போர்த்துக்கீசியர்களின் எதேச்சதிகாரப் போக்கு
இஸ்லாமியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பரதவர்கள் போர்த்துக்கீசியரின் பிடியில் சிக்கியது வேதனையானது. கோவா ஆளுநர் மார்ட்டின் அல்போன்சோ பரதவ குழந்தைகளை மிகுந்த பாசத்துடன் அணுகி ஆதரித்தார். ஆனால் 1539 இல் அவர் போர்த்துக்கல் திரும்பியவுடன் முத்துக்குளித்துறையை ஆக்கிரமித்த போர்த்துக்கீசிய அதிகாரிகள் பரதவர்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துக்கொண்டனர்.அதிக வரிகளை வசூலித்து அவர்களின் உழைப்பை பெரிதும் சுரண்டினர்.
போர்த்துக்கீசிய அதிகாரிகளின் மோசடி வாழ்வை கோவா மறைமாவட்ட முதன்மைகுரு தனது மடலில் கடுமையாக சாடுகிறார். இவ்வாறு பரதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு பலர் போர்த்துக்கீசிய படையில் வீரர்களாக பணியாற்றினர். எனவே கொச்சி மறைவட்ட பகுதியின் ஆயரின் பதிலால் அருள்தந்தை மிக்கேல்வாஸ் 11 பிரான்சிஸ்கன் குருக்களை முத்து குளித்துறைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்த 20,000 பரதவர்களுக்கு திருமுழுக்களித்தனர். ஜான் தெ குருசு தகவலின் படி நான்கு குருக்கள் முத்துக்குளித்துறை வந்தனர் என்கின்றார். ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்கு பெற்றதால் போர்த்துக்கீசியர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முத்துக்குளித்துறையில் தங்கள் ஆளுமையை நிலை நாட்ட பரதவர்களை எல்லா நிலையிலும் பயன்படுத்திக்கொண்டனர். இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் கிறிஸ்தவத்தை தழுவியது தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆன்மீகத் தந்தையரின்றி தவித்த பரதவ கிறிஸ்தவர்கள் பரதவர்களுக்கு திருமுழுக்களித்த அருள்தந்தையர்கள் சில காலம் மட்டுமே இவர்களுக்கு ஞான அறிவை புகட்டி திருவருட்சாதனங்கள் வழங்கினர்.
அந்நாட்களில் பெரும்பாலும் பிரான்சிஸ்கன் துறவிகளும் ஒரு சில கோவா மறைமாவட்ட குருக்கள் மட்டுமே இருந்தனர். கோவா, மும்பை, மங்களூர், கொச்சின், மயிலாப்பூர், நாகப்பட்டினம், யாழ்ப்பாணம், கொழும்பு என பல தளங்கள் இருந்ததால் போதுமான அருட்பணியாளர்களை கோவா மறை மாவட்டம் வழங்க முடியவில்லை. வந்த சிலரும் வேலைப்பளு, வெயில் போன்ற காரணிகளை சொல்லி வெளியேறினர். இதனால் பரதவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் தங்கள் பழைய வாழ்வை தொடரும் அவல நிலை ஏற்பட்டது. கிறிஸ்து, கிறிஸ்தவம் போன்ற எந்த மறையறிவும் இன்றி முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில் பரதவர் வாழ்ந்தனர். இச்செய்தி போர்த்துக்கல் மன்னரை எட்டவே அவர் வருந்தினார். மேலும் பலர் இப்பகுதியில் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளக்கூடும் என நம்பினார். எனவே திருத்தந்தை மூன்றாம் பவுலை அணுகி முத்துகுளித்துறைக்கு என்று சில அருட்பணியாளர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். எனவே ஸ்பெயின் நாட்டில் புனித லொயோலா இஞ்ஞாசியாரால் நிறுவப்பட்ட இயேசு சபையாரிடம் இந்தியாவில் மறைப்பணியாற்ற கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களை வழிநடத்திச் செல்ல தனது தூதுவராக நிக்கோலஸ் என்பவரை திருத்தந்தை நியமித்தார்.ஆனால் அவரோ கப்பல் புறப்படும் நாளில் நோயில்படுத்திட கடைசி நேரத்தில் இஞ்ஞாசியார் இயேசு சபையில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த அருள்தந்தை பிரான்சிஸ் சவேரியாரை இந்தியா செல்லும்படி கேட்டுக்கொண்டார். தலைவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தன் தாயிடம் கூட விடைபெற நேரமின்றி 1540 இல் இந்தியா நோக்கி பயணமானார். தமிழ் மண்ணில் மறைப்பணியில் மாபெரும் எழுச்சி கண்டார்.
போர்த்துக்கீசியருடன் கொண்டிருந்த இணக்கமான உறவால் 1532க்கு பிறகு இந்தியாமற்றும் இலங்கையில் உள்ள அவர்களின் வாணிபக் கழகங்களுக்கு படைவீரர் மற்றும் பல்வேறு பணிகளை ஏற்கும் பொருட்டு பல பரதவர்கள் குடிப்பெயர்ந்தனர். இவர்களின் பரம்பியலால் கிறிஸ்தவரும் புதிய பகுதிகளுக்குச் சென்றது ஆசீர்வாதம். அவ்வாறு யாழ்ப்பாணம், மன்னார், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, தேவனாம்பட்டினம் (கடலூர்) என சோழ மண்டல கடற்கரை எனப் போற்றப்படும் கருமணல் கடலோரங்களில் திருச்சிலுவை நாட்டப்பட்டது. போர்த்துக்கீசியர்கள் பரதவர்களுக்காக இஸ்லாமியர்களை எதிர்த்து போராடும் வரை ஏறக்குறைய 30 ஆண்டுகள்(1502-1532) அவர்களின் கடல் வணிக தளமான காயல்பட்டினம் மற்றும் கீழக்கரை ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்களுடன் பண்டமாற்று முறையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களுடன் போரிட்ட பிறகு தாமிரபரணி ஆறு வங்க கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்த புன்னைக்காயலை போர்த்துகீசியர் தங்கள் துறைமுகமாக உருவாக்கினர். இதனால் கிறிஸ்தவ மறைப்பணிக்கும் புன்னைக்காயல் தலைமை இடமாகத் திகழ்ந்தது. 1580களுக்குப் பிறகுதான் தூத்துக்குடி ஒரு துறைமுகமாகவும் நற்செய்தி பணிக்கு தலைமை இடமாகவும் மாறியது.
புனித சவேரியாரின் நற்செய்திப் பயணம்
(தொடரும்)