துன்புறும் சகோதரர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், உடனிருக்கவும், அமைதிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு உதவவும் திருத்தந்தையர்கள் மேற்கொள்ளும் உலகளாவியப் பயணங்களுக்கு இத்தாலிய விமானங்கள் பெருமளவில் உதவி வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்தாலிய விமான நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஏறக்குறைய 300 பேரை சந்தித்து மகிழ்ந்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறமை, கவனிப்பு மற்றும் கவனத்துடன் இவ்விமானங்களை இயக்க உதவும் அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
திருத்தூதர் பேதுருவின் வாரிசுகளான திருத்தந்தையர்கள், பூமியின் எல்லைகளில் அமைதி மற்றும் நம்பிக்கையின் நற்செய்தியைக் கொண்டு செல்ல விமானப் பயணங்கள் உதவுகின்றன என்றும், திருத்தந்தையின் இறக்கைகளாக இத்தாலியின் முதன்மை விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மக்கள், சமூகங்கள், கிறிஸ்தவர்கள், பிற மத நம்பிக்கையாளர்கள், நல்லெண்ணமுள்ள ஆண், பெண் போன்றோரை சந்திக்க இவ்விமானப் பயணங்கள் உதவுகின்றன என்றும், காணொளி அழைப்பில் சந்தித்து பேசுவதை விட நேரில் சென்று சந்தித்து பேசுவது மிகவும் முக்கியமானது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
1964 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி திருத்தந்தை தூய ஆறாம் பவுல் இத்தாலிய விமானத்தில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தை எனவும், புனித பூமிக்கான பயணத்தை மிகவும் விரும்பியவர், இரண்டாம் வத்திக்கான் பொது அமர்வின் முடிவில் அதை உற்சாகத்துடன் பிறருக்கு அறிவித்தவர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் நினைவு கூர்ந்தார்.
திருத்தந்தை புனித ஆறாம் பவுல் 9 முறை இத்தாலிக்கு வெளியே திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ளார், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் தனது 27 வருட தலைமைத்துவப் பணியில் 104 பன்னாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் என்பதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் இரண்டு வாரங்களில், கடவுள் விரும்பினால், 41வது திருத்தூதுப் பயணமாக ஹங்கேரிக்குச் செல்ல இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.