Namvazhvu
இயக்குனர் ஷைசன் P வூசப் அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய திரைப்படம்
Thursday, 15 Dec 2022 05:55 am
Namvazhvu

Namvazhvu

மும்பை டிரை லைட் நிறுவனமும், பாரிஸ் டான் போஸ்கோ இன்டர்நேஷனல் மீடியா அகாடமி நிறுவனமும் சேர்ந்து அருளாளர் இராணி மரியாவைப் பற்றி ஃபேஸ் ஆப் ஃபேஸ்லெஸ் என்னும் திரைப்படத்தினை தயாரித்திருக்கின்றனர். 2022 டிசம்பர் 9ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை சென்னை, கீழ்ப்பாக்கம், சிட்டலில் நடந்த இந்திய கத்தோலிக்க பத்திரிக்கையாளர்களின் 27ஆவது மாநாட்டில் இப்படத்தின் இயக்குனர் ஷைசன் P வூசப் இப்படத்தைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். “இப்படமானது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சுரண்டி பிழைத்து வந்த ஆதிக்க வகுப்பை சேர்ந்த ஜமீன்தார்கள் மற்றும் நில பிரபுக்களை துணிவோடு எதிர்கொண்ட பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையை சேர்ந்த அருளாளர் இராணி மரியா அவர்களைப் பற்றிய படமாகும். புனித அன்னை தெரேசா அவர்களை தனது முன்மாதிரியாக கொண்டு, தன்னை சுற்றி வாழ்ந்த நலிந்த மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாக ஒளித்தவர் அருளாளர் இராணி மரியா. இந்த படத்தின் வழியாக ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் தேவைகளை இவ்வுலத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் நீதிக்கான தொடர் போராட்டத்தையும் இத்திரைப்படத்தின் வழியாக வெளிகொணர்கிறோம். அருளாளர் இராணி மரியாவின் இந்த வரலாற்றுத் திரைப்படமானது உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்குமான திரைப்படம்என்று இத்திரைப்படத்தின் இயக்குனர் கூறினார்.

ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி இராணி மரியா அவர்களை, ஆதிக்க வகுப்பை சேர்ந்த ஜமீன்தார்கள் மற்றும் நில பிரபுக்களின் தூண்டுதல் பேரில், 1995 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது சமந்தர் சிங் என்பவன் மக்களை மதமாற்றுகிறார் எனக்கூறி கத்தியால் குத்திக்கொன்றான். இவர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.