Namvazhvu
என்று மாறும் இந்த அவல நிலை? பெண் சமத்துவம்
Thursday, 03 Aug 2023 11:22 am
Namvazhvu

Namvazhvu

“பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்” என்கிறார் அறிவர் அம்பேத்கர். நம் நாடு பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடுகிறது. ஆனால், அறிவர் அம்பேத்கர் விரும்பிய சமூக முன்னேற்றம் இன்னும் சாத்தியமாகவில்லையே! பெரியார் விரும்பிய சமூக மாற்றம் எங்கே போனது? பெண்களைத் தெய்வங்களாக வழிபடும் நம் சமூகம், இன்றும் தம் வீட்டுத் தெய்வங்களை ஓர் உயிராகக் கூட மதிக்கவில்லையே!

‘Living in together’ உறவில் வாழ்ந்த சரஸ்வதி வைத்யா என்னும் 32 வயது காதலியை, 56 வயதான மனோஜ் சாகினி என்ற ஆண் 12 அல்லது 13 துண்டுகளாக வெட்டி, அதை குக்கரில் வேக வைத்து அதை தூக்கி எறிய, நெகிழிப் பைகளில் நிரப்பிய சம்பவம் மகாராஷ்ரா மாநிலம் தானேயில் அண்மையில் நடந்தது. இது பலரையும் பதை பதைக்கச் செய்தது.

அது மட்டுமல்லாமல், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் பா.ஜ.க. எம்.பி.யால் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு நீதியைத் தேடியும், உரிமைகளுக்காகப் போராடியும் இந்த நாட்டில் நியாயம் கிடைக்கவில்லை.

நாகர்கோவில் பகுதியில் காதலனை ‘வேலைக்குப் போ’ என்று சொல்லியும், கேட்கவில்லை என்பதால், மன வருத்தத்தில் பேச மறுத்த காதலியை ‘அரிவாளால் வெட்டிக் கொன்ற காதலன்’ எனப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

பெண்களுக்கான ‘தன் சுதந்திரம்’ குறைந்து கொண்டு வருவதற்கான முக்கியக் காரணம், நம் சமூகத்தில் நிலவி வரும் ஆணாதிக்கச் சிந்தனை தான். பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்துவது இயல்பு தான் எனும் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு, நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது.

பெண்கள் இணைந்தாலே பிரச்சினை என்ற மனோபாவமும், பெண்களைக் கொண்டே பெண்களை எதிரியாக்குவதும் ஆணாதிக்கச் சமூகத்தின் சாதுர்யம்.  இதை சில பெண்களும் கடைப்பிடிப்பது வேதனைக்குரியதாகும்.

பெண்களின் கருவறை தொட்டு, கல்லறை வரை ஆணுக்குப் பெண் அடிமை என்னும் நிலை மாறவில்லை. தங்களை ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் நிரூபித்த பின்பும், படித்த பெண்களைத்  திருமணத்திற்குப் பின்னர் வேலைக்கு அனுப்புவது அவர்களை ஆணவம் பிடித்தவர்களாக மாற்றும்; அவர்கள் பிறரை, குறிப்பாகத் தங்கள் இணையரை மதிக்க மாட்டார்கள் போன்ற கருத்துகளை முன்வைப்பதும், பெண்கள் சமத்துவ வட்டத்தை விட்டு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றன.  பெண்கள் தனிமனிதச் சுதந்திரத்துடன் வாழ இச்சமூகம் விரும்பவில்லை என்பதை பல நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் பொருளாதார, சமூக, கல்வி முன்னேற்றம் பெற்றிருந்தாலும், ஆண்களைச் சார்ந்திருப்பதையே இச்சமூகம் விரும்புகிறது.  ஒரு பெண் கலெக்டராக இருந்தாலுமே, அவர் தன் இணையரையே சார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. வைக்கம் விஜயலட்சுமி ஒரு பெரிய பாடகராக மலையாள, தமிழ் சினிமாவில் பாடுகிறவர். அவருக்கு 2018 ஆம் ஆண்டு அனூப் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், அவர் தன் கணவர், தான் பாடுவதையே விரும்பாதவர் என்று ஒரு நேர்காணலில் பேட்டி தந்துள்ளார்.

மதம், இனம், மொழி, சமூகம், சாதி என இவை அனைத்துமே பெண்களை அடிமையாக்குகின்றன. பெண்ணின் உடலை அரசியலாக்கி, அதைச் சார்ந்தே இச்சமூகம் சுழல்வது இயல்பாகிவிட்டது.

தந்தையையோ, சகோதரனையோ, இணையரையோ சார்ந்து வாழ்ந்த பெண்கள், விழிப்புணர்வு அடைந்து விட்டால் அதை இவர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது; அப்படியே வேலைக்குச் சென்றா லும் ஆசிரியர் வேலைதான் சரியாக இருக்கும்; தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வேலை செய்தால் பெண்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்பது இந்த 2023 ஆம் ஆண்டில் நான் கேட்ட கருத்துகள்.

