Namvazhvu
மாநில புதிய கல்விக் கொள்கை: உயர்கல்வியில் கவனம் தேவை!
Wednesday, 14 Dec 2022 08:50 am
Namvazhvu

Namvazhvu

உயர்கல்விக்காக அரசு நடத்துகிற பல்கலைக்கழகங்களையும் கலை, அறிவியல் கல்லூரிகளையும் தொழில்நுட்ப - தொழில்முறைக் கல்வி நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை, நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான மாநிலக் கல்விக் கொள்கைக் குழு வழங்க முடியும்.

இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கையின் விகிதம் 2020 கணக்கீட்டின்படி 27.10.2030-க்குள் இதை 50ரூ ஆக உயர்த்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் 51.40ரூ ஆக இருக்கும் நிலையில், அதை 75ரூ அல்லது 100ரூ எனும் இலக்கை நோக்கி முன்னேறச் செய்வதுதான் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வி:

கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ்மொழியில் பயிற்றுவிப்பதற்குத் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்த காலத்தில் எடுத்த முயற்சிதான், தமிழகத்தின் உயர்கல்விச் சேர்க்கையை 51.40ரூ என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. பட்டப்படிப்பு வரை கட்டணமில்லாக் கல்வி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலமாகச் சிறந்த புத்தகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது, கல்லூரிப் பேராசிரியர்கள் பாடப்புத்தகங்களை மொழி பெயர்த்திருப்பது உள்ளிட்டவை மாணவர்களின் கற்றலை எளிமையாக்கின; பாடங்கள் தொடர்பான மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தின. ஆனாலும், தமிழ்வழியில் படிப்பதற்கான மாணவர்களின் ஈடுபாடு தற்போது குறைந்துள்ளது. இந்தியாவின் மொழிசார் பன்மைத்துவம், அறிவியல் துறையில் மற்ற நாடுகளைவிட வேகமாக முன்னேறிட உதவும்; கூடவே, ஒவ்வொரு மொழியும் வளர்ச்சி அடையும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில அறிவு என்பது விடுதலைக்கான கருவியாகும். மாநிலக் கல்விக் கொள்கையில் இத்தகைய அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

கல்வியில் பாரபட்சம்:

இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கை 2008 இல் 17ரூ, இதில் பழங்குடியினர் 7ரூ, பட்டியல் சாதியினர் 17ரூ, பிற்படுத்தப்பட்டோர் 28ரூ, உயர் சாதியினர் 47ரூ. இது வர்க்கம், சாதி, பாலினம், இனம், மதம் தொடர்பான பாரபட்சங்கள் கல்வியில் நிலவுவதைக் காட்டுகிறது. தலித் சமூகத்தின் உட்பிரிவுகளையும் கணக்கில்கொண்டு, அவர்களை உயர்கல்விக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்தால்தான் சமூக நீதியையும், சரிநிகர் நிலையையும் சமூகத்தில் ஏற்படுத்த முடியும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்துத் தரமான கல்விச் சூழலை அளிக்கின்றன. அரசுக் கல்வி நிறுவனங்களோ உள்கட்டமைப்பு வசதிகளுக்கே திணறிக் கொண்டிருக்கின்றன. அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அனைத்து அம்சங்களிலும் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்த வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உயர்கல்வியைக் கொண்டுசெல்வதில் மதச் சிறுபான்மையினராலும் அறக்கட்டளைகளாலும் தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் பெரும்பங்காற்றியுள்ளன. ‘அரசு தனியாரும் கூட்டாகச் செயல்படுதல்’ எனும் கொள்கைக்கான சிறந்த எடுத்துக்காட்டு இது.

உலகத் தரம் சாத்தியமா?:

உயர்கல்விக்கான கட்டமைப்புகளையும் பாடத்திட்டம் பற்றிய கொள்கைகளையும் உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்துவது மாநிலக் கல்விக் கொள்கையின் முன் உள்ள சவால். அதற்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருவது நல்ல முடிவாக இருக்காது. தரவரிசையில் முதல் 200 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குள் வந்தால் நல்லது என யஷ்பால் கமிட்டி 2009 இல் தெரிவித்தது. ஆனால், மூன்றாம் - நான்காம் தரப் பல்கலைக்கழகங்களே இந்தியாவுக்குள் நுழைய முயல்கின்றன.

