புரட்சி என்பது, மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை. விடுதலை என்பது, நம் அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. அத்தகைய உரிமையில் தளிர்விட்ட புரட்சியில், விடுதலை வேட்கை கொண்டு, அறவழிப் போராட்டத்தால் ‘ஆனந்த சுதந்திரம்’ அடைந்த மாபெரும் பேரினத்தின் மக்கள் நாம்.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஆதிக்க, அடிமைத்தனச் சூழலில் இருந்த ஒவ்வொரு நாடும், விடுதலை பெற்ற பின்பு தனது விடுதலை நாளை ஒரு தேசியத் திருவிழாவாக நாடு முழுவதும் உணர்வுப்பூர்வமாக ஆண்டுதோறும் வரலாற்றை நினைவுகூர்ந்து சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆனால்... ‘இந்தியத் திரு நாட்டில்?’ என்ற கேள்விக்கு, அண்மைக் காலச்சூழல் நம்மைச் சற்றே ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. ‘நாம் பெற்ற விடுதலை யாருக்கானது? எதற்கானது?’ என்றே கேட்கத் தோன்றுகிறது. ‘விடுதலைக் கூறுகளும், அதன் மாண்புகளும் எங்கே போயின?’ என்ற தேடல்கள் கேள்விகளாகி, நம்மைக் கவலைக்கு உள்ளாக்குகின்றன.
நாடு விடுதலை பெற்ற சூழலில், அரசியல்வாதிகள் நேர்மையாளர்களாகவும், மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களாகவும், பொது வாழ்வில் சுயநலம் துறந்து முழுமையான அர்ப்பணம் கொண்டவர்களாகவும் இருந்தனர். இத்தகைய மதிப்பீடுகளில் ஊன்றிய அரசியல் தலைவர்களை இன்று தேடுவது, ஆழியில் விழுந்த அணிகலனைத் தேடுவது போலத்தான்! வஞ்சகம், சூழ்ச்சி ஆகியவற்றின் மூலம் சுய ஆதாயம் அடையத் துடிக்கும், உயர்வான சமூக இலட்சியங்கள் ஏதும் அற்ற மலிவான மூன்றாம் தர மனிதர்கள்தாம் இன்று அரசியலில் காணக்கிடக்கிறார்கள். ஆள்வோர், ஆளத் துடிப்போர் என இருதரப்பிலும் இத்தகையவர்கள்தாம் மலிந்துள்ளனர். மூன்று கால் நூற்றாண்டுகளைக் கடந்த ‘சுதந்திர இந்தியாவின்’ எதார்த்தம் இது!
“அந்நிய அரசுக்கு மாற்றாக, நாம் நமது சுதேச அரசு ஏற்பட்ட பின்பு, அது அனைத்து விதமான சுரண்டல் போக்குகளையும் அப்படியே பின்பற்றினால், விடுதலையின் நிழலைக்கூட நம்மால் காண முடியாது. ஆகவே, இந்தியாவில் படிந்திருக்கும் அனைத்து வர்க்க நலன்களும், சுரண்டல் போக்குகளும் எப்படியும் ஒழித்தாக வேண்டும்!” என்றார் நமது ஒன்றிய தேசத்தின் முதல் பிரதமர் நேரு. அரசியல் அமைப்பின் மூலம் எதை ஒழிக்க நேரு மனமார ஆசைப்பட்டாரோ, அந்த அரசியல் அமைப்பே இன்று அவற்றைப் பாதுகாக்கும் வலிமையான இரும்புக் கவசமாக சிலரால் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘வளர்ச்சி... வளர்ச்சி...’ என்று மார் தட்டிக் கொள்ளும் இந்த அரசின் உண்மை நிலையை அறிய முற்பட்டால் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. தனிநபர் ஆயுள்காலம், உடல் நலம், கல்வியறிவு மற்றும் சராசரி ஊதியம் இவற்றை அளவு கோலாகக் கொண்டு கணிக்கப்படும் ‘மனித வளக்’ குறியீட்டில் 177 நாடுகளுக்கான தர நிர்ணயப் பட்டியலில் இந்தியாவுக்கு 128 வது இடம். அதுவும் 126வது இடத்திலிருந்து 128வது இடத்திற்கு இறங்கியிருக்கிறோம். கடைசி 50 நாடுகளில் ஒன்றாக இந்தியா கடந்த ஒன்பது ஆண்டுகளாக ‘ஒளிர்கிறது!’ இன்னும் சிறப்பாக ஒளிர வைக்க இன்றைய ஒன்றிய அரசின் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘புதிய இயேசுவை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
பழைய சிலுவை!