பெண்கள் தலையை மூடிக்கொண்டுதான் செல்ல வேண்டும், முடிவெடுக்கும் தளங்களில் பெண்களை விரும்பாமல் செயல்படும் சில மதத் தலைவர்கள், இஸ்லாமியப் பெண் குழந்தைகளுக்குப் பெண் ஆசிரியைகள்தான் பாடம் நடத்த வேண்டும், மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்பவையெல்லாம் அடக்கு முறைதானே!

பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் படித்திருந்தா லும், அவர்களுக்குரிய ஊதியமும், பதவியும் கொடுக்காமல் இறுதிவரை அலுவலகப் பணியாளர்களாகவே வைத்திருப்பதும் சமூகக் கட்டமைப்புதானே!

கணவனால் கைவிடப்பட்ட, இழந்த பெண்கள் வேலைக்குச் சென்றாலே, அவள் பண்பற்றவள் எனப் பெண்களும், அவளை தன்வயப்படுத்துவதும் ஒழியாதவரை இங்கே சமத்துவம் எப்படித் தழைத் தோங்கும்?

பெண்களை ஆண்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என எண்ணும் ஆண்கள், பெண்களை ஒருமையில் அழைப்பது எந்த விதத்தில் பெண் விடுதலைக்கு வித்திடும்?

இன்று பல அலுவலகக் கழிப்பறைகளில் குப்பைத் தொட்டியும் இருப்பதில்லை, சானிட்டரி நாப்கின்களும் இருப்பதில்லை. மாதவிடாய் காலங் களில் பெண்களின் உடல் அசித்தியைத் தணிக்க எத்தனை அலுவலகங்களில் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளன? அந்த நாள்களில் விடுப்புக் கேட்பதும் எளிதாக இருப்பதில்லையே!

தெய்வங்கள் எனப் பெண்களை ஆராதிக்கும் போதெல்லாம், உயிரோடு இருக்கும் பெண்களை நாம் அவமதிப்பது எப்படிச் சமத்துவம்? ஆண்கள் தமக்குப் பிடித்த வாழ்க்கையை வாழும்போது, பெண்களுக்கு மட்டும் ஏன் அனுமதி தேவைப் படுகிறது?

சமீபத்தில் என் உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘நாங்கள்தான் உங்களுக்குச் சுதந்திரம் தந்து விட்டோமே? பிறகு ஏன் இப்பவும் பெண்கள் அடிமைகளாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறீர் கள்?’ என்றார். சுதந்திரம் என்பது கேட்டுப் பெறுவதோ அல்லது கொடுப்பதோ அல்ல; மாறாக, இச்சமூகத்தில் ஒவ்வொருவரும் வாழ வேண்டியது, உணர வேண்டியது.

பெண்களைத் தனித்து வாழ இச்சமூகம் அனுமதிப்பதில்லை. ஒரு பெண் ஏதோ சில காரணங்களுக்காக, அது கல்வி, வேலை எனக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், வீடு தேடி அலையும்போது வரும் பல பிரச்சினைகளில்  இதுவும் ஒன்று. திருமணம் ஆகாதவர்களுக்கெல்லாம் வீடு கிடையாது; அப்படியே கஷ்டப்பட்டு வீடு கிடைத்தாலும், எத்தனை மணிக்கு வெளியே போகிறோம், உள்ளே வருகிறோம் என வீட்டு உரிமையாளர்களே ஒரு கண்காணிப்பு கேமரா போல செயல்படுகிறார்கள்.

பெண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் முதலில் நம்ப வேண்டும். துணிவும், தன்னம்பிக்கையும் வீட்டிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். பெண்களின் நடையில், உடையில், பேச்சில், செய்யும் தொழிலில் சமூக மாற்றத்தை விரும்பாத சமூகத்தின் பார்வை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பெண்கள் தனித்து வாழவே முடியாது, வாழக் கூடாது என்றால், அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்களா?

பெண்களால் எல்லாம் முடியும்! திருமணமாகி முகமே தெரியாத ஒருவனுக்கு மனைவியாகி, அவன் குடும்பத்தைத் தன் குடும்பமாக்கி, அவனுக்காகக் குழந்தை பெற்று, 57 எலும்புகள் ஒரே சமயம் உடையும்போது ஏற்படும் வலியை அனுபவித்து, பிள்ளைகளை வளர்த்து, ஒரு நாள்கூட ஓய்வில்லாமல் குழந்தைகளை ஆளாக்கி, கணவனை இழந்த பிறகும் குழந்தைகளுக்காகவே இறுதிவரை போராடும் பெண்களுக்கு, ஆண் துணையே முக்கியம் என்பது என்னே கொடுமை!

