Namvazhvu
அன்பியக்கூட்டம்-149 மையப்பொருள் : பேருவகை கொள்ளுங்கள்!
Saturday, 04 Feb 2023 05:39 am
Namvazhvu

Namvazhvu

தொடக்கப்பாடல் : ஆனந்த மழையில் நானிலம் மகிழ (இறை அலைகள் - பாடல்  358)

தொடக்க இறைவேண்டல்: பரிவுள்ளத்தாலும், படைப்பாற்றலாலும் எம்மைப் பராமரித்து வருகின்ற எங்கள் விண்ணகத் தந்தையே! உமக்குப் புகழ்ப்பா இசைத்துப் போற்றுகின்றோம். போதனையாலும், சாதனையாலும் எமக்கு வலுவூட்டி, எம்மை வாழவைக்கின்ற எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உமக்குப் புகழ்ப்பா இசைத்துப் போற்றுகின்றோம். ஒளி தந்தும், வழி தந்தும் எம்மை வழி நடத்துகிற தூய ஆவியாரே உமக்குப் புகழ்ப்பா இசைத்துப் போற்றுகின்றோம். உமது பேரருளால் பேருவகையுடன் நாங்கள் இப்போது நடத்த இருக்கும் எங்கள் ---- அன்பியத்தை திரு/திருமதி ---(பெயர்) அவர்களின் இல்லத்தில் தொடங்க இருக்கின்றோம். உம் திருமகனும் எம் மீட்பருமான ஆண்டவர் இயேசு வழங்கிய மலைப்பொழிவில் கூறியபேருவகை கொள்ளுங்கள்என்ற மையப் பொருளில் சிந்திக்க, செயல்பாட்டுக்கு அழைக்க இருக்கின்ற இக்கூட்டம் எல்லாவிதத்திலும் வெற்றியாக, பயனுள்ள விதத்தில் நடைபெற உமது அருள் துணையையும், உடனிருப்பையும் வழங்கிட அன்புடனும், உரிமையுடனும் இணைந்து வேண்டுகிறோம். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:1-1-12

(மூன்று தடவை வெவ்வேறு நபர்கள் வாசித்திடுவர். இதில் தங்கள் உள்ளத்தைத் தொட்ட இறைச் சொற்றொடரைத் தேர்ந்துகொள்க)

சிந்தனை

* உலக மக்களின் கவனத்தை முற்றிலுமாக ஈர்த்து, அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட இயேசுவின் பரப்புரை இந்த மலைப்பொழிவுதான்.

* மானிடர் தம் வாழ்வில் பேறுபெற்றவராக விளங்கிட, இறையாட்சிச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

* இதினுள்ள எட்டு சிறப்புச் செயல்பாடுகளும் சவால்களுடன் கூடியவை.

* சாதனை படைக்க சவால்கள் துணைநிற்கும் அந்தச் சாதனைகளே நிலைவாழ்வின் பேறுகளாகப் பரிணமிக்கின்றன.

* ஒவ்வொரு செயல்பாட்டுப் பேறினைப் பெறும்போதும், அது எல்லாருக்கும் பாடமாக அமைகிறது.

* இதில் வரும் ஒவ்வொரு கடமை உணர்த்துதலும் ஏதாவது ஒருவிதத்தில் நம்மைத் தொட்டதாகத்தான் இருக்க முடியும்.

* பேருவகை கொள்ள இறைமகன் இயேசு நம்மை அழைப்பது, அவருடன் இணைந்து செயலாற்றவே.

* அன்பியம் இப்பேறுகளை எல்லார்க்கும் கொண்டு சேர்க்கும் தளமாக அமைய வேண்டும்.

* வாழ்க்கையை அலசி ஆராய்ந்து, நிறைவுற்றதை நீடிக்கச் செய்யவும், குறைவுற்றதைக் கூர்ந்து கவனித்து, செயல்படுத்தவும் இப்பகுதி சிறப்பாக அழைக்கிறது.

* தன்னை மகாத்மாவாக மாற்றியதில் இயேசுவின் மலைப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கிறது என நமது தேசத்தந்தை காந்தியடிகள் மொழிந்துள்ளார்.

