தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பல ஆயிரம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர்கள் கூறுகின்றனர். சிறுபான்மை வாக்காளர்களை நீக்குவதால் மீண்டும் ஆட்சியை பிடித்து, அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு உத்தியாக இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சி புரியும் கர்நாடகா மாநிலத்தில், வருகின்ற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 9,195 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அப்பெயர்களில் குறைந்தது 8,000 பெயர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் பெயர்கள் என்றும் பெங்களூரு உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் பிப்ரவரி 15 ஆம் தேதி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் (CEO) ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளார்.
“வரவிருக்கும் தேர்தல்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கான ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாக இது தெரிகிறது. பெங்களூரு நகரம் முழுவதிலும் உள்ள பல தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலில் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இதுபோன்ற தவறான செயல்களை தொடர அனுமதித்தால், தேர்தல் செயல்பாட்டின் மீது மக்கள் கொண்டிருக்கும் அளவிட முடியாத நம்பிக்கை அழிக்கப்படும், ”என்று பெங்களூரு உயர்மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜே.ஏ.காந்தராஜ் UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் .
தூய ஜோசப் ஆலயத்தின் பங்குதந்தை விவியன் மோனிஸ், "எங்கள் பங்கை சேர்ந்த கத்தோலிக்கர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் மறைமாவட்டம் முழுவதும் இதை தீவிரப்படுத்தி வருகிறோம்" என்றார்.
சிவாஜிநகரை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷாத், தனது தொகுதியின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் பல ஆயிரம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். மேலும் கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாக்குரிமையைப் பறிக்க அரசியல் சதி நடப்பதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் எஃப். சல்டான்ஹா, , "சிறுபான்மை வாக்காளர்களை அந்நியப்படுத்தும் இந்த இரகசிய முயற்சியை விசாரிக்கவும், அதன் அறிக்கையை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவும்" நீதிமன்றம் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறினார். அகில இந்திய கத்தோலிக்க ஒன்றிய செய்தித் தொடர்பாளர் ஜான் தயாள், "கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும இந்து சார்பு பாரதிய ஜனதா அரசு கடைப்பிடிக்கும் இந்த சட்டவிரோத மற்றும் நெறிமுறையற்ற முறைகளை, மற்ற இந்திய மாநிலங்களிலும் நடைமுறைபடுத்த முடியும்,"என்று குற்றம் சாட்டினார்.