புன்னைக்காயல்
மறைப்பணித் தளம்
இயேசுசபையின் முதல் மறைசாட்சி
1545 இல், புனித சவேரியார் மலாக்கா நோக்கி தன் பயணத்தைத் தொடர முத்துக்குளித்துறை மறைத்தளத்தின் பொறுப்பை இயேசு சபை, இளங்குரு அந்தோனி கிரிமிலானி அவர்களிடமும், திருவிதாங்கூர் மறைத்தளத்தைத் தன்னுடன் பணியாற்றிய மான்சிலாஸ் என்ற மற்றொரு இயேசு சபைக் குருவிடமும் ஒப்படைத்தார். தந்தை அந்தோனி கிரிமினாலி இத்தாலி நாட்டின் பார்மா நகரில் 1520 இல், பிறந்தார். மிக இளம் வயதில் மறைப்பணிக்காக தமிழகம் வந்து, முத்துக்குளித்துறையில் சவேரியாரின் பணிகளைத் தொடர்ந்தார். சிறிது காலம் கன்னியாகுமரியில் தங்கி, தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டார். 1546 இல், பரதவர் மற்றும் கடையர் மக்களின் ஆன்மீகப்பணியை ஏற்ற மறு ஆண்டிலே முத்துக்குளித்துறை மறைத்தளத்தின் தலைவராக சவேரியாரால் நியமிக்கப்பட்டார். தந்தை கிரிமினாலி அர்ப்பணிப்புடன் முத்துக்குளித்துறையின் கீழக்கரை முதல் கன்னியாகுமரி வரை பணியாற்றினார்.
1530 களில் போர்த்துக்கீசியர், பரதவ கிறிஸ்தவர்களின் நலன் பொருட்டு, காயல்பட்டினம் இசுலாமியர்களை தாக்கி ஒடுக்கிய போது, பரமக்குடி நாயக்கர் அனுமதியுடன் பாம்பன் தீவு நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள வேதாளையில் சுங்கச் சாவடி அமைத்து, அங்கு ஒரு போர்த்துக்கீசிய கோட்டையும் எழுப்பினர். வேதாளைசாலை இராமேசுவரம், பாம்பன் தீவை தமிழகத்தின் பிறப் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய சாலையாகும். வேதாளை பண்டகச் சாலையிலிருந்து வணிகப் பொருட்களை தாய்லாந்து (சியாம்) வங்காளம், இலங்கை, சோழமண்டல கடற்கரை பகுதிகள் மற்றும் மியான்மாருக்கு ஏற்றுமதி செய்தனர். கீழக்கரைப் பகுதி இசுலாமியர்கள் தங்கள் வணிகத்திற்காகவும், இந்துக்கள் தங்கள் புனித தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று வரவும், போர்த்துக்கீசியரின் வேதாளை சுங்கச்சாவடியில் கட்டாயக் கப்பம் கட்டினர். இராமேஸ்வரம் திருக்கோவிலிருந்து கப்பம் கட்டவும் கட்டாயப்படுத்தினர். மேலும், தங்கள் மத உணர்வுகளை போர்த்துக்கீசியர்கள் காயப்படுத்தியதாக இந்துக்கள் அவர்கள்மீது பகையுணர்வுக் கொண்டனர். பரதவரின் பொருட்டு தங்களை வீழ்த்திய போர்த்துக்கீசியரைப் பழிவாங்கும் தருணத்திற்காக இசுலாமியர்கள் காத்துக் கிடந்தனர். வேதாளையில் ஆட்சி செலுத்திய போர்த்துக்கீசியர்கள் விஜயநகரப் பேரரசிற்கும் கப்பம் கட்டாமல் சுதந்திரமாக செயல்பட்டதால், மதுரை நாயக்கரின் கோபத்திற்கு உள்ளாகினர். கீழக்கரை கப்பற் முதலாளிகள் மேற்கு கடற்கரையின் தளபதி சாமோரின் உதவியுடன் கோவா பினாரஸ் என்ற போர்த்துக்கீசிய கப்பற் மாலுமியை படுகொலை செய்தனர். மீண்டும் 1538 இல், சமோரின் இலங்கை படைகளுடன் வேதாளையைத் தாக்கியப்போது, போர்த்துக்கீசியர்கள் அப்படைகளை விரட்டி அடித்தனர்.
