Namvazhvu
நல்லதோர் மறையுரை செய்வோம் – 1 ஒரு கருத்து! ஓர் உணர்ச்சி! ஓர் உருவகம்!
Monday, 28 Nov 2022 10:07 am
Namvazhvu

Namvazhvu

முன்னுரை

எழுச்சியுரைகள் எல்லா சமூகங்களின் வாழ்விலும் சிறப்பிடம் பெறுகின்றன. சில எழுச்சியுரைகளால் நாடுகள் அல்லது மக்களினங்களின் வரலாறுகளே தடம் மாறியது உண்டு. எடுத்துக்காட்டுகளாக, இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்துப் படைகள் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்தபோது, "ஒரு போதும் நாம் சரணடைய மாட்டோம்” என வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய வீர உரையையும், இந்தியா விடுதலைபெற்ற நடு இரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய ‘விதியை எதிர்கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஒரு காலம், இடம் குறித்தோம்” எனும் விழிப்புரையையும் 1965 ஆம் ஆண்டு, அமெரிக்கக் கறுப்பு இன மக்களின் சம உரிமைப் போராட்டத்தின்போது, மார்ட்டின் லூதர் கிங் முழங்கிய “நான் ஒரு கனவு காண்கிறேன்” எனும் சிறப்புரையையும் குறிப்பிடலாம்.

அதுபோலவே, சிறிய - பெரிய நிறுவனங்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்கள் என்பவை அனைத்திலும் எழுச்சியுரைகளும், கொள்கை விளக்கவுரைகளும் முகாமையானவை. அவற்றின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு அவர்களது தலைவர்கள் அல்லது கருத்துரையாளர்கள் அவ்வப்போது ஆற்றும் அத்தகைய உரைகள் அவை சீராக இயங்கவும், சிறப்பாகச் செயல்படவும் இன்றியமையாதவை.

கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின்  நலமான தனி குழும வாழ்விற்கும், வளர்ச்சிக்கும்  நம்பிக்கை  எழுச்சியுரைகளும், விளக்கவுரைகளும் இன்றியமையாதவையே. அவை கிறித்தவ மரபில் மறையுரை அல்லது அருளுரை என அழைக்கப்படுகின்றன. இயேசுவின் அருளுரைகள்தான் கிறித்தவ இயக்கம் அரும்பிடக்  காரணியாக இருந்தவை. அவருடைய அருளுரைகள் எவ்வளவு அர்த்தமும், ஆற்றலும் கொண்டவையாக இருந்தன என்றால் மூன்று நாள்களாக மக்கள் தங்கள் பசியையும் மறந்து, அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்ததாக நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (மாற் 8:2). "அவரைப்போல் எவரும் என்றுமே பேசியதில்லை” (யோவா 7:46) என அவரைக் கைது செய்துவர அனுப்பப்பட்டக் காவலர் கைது செய்யாமல் வந்ததற்குக் கூறும் காரணம் அவருடைய அருளுரைகளின் ஆற்றலுக்குத் தெளிவான சான்று.

அவருடைய சீடராகிய பேதுருவின் முதல் அருளுரையைக் கேட்டு, மூவாயிரம் பேர் திருமுழுக்குப் பெற்றதுதான் திரு அவையின் தொடக்கமாக அமைந்தது (திப 2:41). தொடர்ந்து, அவரும் இயேசுவின் ஏனைய சீடர்களும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, அருளுரைகள் ஆற்றி இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததால்தான் அங்கெல்லாம் கிறித்தவம் பரவியது. அவர்களுக்குப் பின்பும், உரிய திறமைகள் உடையோர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் மறையுரைகள் திரு அவையினர் தங்கள் நம்பிக்கையில் வலுப்பெறவும்,  நற்செய்தி காட்டும் நன்னெறியில் நடந்திடவும், ஒளியும், ஊக்கமும் பெறுவதற்கு இன்றியமையாதவை என அவர்கள் கருதினர். இதனால்தான், தாம் நிறுவியத் திரு அவையின் பொறுப்பாளராகத் தாம் நியமித்துச்சென்ற திமொத்தேயுவுக்கு புனித பவுல் பின்வருமாறு அறிவுரை தருகிறார்: ‘இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு...” (2திமொ 4:2).

