Namvazhvu
புதிய தொடர் கண்டனையோ கேட்டனையோ
Thursday, 17 Aug 2023 10:31 am
Namvazhvu

Namvazhvu

நம் வாழ்வின் நீண்ட நாள் வாசகர்களுக்கு என்னை நினைவிருக்கலாம். 2011 ஆம் ஆண்டு வாக்கில் முதலில் சில சிறுகதைகள் எழுதினேன். பிறகு, 2013 நவம்பரிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஞாயிறு மறையுரை எழுதினேன் (அதை இன்னமும் ஞாபகம் வைத்து, சில குருக்கள் என்னிடம் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அடுத்த மாற்றலில், பெரிய பள்ளிக்கூடமோ அல்லது திருத்தலப் பங்கோ கிடைத்து சிறப்படைய வேண்டுமென்று பெரியநாயகியிடம் பிரார்த்திக் கின்றேன்). இடையில் அவ்வப்போது சில கவிதை கள், குறிப்புகள், கட்டுரைகள். தற்போது, என் இனிய நண்பரும், ‘நம் வாழ்வுபத்திரிகையின் புதிய ஆசிரியருமான அருட்திரு செ. இராஜசேகரன் அவர்கள் கேட்டதற்கிணங்க இந்தத் தொடர்!

முதலில், இதன் தலைப்பு பற்றிய ஒரு விளக்கம்: ‘கண்டனையோ கேட்டனையோஎன்பது குறுந்தொகை 75-வது பாடலில் இடம்பெறும் ஒரு கூற்று. ‘நீ கண்டனையோ? கண்டார்க்கேட் டனையோ?’ என்பதுதான் பாடம். படுமரத்து மோசிகீரனார் என்ற புலவர் இயற்றிய இந்தப் பாடலில், நெடுநாள் எங்கோ போயிருந்த தலைவன் ஊர் திரும்பிவர, அந்தத் தகவலை ஒரு பாணன் அரக்கப் பரக்க ஓடிவந்து தலைவியிடம் அறிவிக்கின் றான். Scoop news! பெரிய பரிசாகக் கிடைக்கும் என்பது அவன் எதிர் பார்ப்புஆனால், நிதானம் இழக்காத மருதநிலத் தலைவி பாணனிடம்உண்மை யில் நீதான் தலை வனைப் பார்த்தாயா? அல்லது வேறு யாரும் உன்னிடம் கூறியதை வைத்து என்னிடம் சொல் கிறாயா?” என்று கேட்கிறாள்.

இந்தப்  பகுதியில் இடம்பெறும் தகவல்கள், கருத்துகள் குறித்து நீங்களும் இந்தக் கேள்வியை எழுப்பலாம்: ‘இதெல்லாம் நீயே பார்த்தாயா? அல்லது யாரிடமாவது  கேட்டுச் சொல்கிறாயா?’ ‘இரண்டுமேஎன்பதுதான் என் பதில். இது உண்டு, இது இல்லை என்றில்லாமல், ‘பத்தி எழுத்துஎன்கிற வகைமை தரும் கட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆளுமைகள், புத்தகங்கள், திரைப்படங்கள், இசை, இலக்கியம், வரலாறு, பாடல், கவிதை, கலாச்சாரம், வழிபாடு, ஆலயம்...  என நான் கண்ட, கேட்ட, படித்த, இரசித்த, வியந்த விசயங் களில் சிலவற்றைநம் வாழ்வுவாசகர்களுக்காக சற்று சர்க்கரை தடவி, எல்லாரும் அணுகக்கூடிய ஒரு வெகுசன மொழியில் தருவதே இத்தொடரின் நோக்கம்.

நான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒருவழிப் போக்குவரத்தாக இல்லாமல், உங்கள் பங்களிப்பும் இடம்பெறக் கூடிய ஒரு `dynamicகளமாக இது அமைய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என்னோடு உரையாடுங்கள். ஆசிரியர்  தாராள மனதோடு ஒதுக்கியுள்ள இப்பகுதியின் இரண்டு பக்கங்களில், உங்கள் கேள்விகளுக்கும், விமர்சனங் களுக்கும், கருத்துகளுக்கும், ஏன் படைப்புகளுக்கும் கூட இடம் உண்டு.