இவ்வாறு, பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்ட போர்த்துக்கீசியரை அகற்றிட விஜயநகரப் பேரரசு வடுகர்களைக் கொண்ட பெரும் படையை வேதாளைக்கு அனுப்பியது. மதுரை நாயக்கரிடம் முரண்பட்டிருந்த பரமக்குடி நாயக்கர் மட்டும் போர்த்துக்கீசியர்களை ஆதரித்தார். இந்நேரத்தில் கடற்படை தளபதி ஜான் பெர்ணான்டஸ் தலைமையில், 40 போர்த்துக்கீசிய வீரர்கள் மட்டும் வேதாளையில் இருந்தனர். தந்தை கிரிமினாலி வேதாளைப்பகுதியில் தங்கி, மறைபோதகப்பணியில் ஆர்வமுடன் செயல்பட்டார். முரட்டுத்தனமாக திடீரென வடுகப் படைகள் கண்மூடித்தனமாக போர்த்துக்கீசிய வீரர்களை தாக்கிட, அவர்கள் அனைவரும் அருகிலிருந்த தீவுகளில் தஞ்சமடைந்தனர். எனவே, வடுகர்கள் வேதாளையில் அமைந்திருந்த பண்டகச்சாலை, சுங்கச்சாவடி அனைத்தையும் இடித்து, தரைமட்டமாக்கினர். அங்கு வாழ்ந்த அப்பாவி போர்த்துக்கீசிய மற்றும் தமிழ் மீனவக் கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தனர். அவர்களை காத்திடப் போராடிய தந்தை அந்தோனி கிரிமினாலியை ஒரு பெரிய ஈட்டியால் குத்தி, அவரது தலையை வெட்டி வீழ்த்தி, சிதைத்து கொடூரமாகக் கொன்றனர். தந்தையின் உயிரைப் பாதுகாக்கப் போராடிய உபதேசியாரையும் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்தனர். இவ்வாறு, விசுவாசத்திற்காக தமிழ் மண்ணில் வேதாளையில் தந்தை அந்தோனி கிரிமினாலி 1559 ஆம் ஆண்டு, ஜூன் மாதத் துவக்கத்தில் தனது 29 ஆவது வயதில் கொலை செய்யப்பட்டார். இவரே இயேசு சபை மற்றும் முத்துக்குளித்துறையின் முதல் மறைசாட்சி ஆவார். இறப்புக்கு ஈராண்டுகளுக்கு முன்பு தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், திருமறையின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உறுதியுடன் உழைப்பதை குறிப்பிட்டுள்ளார். இக்கோர நிகழ்விற்குப் பிறகு, போர்த்துக்கீசியர்கள் வேதாளைக்கு மீண்டும் திரும்பவில்லை.
ஹென்றி ஹென்றிகஸ் மறைப்பணி
தந்தை அந்தோனி கிரிமிலானி மறைசாட்சி மரணத்திற்கு பிறகு, 1549 இல், தமிழ் அச்சுத் துறையின் தந்தை எனப் போற்றப்பெறும் போர்த்துக்கீசிய இயேசு சபைக்குரு ஹென்றி ஹென்றிகஸ் முத்துக்குளித்துறையின் மறைப்பணித்தலைவராக நியமிக்கப்பட்டார். புனித பிரான்சிஸ் சவேரியார் இதற்கான ஆணையை கடிதம் வாயிலாக அனுப்பிவைத்தார். 1520 இல், போர்த்துக்கல் வில்லாவிகோசா என்ற நகரில் பிறந்த ஹென்றிகஸ் கோய்ம்ப்ரா பல்கலைக்கழகத்தில் திரு அவை சட்டத்தில் பயிற்சிப் பெற்று, 1545 இல், இயேசு சபையில் சேர்ந்து, மறைப்பணிக்காக 1546 இல், கோவாவிற்கு வந்தார். மலாக்காவிற்குச் சென்ற சவேரியார் 1547 இல், முத்துக்குளித்துறைக்கு வந்து, அந்தோனி கிரிமினாலியை மறைப்பணித் தலைவராகவும், ஹென்றிகஸ் அவர்களை புன்னைக்காயல், தூத்துக்குடி, கொம்புத்துறை மற்றும் சில கிராமங்களின் ஆன்மீகப் பொறுப்பாளராக நியமித்து விட்டு, மீண்டும் மலாக்காவிற்கு திரும்பினார். வைப்பார், வேம்பார் பகுதிகளில் சுதேசிக் குருக்கள் இருந்தாலும், ஹென்றிகஸ் அங்கும் அடிக்கடிச் சென்று, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். புன்னைக்காயலை தனது மறைத்தளமாகக் கொண்டு, தந்தை ஹென்றிகஸ் பணியாற்றினார். இவர் தமிழ் மொழியை சிறப்பாக கற்றுத் தேர்ந்ததால், ஒப்புரவு அருட்சாதனத்தை அனைவருக்கும் வழங்கினார். 