Namvazhvu
தலையங்கம் எரிகிற நெருப்பில் ஊற்றப்பட்ட நெய்
Tuesday, 06 Dec 2022 12:38 pm
Namvazhvu

Namvazhvu

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம்! மத உரிமை பாதுகாப்புச் சட்டம்! பொது சிவில் சட்டம்!

இந்தியா சுதந்திரம் பெற்றது முதலே விவாதிக்கப்படும் முதல்பொருள்மதமாற்றம்’. அம்பேத்கரின் புத்த மதமாற்றம் முதலே திரும்பத் திரும்ப விவாதிக்கப்பட்டுவரும் கருப்பொருள் மதமாற்றம். அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள மதச் சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மை என்பது புள்புள் பறவை வலதுசாரிகளுக்கு மிகப்பெரிய நெருடல்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் உருவாக்கத்திற்குப் பிறகு, சிறுபான்மையினர்மீது வன்முறை மேற்கொள்ள வலதுசாரிகள் கையில் எடுத்துள்ள தாக்குதல் ஆயுதம் மதமாற்றம். முஸ்லீம்களாக மனம் மாறிய மீனாட்சிபுரம் தொடங்கி, கலவரம் நடந்த கந்தமால் வரை, மதவெறி சங்கிகளின் வலது சாரி அரசியலுக்கான எரிபொருள்தான் மதமாற்றம்.

தொண்டுசெய்த அன்னை தெரசாவை வாழும்போதே கொச்சைப்படுத்தியது முதல், உயிரோடு எரித்து கொன்ற தொழுநோயாளர்களின் தொண்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ், பழங்குடி மக்களின் சேவகி அருட்சகோதரி ராணி மரியா வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளி அருட்பணி. கிறிஸ்துதாஸ் வரை, மிஷனரிகளை கரிப்பதற்கும், எரிப்பதற்கும் அவர்கள் எடுக்கும் ஆயுதம் மதமாற்றம்.

சைவத்திற்கும் வைணவத்திற்கும் வாருங்கள்என்று கொடி பிடித்த நாம் தமிழர் சீமானைப் போன்று அன்றாட களப்பணியில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்குகள்கர்வாப்சி - தாய் மதம் திரும்புங்கள்என்று சிறுபான்மையினரை மிரட்டுவதற்கும் உருட்டுவதற்கும் பயன்படுத்தும் பூச்சாண்டியே மதமாற்றம். ‘கோதுமை கிறிஸ்துவர்கள்என்றும்கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ்என்றும் இழிவுப்படுத்துவதற்கு அவர்களுக்கு துணை நிற்பது மதமாற்றம். ஆக, மதமாற்றத் தடை என்பது வலது சாரி அரசியலுக்கான மூலப்பொருள்.

நம் இந்திய அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு முன்பாக, மதச்சார்பற்ற இந்தியாவை, மதச் சார்புமிக்க இந்தியாவாக மாற்றுவதற்கு முதலாவதாக பாஜக அமல்படுத்த நினைப்பது பொதுசிவில் சட்டம், இரண்டாவதாக தேசிய அளவிலான (கட்டாய) மதமாற்றத் தடைச்சட்டம். பொது சிவில் சட்டம் ஏறக்குறைய தயார் நிலையில் உள்ளது. இதனை இலக்காகக்கொண்டு லடாக் முதல் கன்னியாகுமரி வரைநெருப்பு யாகம்வளர்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மைப் பலத்துடன் கோலோச்சும் இத்தருணத்தில் நம் அனைவரின் நம்பிக்கையான உச்ச நீதிமன்றம் எரிகிற இந்துத்துவயாகநெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக, கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி டெல்லி பாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் தொடுத்த வழக்கில் செயல்படுகிறது.

