Namvazhvu
சிறுகதை: கனவே கலையாதே!
Saturday, 17 Jun 2023 05:39 am
Namvazhvu

Namvazhvu

ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, ஐந்து வருடங்கள் ஆனது அவர்களுடைய மகிழ்ச்சி யைப் பார்ப்பதற்கு.

ரவி ஒரு விவசாயி. அவனுக்கு பத்து ஏக்கருக்கு மேல் நிலங்கள் உண்டு. செல்வியும் ஒரு விவசாயி என்பதால், இருவரும் அவர்களுடைய நிலத்திற்கு அருகிலேயே உள்ள வீட்டில் வசித்து, விவசாயத் தில் கவனம் செலுத்தி வந்தனர். திருமணம் முடிந்து, ஒரு வருடம் கடந்திருந்தத் தருணம் அது.

“யம்மா...டி ஏதாவது?” செல்வியின் அம்மா, செல்வியிடம் போனில் இழுத்துக் கேட்டாள்.

“இருந்தா சொல்ல மாட்டேனா, சொல்றேம்மா” எனப் பேசிக்கொண்டே அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவரைப் பார்த்தாள் செல்வி. ரவி புன்முறுவலை உதித்த வண்ணம் இருந்தான்.

“யாருட்ட பேசுனாலும், மறக்காம இத மட்டும் கேட்காம இருக்க மாட்டேங்குறாங்க” முணங்கினாள் செல்வி.

“கல்யாணம் முடிச்சோமா, புள்ளைய பெத்தோ மான்னுதான் எல்லாரும் பாக்குறாங்க. அவுங்க அவுங்களுக்கு இருக்குற பிரச்சினைய யாரு பாக்குறா?” ரவி சொல்லிக் கொண்டிருக்கும்போது, செல்வி ரவியின் முகத்தைப் பார்த்தாள்.

“அதுக்குத்தான் இப்ப எல்லாம், கேக்குறவுங்கக் கேட்டுக்கிட்டே இருக்கட்டும்னு, எதையும் கண்டுக்காம நானும் விட்டுருவேங்க.”

“அப்படியே இரு செல்வி. நமக்குக் கொடுக்குறத கடவுள் கட்டாயம் கொடுப்பாரு” எனச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியில் சென்றான் ரவி.

இருவரும் தங்களுக்குள் வைத்திருந்த ஆழமான அன்பாலும், நம்பிக்கையாலும் தொடர்ந்து மனம் தளராமல் பயணித்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் தன்னுடைய அம்மாவிற்குப் போன் பண்ணி, “யம்மா, புழு பூச்சி வளர்றதுனா என்னம்மா?” என செல்வி கேட்டாள்.

“யாருடி கேட்டா?”

“இப்ப இதுவா முக்கியம்? அப்படினா என்னம்மா?”

“அதப் போயி ஒன்ட்ட யாரு கேட்டா?” என முணங்கியவளிடம், “யம்மா, இப்பச் சொல்லப் போறியா இல்லையா?” எனக் கறார் குரலில் கேட்டாள் செல்வி.

“யம்மாடி, புழுவ ஓர் எடத்துல விட்டா, அது ஒரே எடத்துலதான் காலம் பூராம் கெடக்கும். ஆனா, பூச்சி அப்படி இல்ல. கொஞ்சம் வளர்ந்தவுடனே, செறகு மொளச்சு வேற எடத்துக்குப் பறந்து போயிரும். புழுவ வந்து பையனாவும், பூச்சிய வந்து பொண்ணாவும் சொல்லுவாங்க. அதத்தான் கல்யாணம் முடிச்ச வங்கக்கிட்ட நாசுக்கா புழு பூச்சி வளருதான்னு கேப்பாங்க” எனச் சொன்ன அம்மாவிடம், “ஓ... அப்படியா” எனச் சொல்லிக் கொண்டே பக்கத்து வீட்டு மூதாட்டி அவளிடம் கேட்டதை நினைத்துப் பார்த்தாள் செல்வி.

