இறையருளால் தமிழ் நாடு-பாண்டிச்சேரி ஆயர்களாகிய நாங்கள், நிகழும் 2023 ஆம் ஆண்டின் பேரவைக் கூட்டத்திற்காக, ஜூலை 9, ஞாயிறு முதல் 13, வியாழன் வரை கோயம்புத்தூர் ஆயர் இல்ல வளாக ஜீவஜோதி ஆசிரமத்தில் கூடி வந்து ‘இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்களும், நமது பதிலிறுப்பும்’ என்னும் மையப்பொருளில் சிந்தித்தோம். இன்றைய இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார எதார்த்தங்களைக் காலத்தின் அறிகுறிகளாகக் கண்டு, அவற்றை ஆய்ந்தறிந்து, இறைவார்த்தையின் ஒளியில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் என்னென்ன என்பதைத் தெளிந்து தேர்ந்தோம். அவற்றை உங்களோடு பகிர்வதன் மூலம், நாம் இணைந்து பயணிக்கும் திரு அவையாகச் செயல்பட முடியுமென நம்புகின்றோம்.
பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள், சாதிகள், சமயங்கள் என வேற்றுமைகள் இருப்பினும், நம் நாட்டில் வாழும் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுணர்வு கொண்டே வாழ்ந்து வருகின்றோம். ஆனால், அண்மைக் காலங்களில் எப்போதுமில்லாத வகையில் பன்மைத்துவம் புறந்தள்ளப்பட்டு, எல்லாத் தளங்களிலும் ஒற்றைத் தன்மை திணிக்கப்படுவதைக் கண்டு பெரிதும் வருந்துகின்றோம். சமயத்தால் கிறிஸ்தவச் சிறுபான்மையினர் என்றாலும், நாம் இந்தியர் என்பதிலும் சமயம் கடந்து, இந்திய மக்கள் அனைவரோடும் சகோதர உறவில் வாழ்வதிலும், ஒருமித்து இந்திய நாட்டின் உயர்வுக்காய் உழைப்பதிலும் பெருமிதம் கொள்கின்றோம். இந்நாட்டின் ஒருமைப்பாட்டை, இறையாண்மை, சமத்துவ, சமய சார்பற்ற, ஜனநாயக குடியரசாகக் கட்டமைக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினையும், அது உறுதிப்படுத்துகின்ற நீதி (Justice), தன்செயலுரிமை (Liberty), சமத்துவம் (Equality), உடன் பிறப்புணர்வு (Fraternity) போன்ற மானுட நேய விழுமியங்களையும் நாம் மிக உயர்வாகப் போற்று கின்றோம்.
இக்காலத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் சாதி, சமய, இன வன்முறைகளையும், வெறுப்பு அரசியல் போக்குகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும், குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளையும் நாம் நன்கு அறிவோம். இவை அனைத்தும் நமக்குக் கவலையையும், வருத்தத்தையும் தருகின்றன. இந்திய அரசியலமைப்பிலும், ஜனநாயக விழுமியங்களிலும் ஆழ்ந்த பற்று கொண்ட அனைவரையும் இவைகள் அச்சுறுத்துகின்றன. இத்தகையச் சூழலில், இந்திய ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் காப்பதும், வலுப்படுத்துவதும் நம் அனைவரின் முக்கியக் கடமையும், பணியும் ஆகும் என உணர்கின்றோம்.
“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” (யோவா 10:10) என்ற நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின்படி, இந்தியாவில் பன்மைத்துவத்தோடு எல்லா மக்களும் வாழ வேண்டும் என்பதும், மனித மாண்போடு கூடிய சமத்துவ வாழ்வு பெற வேண்டும் என்பதுவுமே நம் நிலைப்பாடு. “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா 17:21) என்ற இயேசுவின் உள விருப்பத்தின்படி, இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் வேற்றுமை களைந்து, ஒற்றுமையில் வாழ வேண்டும் என்பதுவுமே நம் இறைவேண்டல்.
கடந்த காலங்களைப் போன்று கல்வி, மருத்து வம், சமூக மாற்றுப்பணிகள் போன்றவற்றில் ஏற்றத் தாழ்வில்லாமல், நாட்டு மக்கள் எல்லாரும் இன்புற்று வாழ இயேசுவைப் போல தொடர்ந்து தொண்டாற்றுவதே நம் இறையாட்சிப் பணி! எத்தகைய இடர்கள், துயர்கள், எதிர்ப்புகள் வரினும், துணிவோடு இயேசுவின் பணியை இந்திய நாட்டில் தளராமல் செய்வதே நம் திரு அவையின் இலட்சியம்!
இந்திய ஜனநாயகம் எதிர்கொள்கின்ற சவால்களுக்குத் தமிழ்நாடு-பாண்டிச்சேரி திரு அவை எத்தகைய பதிலிறுப்பைத் தர கடவுள் அழைக்கிறார் எனத் தேர்ந்து தெளிந்து, கீழ்வரும் சில செயல் திட்டங்களை மறைமாவட்டங்கள், பங்குகள், இயக்கங்கள், பக்த சபைகள், அருள்பணிக் குழுக்கள், அன்பியங்கள் என அனைத்துத் தளங்களிலும் முனைந்து செயல்படுத்திட நாங்கள் முன் மொழிகின்றோம்.
1. இந்திய நாட்டின் ஆன்மாவாகத் திகழும் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து, மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அருள்பணிக் குழுக்கள் அனைத்தும் தங்களது முதன்மையான பணியாகக் கொண்டு செயல் படுத்த வேண்டும்.
2. கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல் அருள்பணிக் குழுக்கள், சிறுபான்மையினர் கூட்டமைப்பு, திருவருள் பேரவை போன்ற அமைப்புகள் நம் மறைமாவட்டங்களில் உயிரூட்டப்பட்டு, அவற்றை உறுதியோடு செயல் படுத்த ஆவன செய்ய வேண்டும்.
3. அன்பியங்கள், அருள்பணிக் குழுக்கள், பங்குகள் மறைமாவட்ட அளவில் நம் கிறிஸ்தவ வட்டங்களைக் கடந்து, சமயச் சார்பற்ற மானுட ஒருமைப்பாட்டுக்காக உழைக்கும் அமைப்புகளோடு இணைந்து செயல்பட வேண்டும்.
4. சமூக ஊடகங்கள் வாயிலாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அது குடிமக்களுக்கு வழங்குகின்ற உரிமைகளையும், கடமைகளையும் பரவலாக்கம் செய்வதிலும், அச்சட்டத்திற்கு எதிரானவற்றை எதிர்த்து, உண்மையை மக்களுக்குக் கொண்டு செல்வதிலும் திரு அவையினரான நாம் அனைவரும் ஊக்கமுடன் செயல்பட வேண்டும்.
மனித மாண்பும், உரிமைகளும் மதிக்கப்படும் சமத்துவச் சமுதாயமே இயேசு விரும்பும் இறையாட்சிச் சமூகம்! இச்சமூக உருவாக்கப் பணியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடனிருப்பும், அன்னை மரியாவின் அருள்துணையும் நம்மோடு இருப்பதாக!