Namvazhvu
(சென்ற வாரத் தொடர்ச்சி) ) புதிய மரியியல் தொடர் 03 மரியா அன்றும் இன்றும்
Tuesday, 07 Feb 2023 07:10 am
Namvazhvu

Namvazhvu

1) இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள்

லூக்கா நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியவை:

ii) இயேசுவின் பிறப்பு அறிவிப்பு (லூக்1:26-38)

ii) மரியா - எலிசபெத்து சந்திப்பு (லூக் 1:39-45)

iii) இயேசுவின் பிறப்பு (லூக் 2:1-7)

iஎ) இடையர்கள் குழந்தையையும், தாய் மரியாவையும் காணல் (லூக் 2:8-20)

எ) இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தல் (லூக் 2:22-38)

எi) இயேசுவைக் கோவிலில் கண்டுபிடித்தல் (லூக் 2:41-50)

லூக்கா நற்செய்தியில் காணப்படும் இப்பிறப்பு நிகழ்வுகளை வாசிக்கும்போது, மரியாவைப் பொறுத்தமட்டில் மத்தேயு நற்செய்தியில் இருந்து இவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு முக்கியத்துவம் பெறும்நிலையில், லூக்கா நற்செய்தியில் முழுக்க, முழுக்க மரியா மையம் பெறுவதைக் காணமுடியும் (லூக்கா நற்செய்தியைப் பெண்களின் நற்செய்தி எனக் கூறுவது நோக்கத்தக்கது). இங்கு, இயேசுவின் பிறப்பைப் பற்றிய பகுதியில், மரியாவுக்குத்தான் வானதூதர் காட்சியில் தோன்றி, குழந்தைப் பிறப்பைப் பற்றி கேட்கின்றார்; மரியா மண ஒப்பந்தமான யோசேப்பிடமோ, அவரின் பெற்றோரிடமோ கலந்து பேசாது வானதூதருடன் உரையாடுகின்றார்: “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்கிறார் (1:34). பின்பு, இது இறைத்திட்டம் என உணர்ந்து, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (1:38) எனக் கூறி, இசைவு தருகின்றார். தம் உறவினர் எலிசபெத்து தேவையில் இருந்தபோது, குறிப்பறிந்து அவரைத் தேடிச் சென்று உதவுகின்றார் (1:39-45). அவ்வாறே, இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணம் செய்யும் நிகழ்விலும், ஆலயத்தில் இயேசுவைக் கண்டுபிடிக்கும் நிகழ்விலும் மரியா மையம் பெறுகின்றார்.

2. ‘உண்மையான பேறு’ பற்றிய பகுதி

இயேசு ஆற்றிய பல வல்ல செயல்களை, நல்ல செயல்களைக் கண்ட, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார். பெற்ற தாய்க்குக் கிடைக்கும் மிகப்பெரிய பெருமை என்பது அவர் மகளால் - மகனால் கிடைக்கக் கூடியதே. அவ்வகையில், மரியாவுக்கு அவர் பெற்றெடுத்த மகனால் கிடைத்த மிகப்பெரும் பட்டமே இப்பகுதியாய் அமைந்துள்ளது. இக்கூற்றைக் கூறக்கூடிய பெண் யார் எனக் காணும்போது, ‘கூட்டத்தில்’ இருந்த பெண் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பெண்கள் பலரின் பெயர்களை லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிட்டாலும், இயேசுவின் நற்செயல்களால் கவரப்பட்டு, மரியாவை வாழ்த்திய பெண்ணின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. எனவே, அவர் ஒரு சாதாரண, ஏழைப் பெண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும். சாதாரணப் பெண்ணின் வாழ்த்து எப்பொழுதும் நேர்மையானது, எதார்த்தமானது. திரு அவையின் மரபில் அன்னை மரியாவுக்கு எத்தனையோ பட்டங்கள் சூட்டப்பட்டுள்ளன. செபமாலையை நாம் கூறும்போது, அன்னைக்கு 51 பட்டங்களை அவரின் புகழ்மாலையில் கூறுகின்றோம். ஆனால், இவை அனைத்தையும்விட, மேற்கூறிய நற்செய்திப் பகுதியில் இடம் பெற்றுள்ள வாழ்த்து மிகப்பெரிய மதிப்புக்குரிய ஒன்று. ஒட்டுமொத்தமாக லூக்கா நற்செய்தியாளர் மரியாவைப் பற்றிய மிகச்சிறந்த புரிதலைத் தருகின்றார்: நம்பிக்கையின், சீடத்துவத்தின் மாதிரி, இறைவார்த்தையைக் கேட்டு, உள்ளத்தில் இருத்தி, சிந்தித்து, ஏற்று வாழ்வாக்கிய பெண். இது பற்றி இன்னும் ஆழமாக மூன்றாம் அலகில் காண்போம்.

