Namvazhvu
பத்திரிகைகள்-நூல்கள் நம் எட்டாம் திருவருட்சாதனம்! எட்டும் திருவருட்சாதனம்!
Thursday, 19 Jan 2023 12:09 pm
Namvazhvu

Namvazhvu

"அறிவுதான் கிறிஸ்தவர்களுக்கு எட்டாவது திருவருட்சாதனம்" (“Knowledge is the eighth sacrament for Christians”) என்பார் சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ். எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாவலர்தான் இந்தப் புனித பிரான்சிஸ் சலேசியாரை நம் தாய்த் திரு அவை அறிவித்துள்ளது. அவர்தம் விண்ணகப் பிறப்புப் பெருவிழாவின் 400 ஆம் ஆண்டு ஜூபிலிக் கொண்டாட்டத்தை மகிழ்ந்து கொண்டாடும் இவ்வேளையில் உலக அளவில் வெளிவரும் ஒரே கிறிஸ்தவ வார இதழான நம் வாழ்வு வார இதழ், தனது பாதுகாவலரான புனித பிரான்சிஸ் சலேசியாருக்குஎழுத்து அஞ்சலி செய்து சிறப்பிதழாக இவ்விதழைப் படைத்து மகிழ்கிறது. எழுத்தாளர்கள் சார்பில் இச்சிறப்பான முன்னெடுப்பை எடுப்பதில் எழுத்தாளனாக நானும் பெருமையடைகிறேன். “எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது நாம் அறிந்த முதுமொழி. இறைவனை அடையாளப்படுத்தும் நம் பழம்பெரும் இலக்கியமான திருக்குறளும் முதல் குறளிலேயேஅகர முதல எழுத்தெல்லாம்" என்று எழுத்தின் வழியாக இறைவனை அடையாளப்படுத்துகிறது.

திரு அவை பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பாதுகாவலராக அறிவித்துள்ள புனித பிரான்சிஸ் சலேசியார், நாம் கொண்டாடும் ஒரு மறைவல்லுநர் மட்டுமல்ல; இவர் எழுத்துலகில் அனைவருக்கும் முன்னோடி. சீர்திருத்த சபைகளின் தப்பறைக் கொள்கைகளைக் களைந்திட மறையுரை ஆற்ற வழியில்லாதபோது, சமயோஜிதமாக யோசித்து, அச்சடித்த துண்டுப் பிரசுரங்கள் வழியாக, வீடு வீடாக, கதவு கதவாக, கத்தோலிக்க கிறிஸ்தவ மறையின் விளக்கத்தை, தன் போதனைகளைக் கொண்டுபோய் சேர்த்து பல்லாயிரக்கணக்கான சீர்திருத்த சபையினரை, கத்தோலிக்க விசுவாசத்தில் செம்மைப்படுத்தியவர். அவர் ஒர் எழுத்தாளராக தாமே எழுதி, தாமே அச்சடித்து விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள் வழியாக, துண்டான திரு அவையை ஒன்றாக்கிய சலேசியார்தான் பத்திரிகையாளர்களுக்கு முன்னோடி. அவர் எழுதிய நூல்கள் மட்டுமே அவரை மறைவல்லுநராக்கவில்லை. அவர் செய்த (துண்டு பிரச்சாரப்) பத்திரிகைப் பணியும் அவரை மறைவல்லுநராக்கியது என்றால் அது மிகையன்று,

ஓர் ஆயராக, மாட மாளிகைக்குள் அவர் முடங்கிவிடவில்லை; ஆடம்பர வசதிகளுடன் வாழ்ந்திட துணியவில்லை. மாறாக, அவர் தெருக்களில் நடமாடினார், புழுதிகளில் தம் கால் பதித்தார்; மக்கள் மொழி பேசினார்; மண்ணின் மணம் அறிந்து செயல்பட்டார்; வாழ்க்கைப் பாடம் கற்றார்; விவாதங்களுக்காக மேடையேறினார். நற்கருணைக்கு முன்பு ஒரு மணிநேரம் செபித்தார் என்றால், ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிநேரம் நூல்களை வாசிப்பதற்கு மட்டுமே செலவழித்தார். ஆகையால், கால்வினிய தப்பறைக் கொள்கைக்கு எதிராக அறிவார்ந்து களமாடினார். ஆணித்தரமாக, அறிவுதான், நூல்கள்தான், வாசிப்புதான் ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் உட்பட கிறிஸ்தவர்களுக்கு எட்டாவது திருவருட்சாதனம் என்று பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய வார்த்தைகளைச் சொன்னார். பத்திரிகைகள், நூல்களை வாசித்து அறிவைப் பெருக்கி எட்டாவது திருவருட்சாதனமாக இல்லாத எந்த ஒரு கிறிஸ்தவனும், நடமாடும் ஐந்தாவது நற்செய்தியாக இருப்பதற்கு சாத்தியமே இல்லை.