இன்றும் தங்கள் நம்பிக்கையில் ஆழப்படவும், அதைக்காலச் சூழமைவிற்கு ஏற்ப பொருள்புரிந்து வாழவும் கிறித்தவ நம்பிக்கையாளர்களுக்கு மறையுரைகள் இன்றியமையாதவை. அவற்றின் அவசியம் பற்றி அண்மைக்காலத் திரு அவை ஆசிரியம் என்ன கூறுகிறது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் (நற்செய்தியின் மகிழ்ச்சி (நம) 135-159) கருதுகிறார் என்பன பற்றி முதல் பகுதியாகிய இக்கட்டுரையில் காண்போம். அடுத்த இதழில் வரவிருக்கின்ற இரண்டாவது பகுதியில் மறையுரை எதை எடுத்துரைக்க வேண்டும், அதாவது அதன் உள்ளீடு எத்தகையதாக இருக்க வேண்டும்  என்பது பற்றிக் காண்போம்.

ஆசிரியத்தின் பார்வையில் மறையுரை

மறையுரையின் தனிச் சிறப்பான இடத்தைப்பற்றி முதலில் பேசியுள்ளது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமே. அது திருவழிபாட்டின் முக்கியமான ஒருபகுதி. எனவே, ‘ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடமைத் திருநாள்களிலும் மக்களோடு ஆற்றப்படும் திருப்பலிகளில் கனமான காரணம் இன்றி, மறையுரையை விட்டுவிடக்கூடாது” (திருவழிபாடு-52) என, அது அறிவுறுத்துகிறது. அச்சங்கத்தின் ஆணைப்படி புதுப்பிக்கப்பட்ட உரோமைத் திருப்பலி நூலின் முன்னுரை அதை வலியுறுத்திக் கூறுவதுடன் ‘பிற நாள்களில், குறிப்பாகத் திருவருகைக் காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வார நாள்களிலும், மக்கள் கோயிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது” (முன்னுரை, எண். 66) என்கிறது.

மேலும், மறையுரை என்பது ‘இறைவார்த்தையின் உயிருள்ள விளக்கவுரை” என்றும் அது இறைவார்த்தையின் ‘முழுமையான புரிதலையும், செயல்படுத்தும் ஆற்றலையும் வளர்க்கிறது” (முன்னுரை, எண். 59) எனவும் அது எடுத்துரைக்கிறது. ‘இறைவார்த்தையின் அறிக்கையிடலையும், அதற்குத் திருப்பணியாளர் தரும் விளக்கவுரையையும் கேட்க மக்களுக்கு உரிமை உண்டு” என்கிறது 1967 இல் உரோமைத் திருவழிபாட்டுப் பேராயம் வெளியிட்ட நற்கருணை எனும் மறைபொருள் என்ற அறிவுரை ஏடு.

மறையுரையைக் கேட்பது, மக்களுக்கும் அதை வழங்குவது அருள்பணியாளருக்கும் கடினமே என்றாலும், “அது ஆவியாரின் ஆழமான, மகிழ்வான அனுபவமாகவும் ஆறுதல் தரும் இறைவார்த்தைச் சந்திப்பாகவும், புதுபித்தலுக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வற்றா ஊற்றாகவும்” (நம 135) திகழ முடியும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏனெனில், மறையுரை என்பது “கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான ஓர் உரையாடல். அதில் மீட்பின் பெருநிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டு, உடன்படிக்கையின் கோரிக்கைகள் மீண்டும் தொடர்ந்து எடுத்துரைக்கப்படுகின்றன” (நம138). அதில் மறையுரையாளரின் வார்த்தைகளின் வழியாகக் கடவுளே தம் மக்களுடன் பேசுகின்றார். இவ்வாறு, அது சிறந்த ஒரு மறைக்கல்வி மட்டும் அன்று, நற்கருணைக் கொண்டாட்டத்தில் இடம்பெறும்போது, அது அருளடையாள உறவில் உச்சம் அடையும் இறை-மனித உரையாடலாகவும் சிறப்புப் பெறுகிறது.

முன் தயாரிப்பு செய்வதன் முகாமை

மறையுரையைக் கேட்பது மக்களது உரிமை என்றால், அதனை நன்கு தயாரித்து வழங்குவது அருள்பணியாளரின் முகாமையான ஒரு கடமை எனக் கூறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். எந்த அளவுக்கு அவர் அதனை அழுத்தி உரைக்கிறார் என்றால் ‘முன் தயாரிப்பு செய்யாத மறையுரையாளர் அருள் வாழ்வு அற்றவர், தாம் பெற்ற கொடைகளுக்கு அவர் பொய்மையாகவும், பொறுப்பற்றவராகவும் நடந்து கொள்பவர்” (நம145) என்று, அவரைக் கடிந்து கொள்கிறார்.