அதிகாரப்பூர்வ கோடை விடுமுறையும், சூரியனார்டபிள்-ட்யூட்டிபார்த்ததால் கிடைத்த  சலுகை  விடுமுறையும் முடிந்து, குழந்தைகள் தத்தம் புத்தகச் சுமைகளோடு பள்ளிக்குத் திரும்பி யிருக்கிறார்கள். ஒரு புதிய கல்வி ஆண்டு ஆரம்ப மாகியுள்ளது. தமிழ்நாடு அரசியல், சமூக, ஊடகச்  சூழலில், ஒவ்வொரு ஜூன் மாதத் துவக்கத்திலும், மாணவர்கள் நலன்மீது ஓர் அவசர அக்கறை பிறக்கும். பத்திரிகைகள் தடிமனான கல்விச் சிறப் பிதழ்கள் வெளியிட, தொலைக்காட்சி சேனல்களின்ப்ரைம்-டைம்’  விவாத மேடைகளில் தலை நரைத்த கவ்வியியலாளர்களும், பணம் கொழிக்கும்கல்வித் தந்தையர்களும்’,  கல்வி என்றால் என்ன? மாணவர்கள் என்றால் யார்? கல்வி நிறுவனம் என்றால் என்ன? போன்ற ஆதாரக் கேள்விகளுக் கான பதில்களை, பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து மினரல் வாட்டர் பருகிக்கொண்டே ஆராய்வார்கள், சண்டையிடுவார்கள், மறுப்பார்கள், ஏற்பார்கள். பின் கலைந்து போவார்கள். அடுத்த வாரம் ஊடகங் களுக்கு அடுத்த பிரச்சினை!

கல்வி ஒரு பெரு முதலீட்டு வணிகமாகவும், பாடத்திட்டங்கள் அரசின் கொள்கைப் பரப்புச் சாதனமாகவும்படைப்பூக்கத்துக்கு அதிக இடம் தராத கற்றல்-கற்பித்தல்-தேர்வு முறையும் இருக்கும் வரை, இந்தியக் கல்விச்  சூழல் பெரிதாக மாறிவிடும் என்ற நம்பிக்கையில்லை.

குஸப்பே டோர்னதோரே என்ற இத்தாலிய இயக்குநர் இயக்கி, ஆஸ்கர் உட்பட பல உயரிய விருதுகளைக் குவித்தசினிமா பாரடைசோ’ (1988) என்கிற உலகப் படத்தை  சென்ற வாரம் இரண்டாவது முறை யாகப் பார்த்து இரசித் தேன். அதில் ஒரு பள்ளிக் காட்சி. கணித வகுப்பு. ஆசிரியை, ஒரு மாணவனை கரும் பலகைக்கு அழைத்து ஐந்தாம் வாய்ப்பாட்டை எழுதச் சொல்கிறார்.

ஆசிரியைஐந்தை, ஐந்தால் பெருக்கினால் என்ன வரும்?”

மாணவன், “முப்பது வரும்.”

வகுப்பு கெக்களித்துச் சிரிக்கிறது. ஆசிரியை கோபித்து  மாணவனின் தலையை கரும்பலகையில் முட்டுகிறார்மீண்டும் அதே கேள்வி. இந்த முறை மாணவன் ‘40’ என்கிறான். ஆசிரியை மீண்டும் அவனை பலகையில் முட்டுகிறார். பையனின் நெற்றியில் சிவப்பு வில்லைகள் தோன்றுகின்றன.

முன்வரிசையில் அமர்ந்திருக்கும், சிறுவன் டோட்டோ (படத்தின் கதாநாயகன்) தன் நண்பனுக்கு உதவி செய்ய நினைத்து, அவனை சைகையில் அழைத்து, தன் புத்தகத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தைக் காட்டு கிறான். கிறிஸ்துமஸ் மரம் - கிறிஸ்துமஸ் விழா -டிசம்பர் 25 ஆம் தேதி - கேள்விக்கான பதில் 25. இதுதான் டோட்டோ கொடுத்த துப்பின் விரிவான வடிவம். புரிந்த மாதிரி கரும்பலகை மாணவனும் தலையசைக்க,

ஆசிரியை, “கடைசியா கேட்கிறேன். சரியாக யோசித்துச் சொல். ஐந்தை, ஐந்தால் பெருக்கினால் என்ன வரும்?” என்று கேட்கிறார்.

மாணவன் சிரித்துக் கொண்டேகிறிஸ்மஸ் வரும்என்கிறான்.

5 x  5 = 25. இது மனப்பாடமாக ஒரு மாணவனுக் குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அந்தக் கணித ஆசிரியையின் எதிர்பார்ப்புமனனத்திற்கென்று கல்வி முறையில் ஓர் இடம் இருக்கிறது. மறுப்பதற் கில்லை. ஆனால், அந்தரத்தில் சுழலும் அதே கணிதக் கருத்தை ஒரு காட்சியாகப் பார்த்து, இன்னோர் இயலோடு தொடர்புப்படுத்தி, ஒரு நெருக்கடிச் சூழலில், வார்த்தைகளின் துணை யில்லாமல், அதை விளக்க முயன்ற சிறுவன் டோட்டோ அவரைவிட பன்மடங்கு சிறந்த கணித ஆசிரியராக எனக்குத் தோன்றுகிறான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

திருத்தலங்கள் என்றாலே பிரமாண்ட கோயில், திகட்டும் சுதை வேலைப்பாடுகள் கொண்ட பீடம், பெரிய அரங்கம், நீரூற்றுடன் கூடிய கெபி, கல்யாண மண்டபம், மரியாதை கொடுக்காத செக்யூரிட்டிகள்... போன்றவை கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இது எதுவும் இல்லாமல், ஒரு சிறப்பு  சுரூபத்தையும், பாரம்பரிய பக்தியையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஓர் அந்தோணியார் திருத்தலம் இயங்குகிறது என்பதும், ஜூன் மாதத்தின் மையத்தில் நடைபெறும் அதன் ஆண்டுத் திருவிழாவிற்கு ஏறக்குறைய ஒரு இலட்சம்  பக்தர்கள் வருகிறார்கள் என்பதும் இனிய ஆச்சர்யங்கள்! இடம்-கோகூர். மறைமாவட்டம்- தஞ்சாவூர்.

