Namvazhvu
மரியா அன்றும் இன்றும் எபேசு சங்கத்திற்கு முன்பாகத் திரு அவை மரபில் மரியா
Saturday, 18 Mar 2023 07:30 am
Namvazhvu

Namvazhvu

புதிய ஏற்பாட்டிற்குப்பின் திரு அவையின் மரபில் மரியா பற்றி அதிகம் பேசப்பட்டது எபேசு சங்கத்தில்தான். இருப்பினும், எபேசு சங்கத்திற்கு முன்பாகவே திருத்தூதர்சார் திரு அவைத் தந்தையர்கள் காலம் தொடங்கியே மரியாவைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே இருப்பதை நாம் காண முடியும்.

. திருத்தூதர்சார் திரு அவைத் தந்தையர்கள் (Apostolic Fathers) எழுத்துகளில்மரியா

திருத்தூதர்சார் திரு அவைத் தந்தையர்களின் எழுத்துகளாகிய - 1. உரோமை நகர் கிளமெந்து கொரிந்தியருக்கு எழுதிய கடிதம், 2. பன்னிரு திருத்தூதர் படிப்பினை நூல் (திதாகே), 3. பர்னபா எழுதிய கடிதம் - இம்மூன்றிலும் மரியாவைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. அந்தியோக்கு நகர் இக்னேஷியஸ் மட்டும்தான் மரியாவைப் பற்றிப் பேசியுள்ளார். அவர், அன்று நிலவிய மறைமெய்யறிவுக் கொள்கையைப் பின்பற்றிய ஒரு பிரிவினராகிய தோற்றக்கொள்கையினர் (Gnostic Docetists) பின்னணியிலும், எபியோனியர்கள் பின்னணியிலும், மரியாதான் தூய ஆவியாரின் துணையுடன் இயேசுவைப் பெற்றெடுத்தார் என எழுதியுள்ளார். அவர் எபேசியருக்கு எழுதிய கடிதத்தில், இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, “மரியாவிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிறந்தவர் இயேசு எனக் கூறுகின்றார்.

தோற்றக்கொள்கையினர், பருப்பொருள் தன்னிலையிலேயே தீயது; எனவே, தூயவராகிய கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து உண்மையிலேயே மனிதராகப் பிறக்க முடியாது என்றனர். எனவே தான், இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார், பாடுகளை ஏற்றார், உயிர்த்தெழுந்தார், விண்ணகம் ஏறிச் சென்றார் என்பவற்றை மறுத்தார்கள். இவை அனைத்தும் வெறும் தோற்றமே என்றார்கள். இவ்வாறாக, இயேசுவின் மானிடப் பிறப்பை இவர்கள் முற்றிலும் மறுத்தனர். இருப்பினும், தோற்றக்கொள்கையினரின் கருத்தை நாம் ஏற்க இயலாது. தூய ஆவியாரின் துணையுடன் மரியாதான் இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை; இயேசு ஒரு வரலாற்று மனிதர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த வலன்சியுஸ் என்பவர், தூய ஆவியாரே குழந்தை இயேசுவை மரியாவின் வயிற்றில் வைத்தார்; மேலும், மரியாவிடமிருந்து இயேசு எதையும் பெறவில்லை எனக் காணவேண்டும் என்றார். எனவே, இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது அவர் இவ்வாறு கூறுகின்றார்: “ஒரு கால்வாயில் தண்ணீர் கடந்து செல்வதுபோல் இயேசு மரியா வழியாகக் கடந்து சென்றார். எவ்வாறு, ஒரு கால்வாயில் ஓடும் தண்ணீர் கால்வாயிலிருந்து எதையும் எடுத்துச் செல்வதில்லையோ, அவ்வாறே, மரியாவிடமிருந்து இயேசு எதையும் பெறவில்லை”. இதை நாம் ஏற்க முடியாது: புனித பவுல்கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்” (கலா 4:4) எனக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.

எபியோனியர்களைப் பொறுத்தமட்டில், மரியா கன்னியாக இருந்தே தூய ஆவியாரின் துணையுடன் இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பதை அவர்கள் மறுத்தார்கள். மாறாக, மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்தவர்தான் இயேசு என்று கூறினார்கள். மேலும், இவர்கள் தத்தெடுப்புக் கொள்கையை (Adoptionism) முன்மொழிந்தார்கள். இவர்களைப் பொறுத்தமட்டில் இயேசு ஒரு சாதாரண மனிதர்; ஆனாலும், அவர் மோசேயின் சட்டங்களைப் பின்பற்றிச் சிறந்த அறவாழ்வு வாழ்ந்த ஓர் உன்னதமான மனிதர். எனவே, இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது இயேசுவைத் தன் மகனாகத் தந்தை தேர்ந்தெடுத்தார் என்றார்கள்: “தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது (லூக் 3:22) என லூக்கா நற்செய்தி கூறுகிறது. இதனால், இயேசு தொடக்கத்தில் இருந்தே கடவுளுடன் உள்ளார் என்பதை எபியோனியர்கள் மறுத்தார்கள்: “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது (யோவா 1:1). மேலும், “வாக்கு மனிதரானார் (யோவா 1:14) என்பதை இவர்கள் ஏற்காது, இயேசுவை ஒரு சாதாரண மானிடப் பிறவியாகப் பார்த்தார்கள். இந்த மூன்று திரிபுக்கொள்கைகளுக்கும் பதில் வழங்கும் விதமாகத்தான் அந்தியோக்கு இக்னேஷியஸ் என்பவர் எழுதியுள்ளார்.