இத்தகைய முன்தயாரிப்பில் முதன்மையானது அவர் யாருக்கு மறையுரைத் தர இருக்கின்றாரோ, அவர்களையும் அவர்களது வாழ்வுச் சூழலையும் அவர் நன்கு அறிந்திருப்பது. ஏனெனில், மறையுரை வழியாகக் கடவுள் தம் மக்களுடன் உரையாடுகிறார் என்றால் அத்தகைய உரையாடல் ஏற்கனவே அவர்களது வாழ்வுகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான். “கிறித்தவப் போதித்தல் மக்களின் இதயத்திலும் பண்பாட்டிலும் உயிர் நீரினைக் கண்டறிகிறது. அதனின்று தான் மறையுரையாளர் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என அறிந்து கொள்கிறார்” (நம 139). மக்களின் அன்றாட வாழ்க்கை இறையனுபவத்தை விவிலியத்தின் ஒளியில் சுட்டிக்காட்டி அதன் வழியாக அவர் தரும் அருளையும், அழைப்பையும், ஆறுதலையும், ஆற்றலையும் எடுத்துரைப்பதே மறையுரை. இதனால்தான், மக்களை நன்கு அறியாதவர் அந்த மக்களுக்கு ஏற்ற நல்ல மறையுரை ஆற்றுவது அரிது.

மக்களைப் பற்றிய ஆழமான அறிவுபெற அவர்களுடன் மறையுரையாளர் நல்ல உறவும், தொடர்பும் கொண்டவராக இருத்தல் அவசியம். இதற்கு இன்றியமையாதது தம்மைத் தேடிவரும் மக்களுடன் அவர் அன்புடனும், அக்கறையுடனும் உரையாடி, உறவாடுவது மட்டுமின்றி, அவர்கள் வாழும் இடங்களுக்கு அவர்களைத் தேடிச் சென்று, அவர்களது வாழ்வுச் சூழலை நேரடியாகத் தெரிந்து கொள்வது. இதற்கு மிகவும் உதவுவது பங்குப் பணியாளர் ஆண்டிற்கு ஒரு முறையாவது தமது பங்கு மக்களின் வீடுகளைச் சந்திப்பது. இந்த இல்லச் சந்திப்பு இன்று வெறும் வீடு மந்திரிப்பாகவும், நன்கொடை அல்லது சந்தா வசூலிப்பதாகவும் மாறியிருப்பது வருந்தத் தக்கது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது அரைமணி நேரமாவது அமர்ந்திருந்து, பேசி அவர்கள் சொல்வதை மறையுரையாளர் ஆர்வத்தோடும், திறந்த உள்ளத்தோடும் காது கொடுத்துக் கேட்டிருந்தால் தான், அவர்களும் ஆர்வமுடன் கேட்கும் வகையில் இவரது மறையுரை அமையும். ஆம், மக்கள் பேசுவதை மறையுரையாளர் கேட்டிருந்தால்தான் மக்கள் கேட்கும் வகையில் அவரால் பேசமுடியும்.

மறையுரைக்கான உடனடித் தயாரிப்பு விளக்கப்படவிருக்கின்ற வாசகத்தின் பொருளை மறையுரையாளர் நன்கு அறிந்துணர்ந்து கொள்வது ஆகும். இதற்கு அதனை அவர் தமது உள்ளத்தைத் தொடும் வகையில் செப-அருள் சிந்தனை முறையில் வாசித்து, தமது வாழ்வுக்கு அதுசொல்லும் செய்தியை அவர் அனுபவித்து அறிந்திருக்க வேண்டும்.  ஏனெனில், மறையுரை என்பது வெறும் கருத்துப் பரிமாற்றம் அல்ல; மாறாக, முதலிலும் முக்கியமாகவும் அது ஓர் அனுபவப் பகிர்வு. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் என்பதற்கு ஏற்ப அவ்வாசகம் மறையுரையாளரது வாழ்விற்கு பொருள் தந்திருந்தால்தான் அது அவரது மறையுரையைக் கேட்போரின் வாழ்வுகளுக்கும் பொருள் தருவதாக அமைய முடியும். அவரது உள்ளத்தை அது தொட்டிருந்தால்தான் அவரது அருளுரையைக் கேட்போர் உள்ளங்களையும் அது தொடமுடியும். “ஞாயிறு வாசகங்கள் நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அவற்றின் முழுத் திறனோடு எதிரொலிக்க வேண்டுமென்றால் முதலில் அவை  அருள்பணியாளரின் இதயத்தில் அவ்வாறு செய்திருக்க வேண்டும்” (நம 149).