பத்திரிகை-நூல்களை வாசிக்காத ஒரு தலைமுறை உருவாகிற காரணத்தினால், திரு அவை ஒரு பல தலைமுறை கிறிஸ்தவர்களை இழந்துகொண்டிருக்கிறது. குருக்களிடம், குருமாணவர்களிடம், துறவிகளிடம், அருள்சகோதரிகளிடமும் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கிற ஆர்வம் குறைந்து வருகிறது. நிர்வாக அறைகளில் உட்காருவார்களேயொழிய நூலக அறைகளில் அல்ல. தமிழகத்தில் பெரும்பாலான துறவற இல்லங்களில், பங்குகளில், பாடசாலைகளில் நூலகங்களே இல்லை. தகுதிவாய்ந்த எழுத்தாளர்களை ஆதரிக்காத, எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தாத, எழுத்தாளர்களைத் தாங்கிப்பிடிக்காத, எந்தச் சமூகமும் எழுச்சிப் பெற்றதாக சரித்திரம் இல்லை.

நூல்களுக்கு, பத்திரிகைகளுக்கு செய்யும் செலவு முதலீடு என்ற எண்ணம் இன்றைய திரு அவைத் தலைவர்களிடமும் இறைமக்களிடமும் இல்லை. போதிக்கிறவர்கள் வாசிக்கிறவர்களாக இல்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கோடிகளில் கொள்முதல் செய்ய தயாராக உள்ளவர்கள், சில நூறு நூல்களை வாங்க தயங்குகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வானுயர கோபுரங்களுடன் ஆலயங்களைக் கட்ட தயங்காதவர்கள், சில ஆயிரம் செலவு செய்து நூல்களை வாங்குவதற்கு தயங்குகின்றனர். நன்றாக உள்ள ஆலயங்களையும் அறைவீடுகளையும் பங்களாக்களையும் கட்டவும், இடிக்கவும், பூசவும், அகலப்படுத்தவும் செப்பனிடவும் இலட்சங்களில் செலவு செய்ய தயங்காதவர்கள், ஒரு நூறு ரூபாய் கொடுத்து ஒரு நூலை வாங்குங்கள் என்றால் வெளியே போ என்று சண்டைப்போடுகின்றனர்.

அறிவார்ந்தவர்களே! வாசிக்காத தலைமுறை ஒருமுறை ஓரிடத்தில் உருவாகிவிட்டால், மூக்கால் தண்ணி குடித்தாலும் மீண்டும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கவே இயலாது; ஏற்பட்ட இடைவெளியை எரிகல் கொண்டுதான் நிரப்ப வேண்டும். காட்சி ஊடகத்தின் கவர்ச்சியில் மயங்கி, திரைப்பெட்டிக்குள் தலை வைத்தால், ஆலயங்கள் வெறிச்சோடும்; திருப்பீடம் வெறுமையாகும். இன்றைய இளைய தலைமுறை கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் அறிவார்ந்த அடுத்த தலைமுறை திரு அவையிடம் இல்லை என்பது கண்கூடு. ஆகையால்தான் சமூக இடைவெளி விட்டு நாம் நின்று கொண்டிருக்கிறோம். அறிவார்ந்த அடுத்த தலைமுறையை பிரசவிக்க இயலாமல் தமிழகத் திரு அவை தள்ளாடுகிறது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராமல், தமிழகத்திற்கு வந்து தமிழ்த்தொண்டாற்றிய, இலக்கியப் பங்களிப்புச் செய்த, அயல்நாட்டுப் மறைப்பணியாளர்களைவிட, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட உள்நாட்டு மறைப்பணியாளர்கள் செய்த இலக்கியச் சேவை மிகவும் குறைவு. திரு அவையில் படைப்பாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போய், கடை விரிக்கவே ஆட்கள் இல்லாத நிலைதான் இன்று ஏற்படுகிறது. திரு அவைத் தலைவர்கள் புரவலர்களாக ஆதரிப்பதில்லை.