மிகச் சிறந்த அறிவியல் படிப்புகளையோ சமூக அறிவியல் துறைகளையோ அல்லாமல், சந்தையின் தேவைக்கேற்ற படிப்புகளையே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு கொண்டுவருகின்றன. அந்த நாடுகளின் பாடத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றங்கள் வராமல், அவர்களின் பாடத்திட்டங்களை நம்மால் மாற்றியமைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வெளியுலகின் யதார்த்தங்களுக்கும் சவால்களுக்கும் உயர்கல்வியில் இடமிருந்தால், பாடத்திட்டம் சிறப்பானதாக மாறும். இதை, ‘ஆய்வகத்திலிருந்து களத்தை நோக்கிப் பரிசோதனைகளைக் கொண்டுசென்று பயில்வது’ எனச் சில நிறுவனங்கள் அழைக்கின்றன. கருத்து வடிவங்களாக வகுப்பறைகளில் கற்பிக்கப்படுபவற்றை, ஆய்வகங்களில் ஆராயப்படுபவற்றைப் பிற்படுத்தப்பட்ட பகுதிகள், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் மத்தியில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வளாகங்களுக்கு வெளியே உயர்கல்வி பொருத்தமானதாக இருக்கிறதா என மதிப்பிடப்பட வேண்டும்.

கல்வியில் திறன் மேம்பாடு:

மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகள் நேரடியான, குறிப்பான திறன்களை வளர்க்கின்றன. கலை, அறிவியல் கல்லூரிகளில் பெரும்பான்மையோருக்கும் பன்முகத் திறன்களும் பல்துறைகளில் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன. அவர்களில் பலர் இளங்கலைக்குப் பிறகு தொழில்முறைப் படிப்புகளுக்குச் செல்கின்றனர். அவர்களுக்குக் குறிப்பாக படிப்புகள் சார்ந்த நடைமுறைத் திறன்களும் செய்நுட்பத் திறன்களும் கிடைக்கின்றன. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் குழுவாகவும் தனித்துச் சுதந்திரமாய்ப் பணியாற்றும் பயிற்சியையும் அங்கு ஒருவரால் பெற முடியும். ஆனால், அதே நேரம், மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைத் தனிப்பட்ட வாழ்விலும் தொழில் வாழ்விலும் அமைதியை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான பயிற்சியை மாணவர்களுக்குத் தரும் ஏற்பாடு அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்துப் பருவங்களிலும் தொடர வேண்டும்.

தொழில்முறை அறநெறிகள்:

கல்வி வளாகங்களிலும் பணியிடங்களிலும் கொடுமைப்படுத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் அதிகரிக்கின்றன; தற்கொலைகள் பரவலாகிவிட்டன. பல்கலைக்கழக, கல்லூரிகளின் ஆசிரியர்கள் நடத்தை விதிகளைக் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய காலகட்டம் இது. மக்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கையைக் கல்விக் கொள்கை எதிர்கொண்டாக வேண்டும். பாலினப் புரிதலோடு, பாலின அநீதிகளைக் களைந்து, பாகுபாடுகளை ஒழிப்பது, மதச்சார்பின்மை, உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சமூக மேம்பாட்டை நோக்கி வளர்ந்து செல்வதாகக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.

‘நிதி ஆயோக்’கின் முன்னாள் தலைவரான அரவிந்த் 2020 தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது, ‘இளங்கலை மாணவர்களை அனைத்துவிதமான படிப்புகளிலும் சேர்வதற்கு அனுமதிப்பது, நான்காண்டு இளங்கலைப் படிப்புகளைத் தொடங்குவது, முன்னோடிகளாக உள்ள கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் அளித்தல் உள்ளிட்டவற்றை இப்போது உயர்கல்விக்காக இருக்கிற சட்டக் கட்டமைப்புக்கு உள்ளேயே செய்துவிட முடியும்’ என்றார். இத்தகைய கருத்துகள் புதியவை போன்று வெளியிடப்பட்டன. ஆனால், 2020 தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பலவற்றைத் தமிழ்நாடு ஏற்கனவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை, உயர்கல்வியை அதி சிறப்பாகவும் விரிவாகவும் கொண்டுசெல்ல வேண்டும். உயர்கல்வியின் தாக்கம் அனைவரையும் அரவணைக்கும் விதமாக இருப்பது உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்.

நன்றி. இந்து தமிழ் திசை