Namvazhvu
அன்பியக்கூட்டம்-150 மையப்பொருள் : வாழ்வு தரும் வாய்ச் சொல்
Wednesday, 15 Feb 2023 11:54 am
Namvazhvu

Namvazhvu

தொடக்கப்பாடல் : வார்த்தையிலே வழிநடப்போம் (21) வேறுபாடல்

தொடக்க இறைவேண்டல்: சோதனைகளை அனுமதித்து அவற்றைச் சாதனைகளாக மாற்ற எமக்குத் துணைநிற்கும் விண்ணகத்தந்தையே! உம் வார்த்தைக்குக் காத்திருக்கின்றோம். சோதனைகளை அனுபவித்து, முழு வெற்றியடைந்த இயேசுவே உம் வார்த்தைக்குக் காத்திருக்கின்றோம். நாங்கள் சோதனைகளை வெல்ல ஆற்றல் அளித்து, எம்மை ஆற்றுப்படுத்தும் தூய ஆவியாரே! உம் வார்த்தைக்குக் காத்திருக்கின்றோம். இத்தவக்கால முதல் வாரத்தில் எமது --- அன்பிய உறுப்பினர்கள், ஒரே குடும்பமாகக் கூடி, இன்று எங்களது எதிர்காலப் பணிகளுக்குத் திட்டமிட இருக்கிறோம். எங்களுக்கு நிறைவாக உமது ஆசிகளை அளித்தருளும். இக்கூட்டத்தில் நாங்கள் எங்களது இறைவாக்கு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இக்காலச் சூழலுக்கு ஏற்ற செயல்பாடுகளை இனிதே நிறைவேற்றிட அருள் வேண்டவும், எங்களுக்குத் தேவையான ஞானத்தை வழங்கியருளும். சிறப்பாக எங்களது வாய்ச் சொல் ஒவ்வொன்றும் இறையாட்சியின் கொள்கைகளை முழக்கமிடத் துணைநிற்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

நற்செய்தி வாசகம் : மத்தேயு 4:1-11

சிந்தனை

* பேச்சு தங்கமெனில் அமைதி வைரமாகும்.

* பெரும்பாலான சோதனைகள் வாய்ச் சொற்களால் தான் வருகின்றன.

* சோதனைகள் அனைவருக்கும் பொதுவானவை

* சோதனை வேளையில் இயேசு தமது வார்த்தைகளைக் கையாண்ட விதம் நமக்குத் தலைசிறந்த மாதிரியாகும்.

* வார்த்தைகளே செயல்பாட்டை நிர்ணயிக்கின்றன அல்லது தூண்டுகின்றன.

* ஒப்புரவு ஏற்படுத்தும் ஒப்பற்ற சாதனம்வாய்என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

* ‘இந்திரன் கெட்டதும் வாயாலே, சந்திரன் கெட்டதும் வாயாலேஎன்று பொருள் பொதிந்த பாடல் ஒன்று உண்டு.

* “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது” (எபி 4:12).

* “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திப 119:105) வார்த்தைகளோ என்றென்றும் நிலைத்திருக்கும்” (1பேது 1:25).

* “ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்” (லூக் 7:7).

* "நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன” (யோவா 6:68).

* சொல் : வாழ்வை மாற்றும் ஊடகம், சொல் : வலிமைபெறும் ஆயுதம், சொல்: வாழ்வை நிர்ணயிக்கும் கருவி.

* வாய்ச்சொல்லில் வாய்மை விளங்கட்டும்.

நற்செய்தி பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு

அன்று அருளரசன் வீட்டுக்கு முன் மக்கள் கூட்டம். தமது கயிறு தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

ஐந்து நாட்கள் பெருமழைக்குப் பின், அன்று சற்று ஓய்ந்திருந்தது. உணவுப் பொருள் வாங்கிச் செல்ல தங்கள் குழந்தை குட்டிகளோடு மக்கள் எல்லோரும் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து அருளரசன் வந்தார். எல்லோரும் ஆவலோடு எழுந்து நின்றனர். அருளரசன் பேசத்தொடங்கினார். “நான் உங்களை உணவு வாங்கிச் செல்ல வரச் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால், இப்போது அதற்கு வழியில்லை. நீங்கள் வேறு எங்கேயாவது போய் வாங்கிக் கொள்ளுங்கள். இங்கே நிற்காதீர்கள். போய்விடுங்கள் என்றார். எல்லோரும் பசி மயக்கத்தாலும், ஏமாற்றத்தாலும் துடித்தனர். சரி...சரி... சீக்கிரம் இடத்தைக் காலிபண்ணுங்க... தாமதம் செய்தீர்கள் என்றால் நாயை அவிழ்த்து விட வேண்டியிருக்கும் என்றார். அப்போது அங்குவந்த அவரது தாய் ஆகாத்தம்மாள், “மகனே, உன் தந்தையாரும் வாக்குத்தவறாதவர், நானும் வாக்குத் தவறாதவள். ஆனால், எமக்குப் பிறந்த நீ மட்டும் வாக்குத் தவறுவது நீயாயமா?” என்றார். உடனே அதை ஏற்றுக்கொண்ட அருளரசன், “அம்மா உமது வாக்கே எனக்கு வேதம்... தந்தை சொல் மிக்க மந்திரமில்லைஎன்று கூறி, அவர்களுக்கு என்ன தருவதாக வாக்களித்திருந்தாரோ அதை வழங்கினார். அவர்கள் வாழ்வு தந்த அந்தத் தாயின் வாய்ச் சொல்லை நன்றியோடு நினைத்துக்கொண்டு, தங்கள் இல்லம் திரும்பினார்கள்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளுக்கான கருத்துகள்

1. திரு அவைப் பணியாளர்கள் சோதனைகளை வெல்லும் ஆற்றல் பெற...

2. நாட்டுத்தலைவர்கள் வாக்கு மாறாதவர்களாய் வாழ ...

3. அன்பிய உறுப்பினர்கள் அனைவரின் தவக்கால நாட்களை அருளின் காலமாகப் பயன்படுத்த...

4. இறைமக்கள் அனைவரும் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கெடுக்க...

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்

1. சோதனைகளை எதிர்கொள்ள பயிற்சியளிக்கும் விதத்தில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தல்.

2. பங்கு அளவில் ஒரு மருத்துவ முகாம் (கண், பொது) நடத்துதல்.

நிறைவு இறைவேண்டல்

வாக்கு மாறாத வானகத்தந்தையே! உம்மைப் போற்றி, புகழ்ந்து, உமது அரும் செயல்களுக்கு நன்றி கூறுகின்றோம். இந்த நாளில் எம் அன்பியக் கூட்டம் இனிதே நடைபெற நீர் புரிந்த அனைத்து நலன்களுக்கும் நன்றி கூறுகின்றோம். குடும்ப உணர்வோடு நாங்கள் இத் தவக்காலத்தை எதிர் கொள்ள எமக்கு ஆற்றல் அளித்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக - ஆமென்.

(அன்பியப் பாடல்)