அருகில் விளையாடும் சிறு குழந்தைகளின் சிரிப் பில் ஏங்கிப் போன செல்வி “எனக்கு ஒரு கொழந்த உண்டாகலையே” எனத் தனக்குள்ளே அடிக்கடிக் கேட்டுக்கொண்டு, புலம்பிக் கொண்டிருந்தாள்.

இரண்டு வருடங்களைக் கடந்தும் எந்ததொரு ‘புழு-பூச்சி’ வளர்வதற்கான அறிகுறியும் இல்லாத தால் பயத்தோடு மருத்துவரை அணுகினர். மருத்து வரின் ஆலோசனையை ரவியும், செல்வியும் தீவிர மாகக் கடைப்பிடிக்க, செல்வியின் அம்மாவோ கோவில் கோவிலாகச் சென்று வேண்ட ஆரம்பித்து விட்டாள். திருமணம் முடிந்து நான்காவது ஆண்டில் செல்வி கர்ப்பமாயிருப்பதை மருத்துவர் உறுதி செய்ய, மிகுந்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள். அடுத்த ஒன்பது மாதங்களில் அழகான பையன் பிறக்க, அவனுக்கு ‘இனியவன்’ என்று பெயர் வைத்த ரவி - செல்வி, அவன் விரும்பிக் கேட்கும் எந்தப் பொருளுக்கும் தடை விதிக்காமல் வாங்கிக் கொடுத்தனர். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீடு வந்த இனியவன், “அம்மா, இன்னைக்கு தமிழ் டீச்சர் எங்க கிளாஸ்ல எல்லாருட்டையும் ‘வாழ்க்கையில என்ன ஆவீங்க?’ன்னு கேட்டாங்க?” எனச் சொன்னான்.

“நீ என்ன சொன்ன?” செல்வி கேட்டாள்.

“நா டாக்டர் ஆவேன்னு சொன்னேன்”

“டாக்டரா? அடி ஆத்தி! ஏம்புள்ள டாக்டரா?” அமர்ந்திருந்த தனது மடியில் இனியவனை வாரி அணைத்து முத்த மழையைப் பொழிந்தாள் செல்வி.

அம்மாவின் முகத்தை வருடிக் கொண்டே, “இனி மேலு என்ன ‘டாக்டர் இனியன்’னு கூப்புடும்மா. சரியா?” எனக் கேட்டவன் முகத்தில் “என்னோட தங்கம். டாக்டர் இனியவன் செல்லம்” எனச் சொல்லிக் கொண்டே, இனியவனின் கன்னத்தைச் செல்லமாகக் கடித்து, திரும்ப முத்த மழையைப் பொழிந்தாள் செல்வி. செல்வியும், ரவியும் இனிய வனின் பாசத்தில், இருப்பில் நிம்மதியான வாழ்வைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் முழு ஆண்டு விடுமுறை யில் தேனி அருகில் இருக்கும் அம்மாச்சி வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் கழிக்கும் இனியவன், அந்த வருடமும் தனது ஆறாவது முழுப் பரிட்சையை முடித்துவிட்டு அம்மாச்சி வீட்டிற்கு அப்பா- அம்மா வோடு கிளம்பி விட்டான்.  போன மூன்றாவது நாள் அம்மாச்சி வீட்டிற்கு எதிர்ப்புறம் இருந்த இளங்கோ வுடன் சைக்கிளில் வெளியில் சென்றான் இனியவன்.

“இந்தக் குளத்துல குளிப்போமா?” சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த இனியவன் கேட்டான்.

“ம்..... குளிக்கலாம். துண்டு கொண்டு வரலையே” இளங்கோ சொல்ல, “பரவா இல்ல. ஜட்டியோடக் குளிச்சுட்டு, டவுசர போட்டுக்குவோம்” என இனிய வன் சொன்னவுடன், ‘சரி’ என இளங்கோ சொல்லி சைக்கிளை நிறுத்தினான். இருவரும் சட்டை, டவுசரைக் கழற்றி குளத்தின் கரையில் வைக்க, இனியவன் முதலில் தண்ணீருக்குள் இறங்கினான்.