2.4. யோவான் நற்செய்தி

யோவான் நற்செய்தியைப் பொறுத்தமட்டில், இரண்டு இடங்களில் மரியாவைப் பற்றிய குறிப்பு உள்ளது: ஒன்று, கானாவில் திருமண நிகழ்வு (2:1-12); இரண்டு, சிலுவையடியில் மரியா (19:25-27). ஒத்தமைவு நற்செய்திகளுடன் ஒப்பிடும்போது, யோவான் நற்செய்தியாளர் இறையியல் உண்மைகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என்பர் விவிலிய அறிஞர். இவ்வாறு, யோவான் நற்செய்தியின் தொடக்கத்திலும், இறுதியிலும் மரியா பற்றிய குறிப்பு வருவதால் மரியாவை இயேசுவின் பணி வாழ்வு முழுக்க அவருடன் பயணித்த ஒரு சீடத்தியாகக் காணமுடியும். மேலும், யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இந்த இரண்டு பகுதிகளும் யோவான் நற்செய்திக்கு மட்டுமே உரியவை. இந்த இரண்டு பகுதிகளிலுமே மரியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர் ‘இயேசுவின் தாய்’ என்றே குறிப்பிடப்படுகின்றார். இப்பகுதிகளை இங்குக் காண்போம்.

1) கானாவில் திருமண நிகழ்வு

கானாவில் திருமண நிகழ்வை வாசிக்கும்போது, அங்குப் புலப்படும் சில உண்மைகள்: (1) திருமணம் நடைபெற்ற குடும்பம் ஓர் ஏழைக் குடும்பமாகத்தான் இருந்திருக்க வேண்டும். காரணம், வசதி படைத்தவர்கள் திருமணம் நடத்தினால் அங்கு எந்தவிதப் பற்றாக்குறையும் ஏற்படாது. ஆனால், இங்குத் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது. எனவே, திருமணத்தை நடத்தும் குடும்பம் திராட்சை இரசப் பற்றாக்குறையில் பலரின் இழிச்சொல்லுக்கு ஆளாகும் நிலை அங்குக் காணப்பட்டது; (2) திராட்சை இரசம் கிடைக்காத மக்கள் ஏழை, எளிய மக்களே. காரணம், எந்த ஒரு விருந்திலும் பணக்காரர்கள், செல்வாக்குமிக்கவர்கள் முதலில் சாப்பிடுவர்; இறுதியாகத்தான் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும். பணக்காரர்கள், செல்வாக்குமிக்கவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் திராட்சை இரசம் அருந்தமுடியும். ஆனால், ஏழைகளுக்கு இதுபோன்ற சிறப்பு நிகழ்வின்போதுதான் திராட்சை இரசம் கிடைக்கும். எனவே, எப்பொழுதாவது திராட்சை இரசம் கிடைக்கும் நிலையில் வாழ்ந்த ஏழை, எளிய மக்களுக்கு திராட்சை இரசம் இல்லாமல்போன ஒரு நிலை காணப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில்தான் மரியாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. தமது பணி வாழ்வைத் தொடங்கிய இயேசு, “ஏழைகளுக்கு நற்செய்தி” (லூக் 4:18) என்று முழக்கமிட்டு, அறிவித்தார். ஆனால், இங்கு ஓர் ஏழைக் குடும்பம் பலரின் இழிச்சொல்லுக்கு ஆளான நிலையில் இருந்தது; தங்களுக்குத் திராட்சை இரசம் உறுதியாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஏழை, எளிய மக்கள் காத்திருந்தனர். இச்சூழலுக்கு மத்தியில் இயேசு அந்த ஏழைக் குடும்பத்தின் மீதும், ஏழை, எளிய மக்கள்மீதும் எந்தவித அக்கறையும், பரிவிரக்கமும் இன்றி இருந்தார். மரியா அவரிடம் சென்று, சூழ்நிலையை விளக்கியபோது, இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார் (யோவா 2:4). ஆனால், இங்கு மரியாவின் செயல்பாடு நோக்கத்தக்க ஒன்று. இயேசு தம் வல்ல செயல்களை ஆற்ற இதுவே சரியான தருணம்; அவருடைய போதனைகளுக்கு அவர் செயல்வடிவம் கொடுக்க ஏற்ற நேரம் இதுவே என்று, அவருக்கு மறைமுகமாக உணர்த்துகின்றார். இயேசுவைச் செயல்பாட்டிற்கு அழைக்கின்றார். ஒருவகையில் இயேசுவுக்கு மறைமுகமாகக் கட்டளையிடுகின்றார். ஆகவேதான், மரியா அங்கிருந்த பணியாளர்களிடம் “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (2:5) என்கிறார். இவ்வாறாக, இயேசு ஆற்றிய வல்ல செயலுக்குப் பின்னணியில் மரியா இருந்தார் எனக் கூறின் அது மிகையாகாது. இங்குத் தண்ணீர் மட்டும் திராட்சை இரசமாக மாறவில்லை; “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்று கூறிய இயேசு ‘மனம் மாறி’ இதுவே தருணம் என்று உணர்ந்து, தமது முதல் வல்ல செயலைச் செய்கின்றார்.

