Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் சாத்தானின் சூழ்ச்சியும் செபத்தின் வல்லமையும்
Thursday, 13 Apr 2023 12:55 pm
Namvazhvu

Namvazhvu

மனிதனைத் தோல்விக்கு உள்ளாக்க சாத்தான் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது, ஆனால், செபம் இருக்கும் இடத்தில் அதனால் ஒருநாளும் வெற்றியடைய முடியாது என நேர்முகம் ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் Fabio Marchese Ragona என்பவர் எழுதிய, ‘சாத்தானுக்கு எதிராக பேயோட்டுபவர்கள்’, என்ற நூலில், திருத்தந்தை அந்த ஆசிரியருக்கு வழங்கிய நேர்முகமும் இணைக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் தாக்கி, அவர்களிடையே பிரிவினையை, அதாவது, திருஅவையிலும் அதனை விதைத்து ஒருவருக்கு எதிராக ஒருவரைக் கொணர முயல்கின்றது சாத்தான் எனத் தன் நேர்முகத்தில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒருபோதும் பேயோட்டும் பணியைச் செய்தது இல்லை எனவும், பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், தான் புவேனஸ் ஐரஸ் பேராயராக இருந்தபோது தன்னை அணுகிய வேளையில், பேயோட்டும் வல்லுனர்களான அருள்பணியாளர்களிடம் அவர்களை அனுப்பியதாகத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையாகப் பதவியேற்ற பின்னரும் பேயோட்டலில் ஈடுபட்டதில்லை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் அவருடைய பதவிக்காலத்தில் சாத்தானின் தாக்குதலுக்கு உள்ளானார் எனவும், அதை அவர் திறமையுடன் வெற்றி கண்டார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார்.

1972ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், வத்திக்கான் சுவர் கீறல்கள் வழியாக சாத்தானின் புகை உள் நுழைந்துள்ளது என்று கூறியதையும் தன் நேர்முகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசுவையே சோதித்த சாத்தான் எவரையும் தாக்கலாம், அதற்குத் திருத்தந்தையும் விதிவிலக்கல்ல எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கும் சாத்தான் வெற்றியடையாமல் இருக்க நம் செபங்கள் உதவும் என மேலும் கூறியுள்ளார்.