பெந்தகோஸ்தே அனுபவத்தை தங்கள் ஆன்மீக வாழ்வின் இதயமாகக் கொண்டுச் செயல்படும் ‘பேறுகளின் சமூகம்’ என்ற கத்தோலிக்க அமைப்பின் 50 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அவர்களை திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
வளர்ந்துவரும் நாடுகளில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டி செயலாற்றிவரும் இச்சமூகத்தைப் பாராட்டிய திருத்தந்தை, சிரமங்களிடையே வாழும் இளையோர், போதிய சத்துணவின்றியும், மாற்றுத்திறாளிகளாகவும் வாழும் சிறார், ஏழ்மையில் வாடும் குடும்பங்கள், வாழ்க்கைத் துணையற்ற தாய்மார்கள் ஆகியோருக்கு உணவும் நலஆதரவுப் பணிகளும் ஆற்றுவதை சுட்டிக்காட்டி, அவர்கள் எழ்மைப் பகுதிகளில் மருத்துமனை, கண் சிகிச்சை முகாம், பல் மருத்துவம் போன்றவைகளை நடத்தி வருவதையும் பாராட்டினார்.
பயன்படுத்தித் தூக்கியெறியும் நுகர்வுக் கலாச்சாரத்தில் வாழும் இன்றைய சமூகத்தில், மக்களின் பிரச்சனைகளுக்கு செவிமடுக்க மையங்களை உருவாக்கிச் செயல்பட்டு வருவதையும், துன்புறுவோர் தனிமையில் கைவிடப்பட்டதாக உணரக்கூடாது என்ற நோக்கத்தில் சிறைகளிலும் இந்த செவிமடுத்தல் பணியை ‘பேறு பெற்றோர் சமூகம்’ செய்து வருவதையும் குறிப்பிட்டு தன் நன்றியையும் திருத்தந்தை வெளியிட்டார்.
விடுமுறைக் காலத்தைச் செலவழிக்க வேறு இடங்களுக்குச் செல்வோருக்கு திருப்பலி, ஆன்மீக உதவி போன்றவைகளை வழங்கிவருவதையும், இளையோருக்கென பயிற்சி முகாம்களை நடத்துவதையும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார். புகழ்வாய்ந்த திருத்தலங்களில் அனைத்துலக கூட்டங்களை ஏற்பாடுச் செய்தல், புனித பூமிக்கு திருப்பயணிகளை அழைத்துச் செல்லல் போன்றவைகளையும் இந்த ‘பேறுபெற்றோர் சமூகம்’ செய்து வருவதையும் திருத்தந்தை பிரான்சுஸ் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.