இவ்வாறாக, திருத்தூதர்சார் திரு அவைத் தந்தையர்கள் மரியாவைப் பற்றி அதிகம் எழுதாததற்கு இரண்டு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

1. தொடக்ககாலத் திரு அவையில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, இறப்பு-உயிர்ப்பு, பணிவாழ்வு, பிறப்பு ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். மேலும், இயேசுவுக்குச் சார்பாகவும் எதிராகவும் இருந்தவர்கள் பற்றி நற்செய்தி ஆசிரியர்கள் எழுதினார்களே தவிர, மரியாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றவில்லை.

2. தொடக்ககாலத் திரு அவை மலர்ந்த வேளையில் அன்று காணப்பட்ட சமயச் சூழலையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கிறித்தவச் சமயம் யூதச் சமயத்தில் இருந்து பிறப்பெடுத்த ஒன்று. யூதச் சமயத்தைப் பொறுத்தவரை அது ஒரே ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட ஒன்று. அங்குக் கடவுளைப் பற்றிய பார்வையில் எவ்விதப் பன்மைத்தன்மைக்கும் இடம் இல்லை. மேலும், பல கடவுள் கோட்பாடு கொண்ட, பெண் தெய்வங்கள் உட்பட, சமயங்களை யூதர்கள் தாழ்வாகக் கருதினர். இப்பின்னணியில் யூதச் சமயத்தில் இருந்து கிறித்தவச் சமயத்தைத் தழுவிய தொடக்ககாலக் கிறித்தவர்களும் இயேசு கிறிஸ்துவே ஒரே ஆண்டவர் என்பதை மட்டுமே அறிக்கையிட்டனர். வேறு யாருக்கும் தங்களின் சமய நம்பிக்கையில் முக்கியத்துவம் தரவில்லை. காரணம், இயேசு கிறிஸ்துவைத் தவிர்த்து வேறு யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தங்களின் சமயத்தையும் பிறவினத்துச் சமயமாகக் கருதி, தங்களின் சமயத்தை யூதர்கள் தாழ்வாகக் கருதிவிடுவார்கள் என்ற எண்ணம் தொடக்ககாலத் திரு அவையில் நிலவியது. எனவேதான், திருத்தூதர்சார் திரு அவைத் தந்தையர்களின் எழுத்துகளில் மரியாவைப் பற்றிய குறிப்பு அதிகம் காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

. மரியா தலைமையிலான பெண்கள் இயக்கம்!

திரிபுக்கொள்கைகளைப் பற்றி ஆய்வு செய்த எப்பிபானியுஸ் (4 ஆம் நூற்றாண்டு) என்பவர் மட்டும்தான், மரியா தலைமையிலான பெண்கள் இயக்கம் தொடக்ககாலத் திரு அவையில் இருந்ததாகக் கூறுகின்றார். திரு அவையின் தொடக்ககாலத்தில் இக்குழு கோலிரிடியன் (Collyridian) குழு என அழைக்கப்பட்டது எனவும், அவர்கள் பெண்களைத் திருநிலைப்படுத்தியதாகவும் கூறுகின்றார். அதேவேளையில், திரு அவையில் அன்று நிலவிய படிநிலை அமைப்புக்கு எதிராக அவர்கள் இருந்தார்கள் எனவும் கூறுகின்றார். மேலும், மரியாவைக் கடவுளின் தாய் (Theotokos) எனத் திரு அவை அறிவித்ததுகூட ஒருவகையில் மரியா தலைமையிலான இயக்கத்தை அங்கீகாரம் செய்ததன் அடையாளம் என அவர் உரைக்கின்றார். அவர்களைத் திரு அவைக்குள்ளாக இணைக்கும் ஒரு முயற்சியாக இதனைக் காணவேண்டும் என்கின்றார் எப்பிபானியுஸ். (இன்றைய கிறித்தவப் பெண்ணியலாளர்கள் ஒருவகையில் தொடக்கத் திரு அவையில் காணப்பட்ட கோலிரிடியன் குழுவோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது). இருப்பினும், இவரே தனது இந்தக் குழு பற்றிய ஆய்வைவரலாற்றுப் புனைவு என்கின்றார். இவரைத் தவிர மரியா தலைமையிலான பெண்கள் இயக்கம் பற்றி வேறு யாரும் கூறா நிலையில் இன்று இக்குழு தொடக்கத் திரு அவையில் இருந்தது என்பதை யாரும் ஏற்பது இல்லை. எனவே, இக்குழு மரியா வணக்கம் எழுச்சி பெறத் துணையாய் இருந்திருக்க முடியாது என்பது பலரும் ஏற்கக்கூடிய கருத்தாய் உள்ளது.

(தொடரும்)