2) சிலுவையடியில் மரியா

இயேசு தமது இறப்புக்குமுன் செய்த செயல் இங்கு காணப்படுகின்றது. தம்மைப் பெற்றெடுத்து, வளர்த்து, இறைத்திட்டத்துக்கு தம்மைக் கையளித்த தாயை ஆதரவற்ற நிலையில் விட்டுவிட்டு, அவர் இறக்க விரும்பவில்லை. அவ்வாறே, தம்முடன் மூன்று ஆண்டுகள் பயணித்த தம் அன்புச் சீடர்களையும் கைவிட்டுவிட விரும்பவில்லை. தாய்க்கு உரிய அன்பு மகனாகவும், சீடர்களின் உண்மைப் போதகராகவும் விளங்கிய அவர், அவர்களுக்கு வேண்டியவற்றை தமது இறப்புக்கு முன்பாகச் செய்கின்றார். எனவேதான், சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு தம் தாயை நோக்கி, “அம்மா, இவரே உம் மகன்” (19:26) எனக் கூறி, தம் சீடர்களை தம் தாயின் பராமரிப்பில் ஒப்படைக்கின்றார். அவ்வாறே, தம் சீடர்களை நோக்கி, “இவரே உம் தாய்” (19:27) எனக்கூறி, தம் தாயை தன் சீடர்களின் பாதுகாப்பில் ஒப்படைக்கின்றார்.

