Namvazhvu
கர்தினால் மால்கம் இரஞ்சித் இலங்கையில் காவல்துறை உயரதிகாரி நியமனத்திற்குக் கண்டனம்!
Thursday, 12 Jan 2023 09:52 am
Namvazhvu

Namvazhvu

தற்போதைய ரணில் விக்கிரமசிங் தலைமையிலான அரசு இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதாகவும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி மறைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

காவல் துறையின் உயரதிகாரியாக நிலந்த ஜயவர்தன் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கர்தினால் இரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கைப்பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அருள்பணியாளர் சிறில் காமினி பெர்னாண்டோ விளக்கியுள்ளார்

ஜெயவர்த்தனாவுக்குச் சலுகைகள் வழங்கப்படுவது 2019-இல் நிகழ்ந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்கள் பற்றிய உண்மை வெளிவருவதைத் தடுப்பதற்காகவே என்று சுட்டிக் காட்டியுள்ள அருள்பணியாளர் காமினி, பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய முதல் தகவலை 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் 4-ஆம் தேதியன்று, அதாவது குண்டுவெடிப்புகள் நடப்பதற்கு முன்பே இந்திய உளவுத்துறையிடமிருந்து ஜெயவர்த்தனே பெற்றார் என்றும், அதனைத் தடுப்பதற்கான எவ்விதமான முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை என்றும் குறைகூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளைப் பாதுகாப்பதன் வழியாகத் தற்போதைய அரசுத்தலைவர் விக்கிரமசிங்-வும் தலைகுனிவான செயலை செய்கிறார் என்பது தெளிவாகிறது என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் கருதுவதாகவும் அருள்பணியாளர் சிறில் காமினி கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள், மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர். மேலும்  500 பேர் படுகாயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ASIAN)