Namvazhvu
``இந்தியா இந்து தேசியவாத நாடாக மாறும் அபாயத்தில் இருக்கிறது!" - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பேச்சு
Saturday, 17 Dec 2022 04:13 am
Namvazhvu

Namvazhvu

``இந்தியாவில் பிறந்த சமணம், பௌத்தம் மற்றும் பிற மதங்களை நேசிக்கிறேன். எனவே, அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்." - ஆண்டி லெவின்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆண்டி லெவின் (Andy Levin), இந்தியா இந்து தேசியவாத நாடாக மாறும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில், 2019-ம் ஆண்டு முதல் மிச்சிகனின் (Michigan) 9-வது காங்கிரஸ் மாவட்டத்துக்கான அமெரிக்கப் பிரதிநிதியாக இருந்துவரும் ஆண்டி லெவின், நேற்று தன்னுடைய அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இறுதி உரையில், ``உலகின் பல பகுதிகளில் நிலைமை மோசமாக இருந்தாலும், மனித உரிமைகளில் அமெரிக்கா அதிக வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அதோடு இந்தியா போன்ற இடங்களில் மனித உரிமைகளுக்காக நான் குரல்கொடுத்துவருகிறேன். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்து தேசியவாத நாடாக மாறும் ஆபாயத்தில் இருக்கிறது. அதேசமயம், இந்து மதத்தை நேசிப்பவன் நான். இந்தியாவில் பிறந்த சமணம், பௌத்தம் மற்றும் பிற மதங்களை நேசிக்கிறேன். எனவே அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

அவர்கள் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என யாராக இருந்தாலும் சரி" என்று கூறினார். அதேபோல், ``பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய இந்தியா, நான் நேசித்த இந்தியா அல்ல" எனக் கூறினார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், 2019-ல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக ஆண்டி லெவின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.