Namvazhvu
பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு  (20-08-2023) எசா 56: 1, 6-7, உரோ 11: 13-15, 29-32; மத்15:21-28
Saturday, 19 Aug 2023 07:00 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 20 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் வாசகங்கள் கடவுள், தாம் தேர்ந்து கொண்ட மக்களுக்கு மட்டுமல்ல; மாறாக, உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கடவுளாய் இருக்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இன்றைய நற்செய்தியில், ஒரு கானானியப் பெண், பேய் பிடித்து இருக்கும் தன் மகளுக்காக ஆண்டவர் இயேசுவின் உதவியை நாடுகிறார். ஆனால், ஆண்டவர் இயேசு அப்பெண்ணைப் புறக்கணிப்பது போல தோன்றுகிறது. உண்மையில் ஆண்டவர் இயேசு அப்பெண்ணைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, பொறுமையோடு காத்திருக்கிறார். எதற்காக? அப்பெண் தம்மீது கொண்டிருக்கும் ஆழமான, முழுமையான நம்பிக்கையை அனைவரும் காணும் வண்ணம் வெளிக்கொணர விரும்புகிறார். ஆண்டவர் இயேசு பொறுமையோடு காத்திருந்தார்அப்பெண்ணோ பொறுமையிழக்காமல் ஆண்டவரைப் பின்தொடர்ந்தார். நமது பார்வைக்கு அப்பெண் புறக்கணிப்பட்டதைப் போல தோன்றினாலும், உண்மையில் அனைவரின் முன்பாக அவரது நம்பிக்கைப் பெரிதெனக் காட்டுவதற்காகவும், ஆண்டவரில் முழுமையான நம்பிக்கைக்கொள்ளும் எவருக்கும் ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிவார் என்பதை உணர்த்துவதற்காகவுமே ஆண்டவர் இயேசு அப்படிச் செய்கிறார். நாம் யார் என்பது முக்கியமல்ல; மாறாக, நமது நம்பிக்கை எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம் என்று சிந்தித்தவர்களாய், இத்திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

பிற இன மக்களாக இருந்தாலும், ஓய்வு நாளை கடைப்பிடித்து, ஆண்டவரின் திருச்சட்டப்படி வாழ்ந்து, அவரது உடன்படிக்கையில் நிலைத்திருக்கும் ஒவ்வொருவரின் பலியையும் ஆண்டவர் ஏற்றுக் கொள்வார் என்றுரைக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நீங்கள் பிற இனத்து மக்களாய் இருந்தாலும், ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவரது இரக்கத்தைக் கொடையாகப் பெற்றுக் கொள்ளுங்கள். இதற்காகவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

எங்கள் வானகத் தந்தையே! இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவை, அதன் திருப்பணியாளர்கள் அனைவரும் பாரபட்சமின்றி அன்பை, அமைதியை நாடி வரும் அனைவருக்கும் நற்செய்தியை அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களின் தலைவரே இறைவா! எம் மக்கள், எம் மொழி, எம் இனம் என்று பிரித்து ஆட்சி செய்யாமல், அனைவருக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் தலைவர்கள் நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பரம தந்தையே! எத்தகைய துன்பச் சூழ்நிலையிலும், சோதனையிலும் நாங்கள் உம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையில் இருந்து பின்வாங்காமல், உம்மை மட்டுமே பற்றிக்கொண்டு வாழக் கூடிய மக்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.

எங்கள் அன்புத் தந்தையே! உம் திருமகன்மீது இன்னும் நம்பிக்கையற்ற நிலையில் வாழும் மக்களுக்காக வேண்டுகிறோம். இவர்கள் அனைவரும் குறைவில்லா நம்பிக்கையைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்வழி காட்டும் தந்தையே! எம் பங்கில் உள்ள இளையோர் அனைவரும் தங்கள் உரிமைகளையும், கடமைகளையும், பொறுப்புகளையும் அறிந்து, அதற்கேற்றவாறு தங்கள் வாழ்வை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.