நூல்கள் உங்கள் வாழ்விற்கு, சிறகுகள் தரும். நூல்கள் உங்கள் கால்களுக்கு பாதையாகும். கண்களுக்கு வெளிச்சமாகும். காதுகளுக்கு இசையாகும். உங்கள் மூளைக்கு திருமுழுக்குத் தரும். புத்தகம் - சிந்தனைகளின் கருவூலம். சமூகத்தின் கருவறை நூலகம்நூல்கள்தான் புரட்சியின் போர்வாள்கள். போரில் நூலகம் அழிக்கப்பட்டால் ஒரு தலைமுறை கல்வி இழக்கும். காரல் மார்க்சை உருவாக்கியது நூல்கள்தான். அண்ணாவை ஆறுதல் படுத்தியது நூல்கள்தான். பகத் சிங்கை மரணம் வரை மகிழ்வித்ததும் நூல்கள்தான். புத்தகங்கள் - புரட்டுகிறபோதெல்லாம் புரட்சியை, மறுமலர்ச்சியை, மாற்றத்தை உங்களுக்குள் விதைக்கும்.

விவிலியமே நூல்களின் தாயகம்தான். நூல்! ஊசியின் காதில் நுழைந்து ஆடைகளைத் தைப்பது நூல்; உடலின் காதுகளில் நுழைந்து வாசிக்கும்போது கிழிந்த உள்ளங்களைத் தைப்பது நூல். இல்லந்தோறும் இறையாட்சியை, ஒரே ஒருமுறை மின்னல்போல் நம் கவனம் ஈர்த்து மறைந்து போகும் திரைக்காட்சி ஏற்படுத்திவிடாது. திரும்பத் திரும்ப நீங்கள் புரட்டும் உங்கள் நூல்கள் மட்டுமே உங்களை ஓர் அடி முன்னே நகர்த்தும். ‘உள்ளந்தோறும் இறையாட்சிஎழுத்துகளால், நூல்களால், பத்திரிகைகளால் மட்டுமே சாத்தியம். ‘எடுத்து, வாசிஎன்றுதான் அகுஸ்தினாருக்கு வானத்தூதர் அறிவுரைத்தார்; ‘ரிமோட்டை அமுக்குஎன்று சொல்லவில்லை. துறவிக்கான அமைந்த மனநிலையை நூல்கள் மட்டுமே உருவாக்கும். சமையலறையில் நீங்கள் சமைக்கலாம்; தொலைக்காட்சி அறையில் நீங்கள் சாப்பிடலாம். ஆனால், நூலக அறை மட்டுமே உங்களை இந்தச் சமூகத்திற்கு சமைக்கும். மறவாதீர்.

பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி பாருங்கள். பொழுதை ஆக்குவதற்காக நூல்களைப் படியுங்கள். ‘படிஎன்பதிலிருந்துதான்படிக்கட்டுஎன்ற வார்த்தைப் பிறக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பத்திரிகையாளர்களின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் சலேசியாரின் ஜூபிலி ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையிலாவது தமிழகத் திரு அவை உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, நம் வாழ்வு வார இதழையும், ஏனைய மாத இதழ்களையும் ஆதரிக்க வேண்டும். பதிப்புத்துறையில் மனந்தளராமல் ஈடுபடுகின்ற, நம் வாழ்வு வெளியீடு, வைகறை பதிப்பகம், அரும்பு பதிப்பகம், நாஞ்சில் பதிப்பகம், தேடல் வெளியீடு, தமிழ் இலக்கியக் கழகம், நல்லாயன் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்கள், வெளியீடுகள் பதிப்பிக்கும் நூல்களை வாங்கி ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்.

தமிழக அரசே, முதல்முறையாக தம் நூலகங்களுக்கு நம் வாழ்வை வாங்கும்போது, தம் மறைமாவட்ட குருக்களுக்கும் துறவற இல்லங்களுக்கும் நம் வாழ்வு வார இதழை வாங்காத நிலை, வாங்க மறுக்கிற பிடிவாத மனநிலை மாற வேண்டும்.

புனித பிரான்சிஸ் சலேசியாரே, பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! ஆமென்.