Namvazhvu
விழுப்புரம் மாவட்டம் `பாரா ஒலிம்பிக் போட்டியில் வெல்வதுதான் கனவு' - சாதித்து வரும் மாற்றுத்திறன் பள்ளி மாணவி
Wednesday, 07 Dec 2022 06:56 am
Namvazhvu

Namvazhvu

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஆர்..சி.ஆர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார் சுபஸ்ரீ. செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெற்றது. இதில், மாணவிகளுக்கான பிரிவில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் சுபஸ்ரீ முதலிடம் பிடித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதோடு, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்.

இது குறித்து மாணவியின் உடற்கல்வி ஆசிரியை சோபியாவிடம் பேசினோம். ``சுபஸ்ரீயால் பேச முடியாது, காது கேட்கும் திறன் இல்லை. சைகை மற்றும் எழுத்து மூலமாக அவளிடம் பேசலாம். படிப்பில் ஆவரேஜ் மாணவி. சுபஸ்ரீக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை அவளுடைய இரண்டாவது வயதில் அவளின் தந்தை ராஜரத்தினத்திற்கு தெரிய வந்திருக்கிறது. தன் மகள் துறுதுறுவெனவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதைக் கண்ட அவர் மகளை மாற்று வழியில் மேம்படுத்திட வேண்டுமென முடிவெடுத்தார்.

அதன்படி சுபஸ்ரீ நன்றாக ஓடுவதைப் பார்த்த அவர், அவருக்கு 10 வயது இருக்கும் போதிலிருந்தே ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். கூடுதலாக, நீச்சல் பயிற்சிக்கும் அழைத்துச்சென்றுள்ளார். மற்ற பிள்ளைகளை விடவும் சுபஸ்ரீ சிறப்பாக செயல்படவே, அந்த பயிற்சிகளை தொடர ஆரம்பித்து இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாகவே, காலை 5.30 மணிக்கு சுபஸ்ரீயை மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று ஓட்டப்பந்தய பயிற்சி அளித்து வந்துள்ளார். மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகனும் சுபஸ்ரீக்கு ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சி கொடுத்து வந்தார்.

சுபஸ்ரீ பள்ளிக்கு வந்ததும், நாங்கள் அவளுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி கொடுப்போம். இந்த நிலையில்தான், காது கேளாதோருக்கான 4-வது மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில், மூன்று ஓட்டப்பந்தயங்கள் மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து 4 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறாள் சுபஸ்ரீ. எனவே, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அவளை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். வரும் பிப்ரவரி மாதம் மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கின்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு சுபஸ்ரீ தேர்வாகி செல்ல இருக்கிறாள். அதேபோல் மாவட்ட அளவிலான பொது நீச்சல் போட்டியிலும் பங்கு கொள்ள இருக்கிறாள். பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்பதுதான் சுபஸ்ரீயின் கனவு. அவள் நன்முறையில் பயிற்சியெடுத்து அவருடைய கனவை பூர்த்தி செய்வதற்கான உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.