ஒரு கருத்து, உணர்ச்சி, உருவகம்

மேலும், நல்ல ஒரு மறையுரை என்னென்ன முக்கிய கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை குறிப்பிடுகிறார்: “நல்ல ஒரு மறையுரை... ஒரு கருத்து, ஓர் உணர்ச்சி, ஓர் உருவகம் என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்” (நம 157).

ஒரு கருத்து : முதலில், மூன்று வாசகங்கள் வழிபாட்டில் தரப்பட்டிருப்பது அம்மூன்றிற்கும் விளக்கம் தரப்படவேண்டும் என்பதற்காக அல்ல; அவற்றுள் ஏதாவது ஒன்றாவது அல்லது ஒன்றின் ஒரு சிறுபகுதியாவது பங்கேற்பாளர்களின் அன்றைய வாழ்வுச் சூழலுக்கு ஏற்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துரைக்க அடித்தளமாகவும், ஆதாரமாகவும் உதவுக்கூடும் என்பதற்காகத்தான்.

ஏனெனில், மறையுரையின் நோக்கம் கேட்போர் உள்ளத்தில் பல்வேறு கருத்துகளை உலாவ விடுவது அல்ல; மாறாக, ஒரு நல்ல சிந்தனையை உள்ளத்தில் ஆழப் பதிப்பது. அதாவது, “இந்தக் கருத்தைத்தான் மறையுரையாளர் கூறினார்” எனக் கேட்போர் தங்கள் உள்ளத்தில் சுமந்து செல்லும் வகையிலும், எளிதாக  ஏனையோருக்கு எடுத்துச்சொல்லும் வகையிலும் அது தெளிவாக அழுத்தி உரைத்திருக்கப் படவேண்டும். துணைக் கருத்துக்கள் சம்மட்டி கொண்டு ஆணியை அடித்து இறக்குவதுபோல, அந்த மையக் கருத்தை ஆழப் பதிக்க உதவ வேண்டுமே அன்றி, அதிலிருந்துக் கவனத்தைச் சிதறடிக்க அவை காரணியாகிவிடக்கூடாது.

எனவே, இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று முக்கிய கருத்துகளைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன அல்லது இன்றைய முதல் வாசகம் ஒரு கருத்தையும், நற்செய்தி வாசகம் வேறொரு கருத்தையும் முன்வைக்கின்றன எனும் வகையிலான மறையுரைகள் அதிகம் ஆற்றல் உள்ளவையாக இருப்பது இல்லை. இதற்கு விதிவிலக்குகளாக ஞாயிறு அல்லது விழா நாட்களின் வாசகங்கள் அமைகின்றன. விழா, பெருவிழா நாள்களுக்கான இரு அல்லது மூன்று வாசகங்களும் ஒரே சிந்தனையை மையப்படுத்துவனவாக இருக்கின்றன. எனவே, அந்நாள்களின் வாசகங்களில் இழையோடும் ஒரு கருத்தை மையப்படுத்தியதாக மறையுரை அமையலாம். ஞாயிற்றுக்கிழமைகளின் வாசகங்களுள் ஒன்றும் மூன்றும் ஓரளவு ஒத்தகருத்தைக் கொண்டிருப்பது உண்டு. எனவே, அவை இரண்டிலும் ஒத்ததாக அமைகின்ற ஒரு சிந்தனையை மையப்படுத்திய மறையுரை அமையலாம். அன்றைய மூன்று வாசகங்களையும் தொடர்புபடுத்த முயலுவது அவசியம் அற்றதும் பொதுவாக வலிந்தும், செயற்கையாகவும் செய்யப்பட்டதாகவே இருக்கும்.

