மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கல்தேய வழிபாட்டு முறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள், கல்தேய வழிபாட்டு முறையின் தலைவராக 2013 ஆம் ஆண்டு அரசுத் தலைவர் ஜலால் தலபானி அவர்களால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போதைய அரசுத் தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் அவர்கள் கர்தினால் சாக்கோ அவர்களை அப்பொறுப்பிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, தலைநகரிலிருந்து வெளியேறி ஈராக்கின் குர்திஸ்தானிலுள்ள ஒரு துறவு மடத்தில் வசிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஈராக்கில் கிறிஸ்தவச் சமூகம் எண்ணற்றத் துன்பங்களை அனுபவித்து வரும் இவ்வேளையில், இத்தகைய ஒரு நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது வருந்தத்தக்கது. ஈராக்கில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலைகளில் நடுநிலையாகச் செயல்படும் கத்தோலிக்க சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் விதமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.