மலைகள் பாதுகாக்கப்படவும் பராமரிக்கப்படவும் வேண்டும் என்று, நன்மனம்படைத்த உலகின் அனைத்து மனிதருக்கும் அழைப்புவிடுப்பதாக, டிசம்பர் 11 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். டிசம்பர் 11 ஆம் தேதி, ஞாயிறன்று அகில உலக மலை நாள் சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இப்பூமிக்கோளம் மற்றும் மனித சமுதாயத்தின் வாழ்வுக்கு, மலைகள் வியத்தகு ஆதாரமாக இருக்கின்றன என்பதை ஏற்பதற்கு இவ்வுலக நாள் நமக்கு அழைப்புவிடுக்கிறது என்று உரைத்துள்ளார்.
இவ்வாண்டு அகில உலக மலை நாளுக்கு, “பெண்கள் மலைகளை நகர்த்துகின்றனர்” என்ற தலைப்பு தெரிவுசெய்யப்பட்டது குறித்து தன் பாராட்டைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள் மலைகளை நகர்த்துவதே உண்மை என்றும், இது, சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் மலைவாழ் மக்களின் மரபுகள் பாதுகாப்பு ஆகியவற்றில் பெண்களின் பங்கை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார். ஒன்றுசேர்ந்து நடக்கும் குழும வாழ்வுப் பண்பை மலைவாழ் மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஐ.நா. பொது அவை 2002 ஆம் ஆண்டை, உலக மலைகள் ஆண்டாக அறிவித்ததைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 11 ஆம் தேதிஅகில உலக மலை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் நிலப்பரப்பில், 27 விழுக்காட்டை கொண்டுள்ள மலைகளிலிருந்து உருவாகும் இயற்கைச் செல்வங்கள், உலகெங்கும் மலைகளில் வாழும் 11 கோடி மக்களுக்கு மட்டுமல்ல, சமவெளியில் வாழும் மக்களுக்கும் பெரும் உதவியாக உள்ளன என்று FAO நிறுவனம் அறிவித்துள்ளது.