புதிய வலைகளோடு
புறப்படுகிறான்
பழைய சாத்தான்!’
என்ற கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. அன்று மாற்றானிடமிருந்து விடுதலை பெற்றோம்; இன்று ஏமாற்றுபவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டிய அவல நிலையில் நாம் நிற்கின்றோம். ‘ஆட்சிக் கட்டிலில் அன்று வெள்ளையர்கள்; இன்று கொள்ளையர்கள்’ என்ற கருத்தையும் மறந்துவிட முடியாது.
‘விடுதலை நாளில்
அன்று... மாற்றம் வந்தது.
இன்று... (ஏ)மாற்றம் நின்றது!’
என்ற ‘ஹைக்கூ’ கவிதை உண்மையை உரைக்கிறது.
இந்நிலை மாற வேண்டும்! சமத்துவமும், சகோதரத்துவமும் மீண்டும் தழைக்க வேண்டும்; அவை செழிக்க மக்கள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வேண்டும். விடுதலைக் காற்று வீசுவதற்கு ஜனநாயகத்தின் கதவுகள் திறந்திருக்க வேண்டும். அந்தக் கதவுகள் இற்றுவிடாமல் இருக்கத்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மராமத்துப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், மராமத்துப் பணிகளில் ஊழல் நடந்தேறுவதால், மாளிகை பாழாகிக் கொண்டிருக்கிறது. விடுதலை நாளில் நாம் உறுதி ஏற்போம்! மாளிகை விரைவில் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று!
சமதர்ம முகமும், சமூக நீதியும் இல்லாத இந்த மண்ணின் இழிநிலை இனியாவது மாற வேண்டாமா? யார் மாற்றுவது? எப்போது மாற்றுவது? அத்தகைய மாற்றத்திற்குத் தன்னலமற்றத் தலைவர்களைக் கொண்ட இளைய சமுதாயம் புறப்பட வேண்டும். இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகள் பாராமல், எல்லா மக்களும் தங்கள் விருப்பப் படி வளர்ச்சியடைய முழுமையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு சமூகமும், அதன் தனித்துவம் கொண்ட மொழியும், பண்பாடும், கலாச்சார வளங்களும் பேணப்பட வேண்டும். இந்தியத் திருநாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் போற்றப்பட வேண்டும்; அவை என்றென்றும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
உலக அரங்கில் அகிம்சை வழி இந்திய விடுதலை, பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலைப் போராட்டம், செஞ்சீன நாட்டு விடுதலை, கியூபா புரட்சி என மக்கள் புரட்சியை, விடுதலை வேட்கையைச் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பதிவுகள் ஏராளம். அவை எல்லாம் முடியுமெனில்... ஊழலும், நயவஞ்சகமும், கொடுங்கோலும், அடக்குமுறைகளும், மனித உரிமை மீறல்களும், வன்முறைப் போராட்டங்களும், மதவெறியும் கொண்டு, நாற்றமெடுக்கும் இன்றைய இந்திய பாசிச அரசியலையும் மாற்ற முடியும்.
“மக்கள்... மக்கள் மட்டுமே உலக வரலாற்றை உருவாக்குவதில் எப்போதும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்!” என்றார் மாவோ. “புரட்சியின் பலிபீடத்தில் எங்களின் இளமையைக் காணிக்கையாக்குகிறோம்” என் றார் பகத்சிங். ஆயுதம் ஏந்தாமலே நம்மால் அதிசயங்களைக் காணமுடியும்; அறிவுப் புரட்சியாலே நம்மால் புதிய இந்தியாவைப் படைக்க முடியும்; இளையோரே! சமூகம் குறித்த விரிந்த சிந்தனை உங்களுள் சிறகடிக்கட்டும்; மாற்றம்... உம்மால் கூடும்; இணைந்தால் நம்மால் கூடும். புறப்பட்டு வாருங்கள்; பாரதியின் எண்ணம் கொண்டு புதிய இந்தியா படைத்திடுவோம்!
மனதில் உறுதி கொள்வோம்!
வாக்கினிலே இனிமை கொள்வோம்!
நினைவு நல்லது கொண்டு
நெருங்கின பொருள் கைப்படச் செய்வோம்!
நம்மில் மீண்டும் விடுதலை வேட்கை கொள்வோம்!
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்