அஷ்வினி குமார் உபாத்யாய் அவர்கள் "மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகளை வழங்குதல், பணம் வழங்குதல் ஆகியவற்றின் மூலமாக மதமாற்றம் நடக்கிறது. அதைத் தடுப்பதற்காகக் கடும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான அறிக்கையை தயாரிக்குமாறு இந்தியச் சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று  அவர் தொடுத்த வழக்கில், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று கூறி மத்திய அரசை நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வழக்கை நவம்பர் 14 அன்று விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இது மிகவும் தீவிரமான விஷயம். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மிகவும் கடினமான சூழ்நிலைகள் உருவாகும். ஏனெனில், இது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மதச் சுதந்திரத்தைப் பாதிக்கும் தீவிரமான பிரச்சனை. எனவே, இந்திய அரசு தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதும் இதுபோன்ற கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மேலும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்தும் பதில் தாக்கல் செய்வது நல்லதுஎன்று மத்திய அரசின் வழக்கறிஞரிடம் கேட்டுகொண்டனர். அந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு நவம்பர் 29 ஆம் தேதி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், “குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவரை மிரட்டல் மூலமாகவோ, பொருள்களைக் கொடுத்தோ மற்றொரு மதத்துக்கு மாற்றுவதை மதச் சுதந்திர உரிமையாகக் கருத முடியாது. அவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை அரசு அறிந்திருக்கிறது. பெண்களும் பொருளாதார, சமூக அறிவியலில் பின்தங்கிய வகுப்பினருமே மதமாற்றச் சம்பவங்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. சட்டம்-ஒழுங்கு மாநில அரசுகளிடம் இருக்கிறது. எனவே, மதமாற்றத்தை ஒழுங்குபடுத்துவது மாநில அரசுகளின் கடமை. ஒடிசா, மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்றச் சம்பவங்களை தடுக்க, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 25-வது சட்டப்பிரிவு மதப் பிரச்சாரங்களை மேற்கொள்ள அனுமதித்தாலும், கட்டாய மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை" என்று கூறியது. அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மதமாற்றத்தை நீதிமன்றம் தடுக்கவில்லை. அதேவேளையில் கட்டாய மதமாற்றங்கள் நிகழக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பான விவரங்களை மாநில அரசுகளிடம் பெற்று விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று டிசம்பர் 5ஆம் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் தொடங்கி அண்மையில் கர்நாடகா, .பி வரை பாஜக ஆளும் பெரும்பான்மை மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கிலும் மதமாற்ற முயற்சி என்று தேசிய அளவில் ஒன்றுமில்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது. தாய்மதத்திற்கு திரும்புங்கள் என்று மிகப்பெரிய அளவில் வலது சாரி இயக்கங்கள் மதச் சிறுபான்மையினரை இந்துமதத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கின்றனர். கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது ஆசை காட்டியோ மதமாற்றம் செய்யப்பட்டவர்களை நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களிலும் பழங்குடிகள் வாழுகின்ற மலைவாழ் பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் இதற்கான முன்னெடுப்புகள் சத்தமின்றி நடைபெற்றுகொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்து திரும்ப பெற்றதும் ஒரு துன்பியல் நிகழ்வே.

பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மத்தியில் பாஜக மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரும் என்று மார்ச் 26, 2013 அன்றே தெரிவித்தார்இன்றைய சூழ்நிலையில் அதனை அமல்படுத்துவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாம் மலை போல் நம்பும் உச்ச நீதிமன்றமே ஏற்படுத்திக்கொடுக்கிறது என்பதுதான் கொடுமை.

மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டாலே, மதச்சார்பின்மை நீர்த்துப்போகும் என்பது உலகறிந்த உண்மை. ஆகையால்தான்கட்டாயஎன்ற ஒற்றை வார்த்தையை முன்னொட்டாக இணைத்து, மதச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கின்றனர். அது மரணிக்கும் வேளையில்இந்து  ராஷ்டிரம்என்பது மிஞ்சி நிற்கும். அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள மதச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதும் மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதும் உச்சநீதிமன்றத்தின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, இது போன்று எரிகிற இந்துத்துவயாகநெருப்பில் நெய் வார்ப்பது அதற்கு அழகல்ல. இவ்வழக்கு விசாரணை முடிவு வரை காத்திருப்போம்.