என் நண்பர் ஒருவர், தன் தாயால் வளர்க்கப்பட்டவர். தான் பெற்ற கல்வியால் தன் இரு குழந்தைகளுக்கும் கல்வியைத் தந்து, இருவரையும் சொந்தக் காலில் நிற்க வைத்து விட்டார் அத்தாய்! என் நண்பரோ ஒரு பெரிய தொழில் நுட்பக் கம்பெனியில் மேலாளராகப் பணி உயர்வு பெற்றதோடு மட்டுமல்லாமல், லண்டன் வரை சென்று விட்டார். நான்கு சக்கர வாகனத்தில் தன் தாயோடு தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து சென்னைக்கே சென்று விட்டார். அப்பெண்மணி கார் ஓட்டும்போது எனக்கு மெய்சிலிர்க்கும்! என் நண்பரின் துணிவு எனக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது.

மனதில் எந்தப் பயமும் இல்லாமல், பெற்றோரும், இணையரும், சகோதரனும், நண்பர்களும்  தங்கள் பெண்களை ஊக்குவித்தால் நம் நாடு ஏன் முன்னேறாது? இங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவே அஞ்சும் நம் சமூகம் எப்படி வல்லரசாகும்?

ஒரு பெண்ணுக்குக் கல்வியும், பொருளாதார அதிகாரமும் இருந்து விட்டால் போதும், அவளால் எவ்வளவோ சாதிக்க முடியும்! இங்கு சமத்துவம் நிலைநாட்டப்படாதபோது, பெண் விடுதலை மட்டும் எவ்வாறு வேரூன்றப் போகிறது?

இன்று எத்தனை பெண்களால், தான் விரும்பியதை  பொதுவெளியில்  பேசவும், உண்ணவும், உடுக்கவும், நடக்கவும் முடிகிறது? ஒரு காவலர் பாலியல் தொந்தரவு தருகிறார் என, பட்டதாரிப் பெண் காவல் நிலையம் செல்லும் பொது அப் பெண்ணை நம்புபவர்கள் எத்தனை பேர்? அதை விட்டு விட்டு அப்பெண்ணின் குணத்தையும், நடத்தையையும் குறை கூறும் சமூகத்தில் பெரியாரும், அம்பேத்கரும், அவர்களின் உயரிய கருத்துகளும் எப்படி உயிர் வாழும்?

இவையெல்லாவற்றையும் விட,  சாதி  சமுதாயத்தின் சீர்கேடாகவும்,  சாபக்கேடாகவும் உள்ளது. இங்கேயும் பெண்களை முன்னேற விடாமல் தடுப்பது சாதியே. சாதியக் கண்ணோட்டம் ஒரு பெண்ணை விலங்கினும் இழிவாகத்தான் நடத்துகிறது.  குடும்பத்தைத் தலைகுனியச் செய்ய வேண்டும் என்றால், ஒரு பெண்ணின் உடல்தான் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. பெண்ணின்  மாண்பைச் சிதைத்து விளையாடுவதில் சாதியின் பங்கு அதிகம்.

விளிம்புநிலைச் சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, இந்நாட்டில் அல்லல்படும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். இன்றும் காதல் திருமணங்களுக்கு ஏன் வரவேற்பு இல்லை? சாதி தானே! சாதி மறுத்து திருமணம் செய்த எத்தனை பெண்கள் இன்று தன் துணையைப் பிரிந்து வாடுகிறார்கள் என்பதற்குக் காலமே சாட்சி. ஆணவக் கொலை இன்றும் அதிகரிப்பதற்கும் சாதிதானே முக்கியக் காரணம்! இவை எப்படிச் சமூக மாற்றத்தைக் கொண்டு வரும்?

என்று மாறும் இந்த அவல நிலை? இது மாற வேண்டும். நாம்தான் மாற்ற வேண்டும். பெண்ணடிமைத்தனம் ஒழிய, பெண்களுக்குக் கல்வி வேண்டும். அவர்களின் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வேண்டும். அதற்கான ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். தேவையின் நிமித்தம் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு பாதுகாப்பான சூழல் வேண்டும். ஆறு மணியானாலும், 12 மணியானாலும் பயமில்லாமல் பயணிக்க முடியும் என்ற நிலை வேண்டும். பெண்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

எழுந்தது முதல், தூங்கப் போவது வரை போராட்டம் என்ற நிலை மாறினால், பெண் விடுதலை பல சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும். பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே, அது அவர்களைக் கட்டி வைத்திருக்கும் கட்டுகளிலிருந்து விடுவித்து, பெண் விடுதலையை ஊன்றி வளரச் செய்யும். பெண் விடுதலையே மண் விடுதலையாகவும் அமையும்.