“டேய், பார்த்து. உள்ள போயிடாத. ஆழமா இருக் கும்” இளங்கோ சொல்ல, “ம்... சரிடா” எனச் சொல் லிக் கொண்டே உள்ளே போனான் இனியவன்.

“சூப்பரா இருக்குடா” எனச் சொல்லிக் கொண்டே இருந்தவன், கொஞ்ச நேரத்தில் அருகில் உள்ள அடர்ந்த சகதியில் தடுமாறி வலது காலை வைக்க, அவனை அப்படியே உள்ளே இழுத்து விட்டது. கரங்களை தண்ணீரில் அடித்துத் தத்தளிக்க, பயத்தில் கத்த ஆரம்பித்தான். 

“டேய்... டேய்...” எனக் கத்திக்கொண்டே வேகமாக இனியவன் அருகில் சென்ற இளங்கோவனும் அந்தச் சகதியில் மாட்டிக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் இருவரும் அப்படியே கட்டிப் பிடித்தவாறு நீரில் மூழ்கிப் போய்விட்டனர். மதியம் வரை வீட்டிற்கு வராத இனியவன் - இளங்கோ அவர்களின் குடும் பத்தினர்கள் அவர்களைத் தேட ஆரம்பித்தனர்.

குளத்தில் நின்ற சைக்கிளையும், கரையில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவர்களின் டவுசர் சட்டைகளை யும் கண்டு குளத்தில் இறங்கித் தேட ஆரம்பித்த னர். அந்தக் குளத்தில் இருந்து அருகில் உள்ள மற்ற ஊர் குளங்களுக்கும் நீர் சென்றுக் கொண்டிருந்த தால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே, தேனியின் காவல்துறை மற்றும் தீய ணைப்பு மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் உடனே வந்து தேடினார்கள். இரவு பதினோரு மணி வரைத் தேடியும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! தேடுதல் வேலையை மறுநாள் அதிகாலையில் திரும்பவும் தொடர்ந்தார் கள். அப்பொழுது, குளத்தில் இருந்து நீர் வெளியில் செல்லும் கால்வாயில் நூறு மீட்டர் தூரத்தில், ஒரு பள்ளத்தில் இருவரின் உடலும் சொருகிக் கிடந் ததைத் தூக்கி மீட்டனர்.  இருவரின் உடல்களைப் பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறிக் கதறி அழுதார்கள்.

“அஞ்சு வருசம் தவமா இருந்து பெத்தேனே! டாக்டர் இனியவன்னு கூப்பிடச் சொல்லுவியே ராசா! இப்ப எங்கள இப்படி விட்டுப்புட்டு போயிட்டியே தங்கம்! ஏஞ் செல்லம், எனக்குன்னு யாரு இருக்கா? நீ எங்க வூட்டு டாக்டருன்னு பெரியப் பெரிய கனவ எல்லாம் வச்சுருந்தோமே. அய்யோ... இப்ப எங்கப் போவோம்?” எனக் கேட்டுக் கொண்டே அழும்போது கூடியிருந்த ஊர் மக்கள் கண்ணீர் விட்டு அழ ஆரம் பித்து விட்டனர். இருவரின் உடல்களைத் தேனி யின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றும் போது, ரவியும், செல்வியும் அந்தக் குளத்தின் கரையிலே புரண்டு துடி துடித்தனர்.

இனியவன் என்ற பிம்பம் மட்டும் அவர்களை விட்டுச் செல்லவில்லை. மாறாக, இனியவனால் கட்டியெழுப்பப்பட்ட கனவும் குளத்திலேயே கரைந்து கலைந்து விட்டதாகவே நினைத்துத் துடி துடித்தது, அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் மிகுந்தத் துக்கத்தில் ஆழ்த்தியது.