ஓர் உணர்ச்சி: மறையுரையின் நோக்கம் நல்ல ஒரு கருத்தைக்கேட்போர் உள்ளத்தில் ஆழப் பதிப்பது மட்டும் அல்ல; “அன்பால் செயல்படும் நம்பிக்கையாக” (கலா 5:6) அதை ஆற்றல்படுத்துவதுமே. உண்மைகளும், நல்ல பல கருத்துகளும் நாம்  அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்பவை. ஆனால், நல்ல கருத்துக்களோ நம்பிக்கைகளோ அறிவுசார்ந்தவையாக மட்டும் இருக்கும்போது, அவை உறங்கும் உண்மைகள்தாம். அவை உயிருள்ளவையாக, அதாவது வாழ்வை மாற்றும் வல்லமை எழுச்சி காணவேண்டுமெனில் அவை உறுதிப்பாடுகளாக உரம் பெற வேண்டும்.  உணர்ச்சிகள் தாம் உண்மைகளுக்கு உயிரளிப்பவை, உரமூட்டுபவை. உணர்ச்சிகளோடு ஒன்றிணையும்போது தான் உண்மைகள் உறுதிபாடுகள் ஆகின்றன. நம் நம்பிக்கைகளும் உணர்ச்சிகளால் உயிரூட்டம்பெறும்போதுதான் அவை வாழ்வை நெறிப்படுத்துகின்றவையாகவும், செயலாக்கம் பெறுபவையாகவும் ஆற்றல்படுத்தப்படுகின்றன.

எனவே, வகுப்பறைப் பாடங்கள்போல வெறும் கருத்துரைகளாகவோ, அருவமான விளக்கங்களாகவோ மறையுரைகள் அமைந்துவிடல் ஆகாது. அவை உள்ளத்தைத் தொட்டு, உணர்ச்சியைத் தூண்டும் எழுச்சியுரைகளாக அமையவேண்டும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு “அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கியபோது,  நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” (லூக் 24:32) என இயேசு பற்றி அவர்கள் கூறுவது.

ஓர் உருவகம்: உணர்ச்சியைத் தூண்டி எழுப்பி விட்டு, கருத்தோடு அதை ஒன்றிணைக்க மிகவும் உதவுவதுதான் உருவகம். அது இன்றைய மனித வாழ்வு சார்ந்த ஒரு நிகழ்வாக, கதையாக, சிக்கலாக, கேள்வியாக, பழமொழியாக இருக்கலாம். அது மக்களது அனுபவம் சார்ந்ததாகவும் அவர்களது உள்ளத்தையும், உணர்வுகளையும் ஆழமாகத் தொடுகின்றதாகவும் இருப்பது அவசியம். அப்போதுதான் அது அவர்களது கவனத்தை எளிதில் ஈர்த்து, அதில் புதைந்து கிடக்கின்ற உள்ளர்த்தங்களிலும் செய்திகளிலும் அவர்கள் இதயபூர்வமாக ஈடுபடச் செய்ய முடியும்.

இம்மூன்றும் மறையுரையின் வெவ்வேறுத் தனித்தனிப் பகுதிகள் அல்ல; மாறாக, அதில் இடம்பெற வேண்டிய இன்றியமையாத கூறுகள். ஏனெனில், மறையுரையில் இடம்பெறும் உருவகத்திலேயே கருத்தும் உணர்ச்சியும் இணைந்திருப்பது இயல்பானது.

இறுதியாக

கிறித்தவக் குழுமங்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் அருளுரைகள் அல்லது மறையுரைகள்  இன்றியமையாதவை. ஏனெனில், நற்செய்தி அறிவிப்பு உரைகளால்தான் அவை ஆக்கம் பெறுகின்றன. நற்செய்தி விளக்க உரைகளால்தான் அவை ஊக்கம் பெற்று, நம்பிக்கையையும், அதன் விழுமியங்களையும் வாழ்வாக்குகின்றன. அதிலும், கிறித்தவ வாழ்வின் ஊற்றும், உச்சமும் ஆகிய நற்கருணைக் கொண்டாட்டத்தில் நிகழ்த்தப்பெறும் மறையுரை தனி முதன்மையும் முகாமையும் ஆனது. ஏனெனில், திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல, “மறையுரை திருக்குழுமத்தையும், மறையுரையாளரையும் நற்கருணையில் உடனிருக்கும் கிறிஸ்துவுடன் ஒன்றிணைத்து, வாழ்க்கை மாற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும்” (நம 138). அதற்கு அது உள்ளத்தையும், உணர்ச்சிகளையும் தொடும்வகையில் அமைந்த ஓர் உருவகம் நற்செய்தி சார்ந்த ஓர் உண்மையை அல்லது விழுமியத்தை வாழ்வை மாற்றும் வல்லமையோடு எடுத்துரைக்க வேண்டும்.