Namvazhvu
ஞாயிறு – 28.05.2023 தூய ஆவியார் பெருவிழா (பெந்தகோஸ்து ஞாயிறு) திப 2:1-11, 1 கொரி 12:3-7,12-13. யோவா 20:19-23
Friday, 26 May 2023 05:12 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பெந்தகோஸ்து பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்று, நமது தாயாம் திருஅவையானது தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றது. ஆண்டவர் இயேசு, தான் சீடர்களுக்கு வாக்களித்தது போல, தான் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்ற ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவரை துணையாளராக தன் சீடர்கள் மீது பொழிகிறார். தூய ஆவியானவரை பெறுவதற்கு முன்பு, சீடர்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள, யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, ஆண்டவர் இயேசுவை விட்டு ஓடினார்கள், ஆண்டவர் இயேசுவை மறுதலித்தார்கள். இயேசுவே போய் விட்டார், இனிமேல் நமக்கு ஏன் இந்த வம்பு என்று எண்ணி, தங்கள் பழைய தொழிலுக்கே திரும்பினார்கள். ஆனால், எப்பொழுது தூய ஆவியானவரை துணையாளராக பெற்றார்களோ, அந்நேரம் முதலே ஆண்டவர் இயேசுவுக்காகவும், அவரின் நற்செய்திக்காகவும், இறையாட்சிக்காகவும் எத்தகைய சாவையும், எந்நேரத்திலும் எதிர்கொள்வதற்கு தயாராய் இருந்தார்களோ, அந்த அளவிற்கு தூய ஆவியானவர் அவர்களை திடப்படுத்தி, உறுதிப்படுத்தி, வழி நடத்தினார். உண்மையை வெளிப்படுத்துபவர் தூய ஆவியானவர். இயேசு கிறிஸ்து என்னும் உன்னதமான உண்மையை இவ்வுலகின் கடையெல்லைவரை வெளிப்படுத்த, சீடர்களுக்கு துணையாய் இருந்தவர் தூய ஆவியானவர். இந்த பெந்தகோஸ்தே பெருவிழாவிலே தூய ஆவியின் துணையை நாமும் வேண்டுவோம். நமது தாயாம் திருஅவையை தூய ஆவியானவர் தொடர்ந்து வழிநடத்தவும், இயேசு கிறிஸ்து என்னும் உண்மையை உலகிற்கு உரக்க பறைசாற்றவும், தூய ஆவியாரின் துணை நாடி இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

தூய ஆவியானவர் நெருப்பு போன்ற நா வடிவிலே சீடர்கள்மேல் இறங்கி வர அவர்கள் பறைசாற்றிய நற்செய்தியை பல மொழி பேசும் மக்களும் தெளிவாய் புரிந்து கொண்டார்கள் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவரே இயேசுவே ஆண்டவர் என சொல்ல முடியும். தூய ஆவியாரின் செயல்பாடுகள் நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியின் திருமுழுக்கினால் நாம் ஒரே உடலாகிறோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. தூய ஆவியாரை பொழிபவரே! இப்பெந்தகோஸ்தே பெருவிழாவில், தனது பிறந்தநாளை கொண்டாடும் உமது திரு அவை, தூய ஆவியாரின் கொடைகளையும், கனிகளையும் உமது திருப்பணியாளர்கள் வழியாக உலக மக்கள் அனைவருக்கும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் தேவனே! உலகை ஆளும் தலைவர்கள் அநீதிக்கும், வன்முறைகளுக்கும் துணைபோகாமல், உண்மையை உணர்த்தும் தூய ஆவியானவரின் வழி நின்று மக்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஒற்றுமையை உருவாக்குபவரே! நாங்கள் பல குடும்பங்களாக இருந்தாலும், இப்பங்கின் இறைமக்கள் என்ற முறையில் தூய ஆவியை பெற்றிருக்கும் நாங்கள் வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மன்னிப்பளிப்பவரே! தூய ஆவி பெற்றவர்கள் பாவங்களை மன்னிப்பவர்கள் என்பதை நற்செய்தியில் கேட்டறிந்த நாங்கள், ஒப்புரவு எனும் அருட்சாதனத்தை கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்காமல், தெய்வ பயத்தோடு அதைப்பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்களை படைத்தவரே! பல சபைகளாக பிரிந்திருக்கும் நாங்கள், உமது தூய ஆவியால் இணைக்கப்பட்டு, மீண்டும் ஒரே கத்தோலிக்கத் திருஅவையின் மக்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.