ஒவ்வொன்றைப் பற்றிய புதிய புரிதலை நமக்குத் தருகிறது.
இந்தப் புரிதலைப் பெறுகின்ற நாம், மயக்க நிலையிலிருந்து எழுகின்றோம். இந்த உலகின் பொருள்கள் நம்மைக் கட்டுப்படுத்தாதபடி விழித்துக்கொள்கிறோம். ஆனால், அவை நம்மைக் கட்டுப்படுத்துமாறு அவற்றுக்கு நம்மையே நாம் கையளித்தால் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ளத் தவறிவிடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாள் அக்கறையும், ஆண்டவரின் வருகை என்னும் அக்கரை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும். அந்த நேரத்தில், ‘இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார். மற்றவர் விடப்படுவார்’ (மத் 24:40). அவர் எந்த நேரம் வருவார் என்று நமக்குத் தெரியாததால், அவரோடு வழி நடக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நம் இதயத்தின் எல்லைகள் இத்தவக்காலத்தில் விரிவு பெறட்டும். அன்றாட வாழ்வு தரும் புதுமை மற்றும் புத்துணர்ச்சியை நாம் பற்றிக் கொள்வோம். உறுதியானவை என நாம் கருதுபவற்றையும், நம்மையே அடிமையாக்கும் எண்ணங்களையும் விடுப்போம். ஏனெனில், ஆண்டவரின் வருகை பற்றிய நேரம் உறுதி செய்யப்பட இயலாதது. உறுதியற்ற நிலையில் நம்மை எதிர்கொள்ளும் அவர் வாழ்வின் அழகானவற்றை நமக்குக் காட்டுகிறார்.
நம் சிந்தனைக்கு : (அ) நாளின் ஒவ்வொரு பொழுதையும் கருத்தாய் வாழ நான் கற்றுள்ளேனா? (ஆ) என் வாழ்வின் முதன்மைகள் எவை? அவற்றை நான் சரியான நிலையில் வைத்துள்ளேனா? (இ) என் பொருள், உறவு, பணி போன்றவை போதும் என நினைத்து, அனைத்தையும் உறுதியாக்கிக் கொள்ள உழைந்து சோர்வடைகின்றேனா?
மறையுரைக் குறிப்பு 3 (திருத்தந்தை பிரான்சிஸ், மூவேளைசெபம், 1 டிசம்பர் 2013)
புதிய பயணமும், இலக்கும், எதிர்நோக்கும்
புதிய திருவழிபாட்டு ஆண்டில் இறைமக்களாகிய நாம் புதிய பயணத்தைத் தொடங்குகின்றோம். இப்பயணம் பணியாக மலர்ந்து, அனைத்து மனிதர்களையும் சென்றடைகின்றது.
ஆனால், நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம்? நம் பயணத்தின் பொது இலக்குஎன்ன? ‘ஆண்டவரின் வழிகளில் நாம் நடப்போம்’ என்று, புதிய பாதையை மொழிகின்ற எசாயா, நம் இலக்காக ஆண்டவரின் மலை இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். எருசலேம் இறைவனின் திருமுகத்தின், அவருடைய திருச்சட்டத்தின் அடையாளமாக இருந்தது. புதிய எருசலேம் ஆலயமாகத் தம்மையே முன்மொழிகிறார் இயேசு. மேலும், இறுதி நாள்களில் போர்க் கருவிகள் அனைத்தும் தொழில் கருவிகளாக மாற்றம் பெறும் என்றும், இறைவாக்குரைக்கின்றார் எசாயா. அந்த நாள் மிகவும் அழகான நாளாக இருக்கும். ஏனெனில், மனிதர்கள் ஒருவர் மற்றவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, வளப்படுத்தத் தொடங்குவர். அத்தகைய அமைதியான நாளை எதிர்நோக்குதல் நலம்.
இப்பயணம் ஒருபோதும் முடிவுக்கு வருவதே இல்லை. ஒவ்வொருநாளும் இப்பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு நாளும் நாம் அடைய வேண்டும். நாம் கொண்டிருக்கும் எதிர்நோக்கு நமக்கு ஏமாற்றம் தருவதில்லை.
நம் சிந்தனைக்கு : (அ) என் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு என்ன? (ஆ) நான் பேசும் சொற்கள், என் செயல்கள் ஆகியவை கூடச் சில நேரங்களில் போர்க் கருவிகள் போல இருக்கலாம். அவற்றை நான் தொழிற்கருவிகளாக மாற்றுவது எப்படி? (இ) என் வாழ்வின் எதிர்நோக்கு என்னும் திரி அணைந்து போகிறதா? என் வாழ்வின் தேக்க நிலைகண்டு நான் சோர்வடைகின்றேனா?
நிறைவாக,
‘உறக்கம்’ என்னும் உருவகத்தை நம் வாழ்க்கை நிலைக்கப் பயன்படுத்துகின்ற பவுல் (இரண்டாம் வாசகம்), நாம் எழ வேண்டிய கட்டாயத்தையும், இரவுக்குரிய செயல்களை விடுத்து, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களையும் அணிந்து கொள்ள நம்மை அழைக்கின்றார். பகலில் நடப்பது போல, மதிப்புடன் நடக்கவும், ஊனியல்பின் செயல்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகின்றார்.
இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கிறது. திரியை ஏற்றும் நாம் இயேசு கிறிஸ்துவை, அவரின் மதிப்பீடுகளை, அணிந்து கொள்வோம்.
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்னும் அழைப்பிற்கேற்ப திருப்பாடல் ஆசிரியர்தான் அகமகிழ்ந்ததாக மொழிகிறார் (பதிலுரைப்பாடல், திபா 122). புதிய திரு வழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் உதடுகளிலும், உள்ளங்களிலும் இதே மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.
திருவருகைக் கால வாழ்த்துக்களும், செபங்களும்!