நற்செய்திப் பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு

அது ஒரு நகரின் பேருந்து நிறுத்தம். அதன் அருகில் ஒரு கல் கிடந்தது. அதற்குஇராசிக் கல்என்று பெயர் உண்டு. ஏனென்றால், அதில் அமர்ந்து கொண்டு பிச்சைக்கேட்டால் எப்படியும் பிச்சை கிடைத்துவிடுகிறது என்பது பலரது நெடுங்கால நம்பிக்கை. ஒரு நாள் பசியால் வாடிய இருவர் அக்கல்லில் அமரப் போட்டிப்போட்டனர். அது சிறு சண்டையாகப் பரிணமித்தது. அவர்களிடையே தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு பெரியவர் நீண்ட தாடியுடன் வந்தார். “சற்று விலகி நில்லுங்கள்!” என்றார். இருவரும் விலகி நின்றனர். அப்பெரியவர் அக்கல்லை அவர்களின் துணையுடன் புரட்டி நகர்த்தினார். அது ஒரு குழியை மூடப் போடப்பட்டிருந்த கல். அக்குழியில் அப்பெரியவர் எதையோ தேடினார், அது கிடைத்தது. அப்பையில் பல ஆண்டுகளுக்கு முன் தான் வைத்துச்சென்ற ரூபாய் நோட்டுகளும், தங்க நகைகளும் அப்படியே இருந்தன. அது சமூகவிரோதக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அவர்கள் துரத்தி வந்ததால், இக்குழியில் வைத்து, கல்லை அதன்மேல் மூடி வைக்கப்பட்டது. அக்கல்லின் மேல் இருந்த யாருக்கும் குழிக்குள்ளே இருந்த இப்பெரும் புதையல் போன்ற பை காணப்படவில்லை. இப்போது அப்பெரியவர் அதிலுள்ள தொகையைப் பலருக்கும் பகிர்ந்தளித்தார். உங்களிடமே இருந்தும், உங்களால் காண முடியாதபேருவகையைஅனுபவியுங்கள் என்று கூறிவிட்டு, அவர் மறைந்து விட்டார்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கான கருத்துகள்

1. திரு அவைப் பணியாளர்கள் மிகச் சிறந்த போதனைகளுக்குச் செவிசாய்த்து, வாழ்க்கைப் படுத்தி இறையாட்சியின் சான்றாளர்களாகத் திகழ...

2. தங்களிடையே இருந்தும், பயன்படுத்தாமல் இருக்கும் திறமைகளை, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாட்டுத் தலைவர்கள் பயன் படுத்தும்படியாக...

3. பேருவகை கொள்ள விடுக்கப்படும் அழைப்புகள் எல்லாமே நீதி, உண்மை, அமைதியின் படி அமைந்துள்ளனவா என ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள...

4. அன்பியம், மலைப்பொழிவின் வழியில் அமையும் சிறப்புச் செயல்பாட்டுத் தளமாக அமைய...

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்

1. அன்பியக் குடும்பங்கள் அடிப்படை மறைக்கல்வி அளிக்கும் விதத்தில் சிறப்புச் செயல்பாடுகள் அமைய வேண்டும். குறிப்பாக, மலைப்பொழிவின் 8 போதனைகளுக்கு விளக்கம் அளிக்க ஒரு சிறு கருத்தமர்வு ஏற்பாடு செய்தல்.

2. மக்களைத் தேடி மருத்துவம் என்ற அரசின் திட்டத்தின் பயனை அன்பியப் பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்க வழிகாட்டுதல்.

நிறைவு வேண்டல்

பேருவகை வழங்கும் பெரு வழியான இறைவா! நாங்கள் இன்று, இப்போது பங்கேற்ற எங்கள் அன்பியக் கூட்டத்தின் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக அமைய நீர் புரிந்த அனைத்து நலன்களுக்கும் நாங்கள் எங்களது இதய நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் மேற்கொள்ள இருக்கும் செயல் திட்டங்கள் அனைத்தும் வெற்றிபெற அருள்புரியும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

(அன்பியப் பாடல்)