3. திருத்தூதர் பணிகள் நூல்

திருத்தூதர் பணிகள் நூலில் ஒரே ஒரு முறை மட்டுமே மரியாவின் பெயர் காணப்படுகின்றது. உயிர்த்த ஆண்டவர் விண்ணகம் ஏறிச் சென்ற பின்பு, பெந்தகோஸ்து நிகழ்வுக்கு முன்பாக இயேசுவின் சீடர்கள், பெண்கள் சிலர், இயேசுவின் சகோதரர்கள் ஆகியோருடன் இணைந்து, மரியாவும் ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது (திப 1:13-14). லூக்கா நற்செய்தியாளர் இப்பகுதியைக் கூறுவதற்கான காரணம் தொடக்கத் திரு அவையின் உருவாக்கத்தில் மரியாவின் பங்கைச் சுட்டிக்காட்டுவதே என்பர். இயேசுவைக் கைது செய்த பின்பும், அவரின் இறப்பு, உயிர்ப்புக்குப் பின்பும், சீடர்களின் மனப்பாங்கைக் காணும்போது, சீடர்களிடம் பயமும், நம்பிக்கைத் தளர்வும் காணப்பட்டதை நாம் அறிகின்றோம். மாற்கு நற்செய்தியில் இயேசுவைக் கைது செய்தபோது, “சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்” (மாற் 14:50) எனக் காண்கின்றோம். இளைஞர் ஒருவர் (மாற்கு நற்செய்தியாளராகக் கூட அவர் இருக்கலாம்) “துணியை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்” (மாற் 14:52) எனக் காண்கின்றோம். மேலும், இயேசுவுடன் இருந்தவர்கள் அவரின் இறப்புக்குப் பின்பு, “துயருற்று அழுது கொண்டிருந்தார்கள்” (மாற் 16:10); இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது, அவர்கள் நம்பவில்லை (மாற் 16:11) எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், யோவான் நற்செய்தியை காணும்போது, சீடர்களின் நம்பிக்கையின்மை இன்னும் தெளிவாகப் புலப்படுகின்றது. இயேசு யாரைத் திரு அவையின் தலைவராக ஏற்படுத்தினாரோ அவர் (சீமோன் பேதுரு) இயேசுவின் இறப்பு-உயிர்ப்புக்குப்பின், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” (யோவா 21:3) என்று கூற, உடன் இருந்த சீடர்கள் அனைவரும் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” (யோவா 21:3) என்றார்கள். இவ்வாறாக, இயேசுவின் இறப்பு-உயிர்ப்புக்குப்பின் சீடர்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களாக, இயேசு தங்களை அழைக்கும்முன் எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்களோ, அதே வேலையை மீண்டும் செய்வதற்கு முடிவெடுக்கின்றவர்களாகக் காட்டப்படுகின்றார்கள். எனவே, நம்பிக்கை இழந்த சீடர்களை மரியா, மீண்டும் திடப்படுத்தி, உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சிகளாய் வாழ அழைக்கின்றார். எனவேதான், திரு அவையின் உருவாக்கத்தில் மரியாவின் பங்கு மிக முக்கியம் (பெந்தகோஸ்து நிகழ்வின்போதுதான் திரு அவை உருவானது என்பது சிலரின் கருத்து). புனித அகஸ்டின் அன்னை மரியாவைப் பற்றிக் கூறும்போது, “கன்னி நம்பிக்கை கொண்டார்; நம்பிக்கை கொண்டு கருவுற்றார், கிறிஸ்துவை உடலில் கருத்தரிக்கும்முன் உள்ளத்தில் கருத்தரித்தார்” என்பார். இவ்வாறு, அன்னை மரியா இயேசுவை இருமுறைக் கருத்தாங்கினார் எனக் கூறுவார். ஆனால், அதையும் தாண்டி மூன்றாம் முறையாக திரு அவையைப் பெற்றெடுத்த தாயாகவும் மரியாவைக் காணவேண்டும். ஒருவேளை மரியாவின் முன்னெடுப்பு இல்லையெனில் திரு அவை உருவாகியிருக்குமா என்பதுகூட ஓர் ஐயப்பாடுதான்!

4. திருவெளிப்பாடு நூல்

திருவெளிப்பாடு நூல் அலகு 12 இல், கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (12:1-16) பற்றிய குறிப்பு உள்ளது. திரு அவையின் மரபில் மரியா வணக்கம் எழுச்சி பெற்ற சூழலில், மரியா திருவிவிலியத்தின் முதல் நூலிலும், இறுதி நூலிலும் இடம் பெற்றுள்ளார் என விளக்கும் விதமாக தொடக்கநூல் 3:15 பகுதியையும், திருவெளிப்பாடு நூல் 12:1-16 பகுதியையும் சுட்டிக்காட்டி விளக்கினர். இவ்வாறாக, மீட்பின் வரலாற்றில் மரியாவின் பங்கைத் தொடக்கத்தில் இருந்தே விளக்கினர். ஆனால், இவ்விரண்டு பகுதிகளுமே மரியாவைப் பற்றிய பகுதிகள் அல்ல என, இன்று விவிலிய அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். மரியா புதிய ஏற்பாட்டுக் கதைமாந்தர். எனவே, தொடக்க நூலில் குறிப்பிடப்படும் பெண் மரியா அல்லர்; மேலும், திருவெளிப்பாடு நூலில் குறிப்பிடப்படும் பெண் புதிய இஸ்ரயேலாகிய திரு அவையைக் குறித்து நிற்கிறார். மரியாவுக்கும், இப்பகுதிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

இவ்வாறாக, புதிய ஏற்பாட்டில் மத்தேயு, லூக்கா நற்செய்தி நூல்களில் இடம்பெறும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் நீங்கலாக மரியா பற்றிய நிகழ்வுகள் மொத்தம் ஏழு மட்டுமே.

(தொடரும்)