1549 ஆம் ஆண்டிற்குப் பிறகு தான், முத்துக்குளித்துறை மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக் கொண்டனர். எல்லாக் கிராமங்களிலும் மக்கள் ஆர்வமுடன் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குக் கொண்டனர். இன்னும் சில கிராமங்களை தந்தையர்கள் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கமடைந்தனர். புனித சவேரியாரால் இயற்றப்பட்ட தமிழ் செபங்களில் சில பிழைகளை உரிய நபரின் துணையுடன் திருத்தி, முறைப்படுத்தி, மக்களுக்கு வழங்கினார். 1551 இல், முத்துக்குளித்துறையில் 30 ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை, களிமண் மற்றும் மரத்தால் எழுப்பப்பட்டு, தென்னை கீற்றுகளால் வேயப்பட்டிருந்தன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வாலயங்கள் நிறைய மாற்றங்களைக் கண்டு, ஆலயப் பீடங்கள் அழகுற அலங்கரிக்கப்பட்டும், ஆலயங்கள் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன. 1571 இல் தான், கற்களால் ஆன முதல் ஆலயம் இலங்கை மன்னார் தீவில் எழுப்பப்பட்டது. 1581 இல், கிறிஸ்தவர் மற்றும் இந்துக்களின் பெரும் பொருளாதார உதவியுடன் முத்துக்குளித்துறையில் முதல் கற்கோவிலாக திருச்சிலுவை ஆலயம் மணப்பாட்டில் கட்டப்பட்டது.
பெண்களுக்கான ஆதரவுக் குரல்
புனித சவேரியாரைப் போன்று ஹென்றிகஸ் அடிகளாரும் சிறார் மறைக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். காலை, மாலையும் நடந்த வகுப்புகளில் சிறுவர் மட்டுமே பங்கேற்றனர். சிறுமிகள் ஆண் பிள்ளைகளோடு இணைந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்ணுற்ற ஹென்றிகஸ் காலையில் சிறுமிகள், மாலையில் சிறுவர்கள் என மறைக்கல்வி வகுப்புகளை ஏற்பாடு செய்து, சிறுமிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்தினார். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு அன்று இளையோருக்கு காலையும், மாலையும் மறைக்கல்வி வகுப்புகள் நடைப்பெற்றன. தமிழ் குருவானவர் பிரான்சிஸ் கொய்லோ அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட “நம்பிக்கை அறிக்கை” தகுந்த விளக்கங்களோடு இவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. திருப்பலி மற்றும் விழாக்களில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தனர். ஆண், பெண் இருபாலரும் இணைந்து திருப்பலி மற்றும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தி, பெண்களை ஆலய நிகழ்வுகளுக்கு திரட்டினார். வெள்ளிக்கிழமை வயதான மற்றும் கைம்பெண்களுக்கு மறையறிவு கற்பிக்கப்பட்டது. ஞாயிறு திருப்பலிக்குக்கூட செல்லமுடியாமல் வீட்டு வேலைகளை மட்டும் செய்து வந்த பெண்ணடிமைகளையும் மீட்டு, அவர்களையும் திருப்பலியில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு, பெண்கள்வாழ்வில் ஒளி ஏற்றினார்.
மறைப்பணியில் பொது நிலையினரின் தோழமை
(தொடரும்)