நாகப்பட்டினம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், கீழ்வேளூர் என்கிற குறுநகரத்தில், முக்கிய சாலையிலிருந்து விலகி, வடக்கே ஐந்து கிலோ மீட்டர், வளைந்து வளைந்து போனால் கோகூர் கிராமம் வரும். ஆட்டோவில் 100 ரூபாய் கேட் பார்கள். எப்போதா வது பஸ் போகும். கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 250- தாண்டாது. கொஞ்சம் வீடுகள். நிறைய வயல்கள். செல் இணைப்பு களாலும், கூரை மேல் குடை வைத்த  ‘டிஷ்சானல்களாலும் மட்டுமே நவீனத்தோடு பரிச்சய மாயிருக்கும் இந்த எளிய கிராமத்தில், ஒரு சிற்றாலயத் தில், பெரிய ஆடம்பரமில்லாமல் எழுந்தருளியிருக்கிறார் கோகூர் அந்தோணியார்.

எப்போது இந்தத் திருத்தலம் உருவானது? எப்போதிருந்து இந்தப் பக்தி இருக்கிறது? யாருக்கும் சரியாகத் தெரிய வில்லை. ஊர்க்காரர்களிடம் கேட்டால், “எங்கள் தாத்தன் பூட்டன் காலத்திலிருந்தே அந்தோணியார் இங்குதான் இருக்கிறார்என்கிறார்கள். பீடத்தை அலங்கரிக்கும் சிறப்புச் சக்தி வாய்ந்த புனித அந்தோணியார் சுரூபம் மரத்தால் ஆனது. உயரம் ஓர் அடிதான் இருக்கும். யாரோ ஆற்றில் தூண்டில் போடும்போது கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.

கோகூர் அந்தோணியார் திருத்தலத்தின் இரண்டு ஆண்டு விழாக்களில் நான் பங்கேற்றிருக்கின்றேன். அது ஒரு விநோத அனுபவம். எள் போட்டால், எள் விழாத கூட்டம்! தேர் திரும்பி வந்த பின்னால் கூட, இரவு முழுவதும் மக்கள் இடைவெளியில்லாமல், அற்புதச் சுரூபத்தைத் தரிசித்து, பொருத்தனைகள் செலுத்துவதை நான் முதலில் அங்குதான் பார்த்தேன். நடுவே ஓர் அரைமணி நேரம் தூய்மைப் பணிக்காக ஆலயத்தை மூடுகிறார்கள். மற்றபடி அறுபடாத, தொடர் வணக்கம். காலை விடிந்ததும் கறுப்பு உடை அணிந்த பெண்கள்-ஆண்கள் சுறுசுறுப்பாக கையில் நெருப்பும், சாம்பிராணியும் ஏந்திக்கொண்டு ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். பக்தர்களில் நிறைய இந்து சகோதர-சகோதரிகள். அந்தோணியார் பெயரைச் சொல்லி, கிடா அறுத்து சோறு போடுகிறார்கள். சேவல் விடுகிறார்கள். தாலிக் கயிறு கட்டுகிறார்கள். பூசை எழுதி வைக்கிறார்கள்.

இந்த வருடம் ஆண்டுத் திருவிழா ஜூன் மாதம் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பெங்களூரு புனித பேதுரு குருமடத்தில் எங்க ளுக்கு இறையியல் சொல்லிக் கொடுத்த காலம் சென்ற பேராசிரியர் Fr. ஜோசப் பிரான்சிஸ் ஒருமுறைஅந்தோணியார் லேசுப்பட்ட ஆளில்லை. அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்று நகைச்சுவையாகச்  சொன்னார்.

வலுவான கட்டமைப்போ, அகல சாலைகளோ, நகரத்தின் வசதிகளோ இல்லாத ஒரு சிறு கிராமத் திற்கு, பாரம்பரிய பக்தியும், ஒரு சிறு சுரூபமும், இத்தனை பக்தர்களை வருடா வருடம் கொண்டு வருகிறதென்றால், இத்தனை விண்ணப்பங்கள் கேட்கப்படுகிறதென்றால், அந்தோணியாரைலேசுப்பட்டவர்என்று யார் சொல்ல முடியும்?  

(இந்த வாரக் கட்டுரை பற்றிய

உங்கள் கருத்துகளை +91 9342389212

என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம்,

எழுத்து வடிவிலோ அல்லது

வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)