அனைவரையும் அரவணைக்கும் யாவே இறைவன்!
21 ஆம் நூற்றாண்டிலும் சாதியால் நடக்கும் கொடுமைகள் நாடு முழுவதும் ஓய்ந்தபாடில்லை. அம்பேத்கர் சொன்னது போல், சாதி என்பது வெறும் சமூகப் பிரச்சினை என்பதைத் தாண்டி, மனநோய் என்பது நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் பெரிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்துள்ளனர் நேயமற்ற மனிதர்கள் சிலர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறுபுறம் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர்மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு மனித நேயமற்றச் செயல்களில் ஆறறிவு குறைந்துவிட்ட மனிதர்கள் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.
பல நாகரிகங்களைக் கடந்து வந்த நம் இந்திய மண்ணில், இன்றும் சிறுபான்மை மக்களுக்கும், சிறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஆதிக்கச் சக்தியினரால் இழைக்கப்படும் கொடுமைகள் சொல்லி மாளாது. ஏன், கிறிஸ்தவர்களிடமும் இப்படிப்பட்டப் பிரிவினை மனநிலைகள் இருப்பது வெட்கக்கேடு! மனிதநேயமற்ற இச்செயல்களைத் தூண்டும் மனநிலைகளைக் களைந்து, அனைவரும் கடவுளின் உரிமை மக்கள் என்பதையும், அவரது இரக்கம் மனிதன் வளர்த்துக் கொண்டுள்ள பிரிவுச் சுவர்களையும் கடந்து பாயும் தன்மையுடையது என்பதையும் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றது இன்றைய வழிபாடு.
இன்றைய முதல் வாசகம், ஆண்டவருடைய மீட்பு ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ, நாட்டினருக்கோ மட்டுமல்ல; மாறாக, எல்லா மக்களுக்கும் உரியது என்பதை அறிவிக்கிறது. பாபிலோனிய விடுதலைக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் மீண்டும் எருசலேம் செல்லத் தயாரானார்கள். அப்பொழுது பல ஆண்டுகள் இந்த அடிமைத்தனம் நீடித்தபொழுது, சிலர் பிற இனத்தாரோடு திருமணம் முடித்து, அவர்கள் அச்சமூகத்தோடு கலந்தனர். மீண்டும் பிற இனத்தவர்களாகிய இவர்களை இஸ்ரயேல் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள், மீட்புப் பெறத் தகுதியற்றவர்கள், கடவுளால் நிராகரிக்கப்பட்டவர்கள்... சுருக்கமாகச் சொல்லப்போனால் மனிதர்களாக மதிக்கப்படத் தகுதியற்றவர்கள், இறைவனோடு தொடர்பு கொள்ளத்தக்கவர்கள் அல்லர் என அவர்கள் எண்ணினர். இந்தச் சூழ்நிலையில், பிற இனத்தவர்கள் எருசலேம் செல்லத் தயங்கினர். அங்கே சென்றால் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவோம் என அஞ்சி, பாபிலோனிலே தங்கிவிட எண்ணினர். ஆனால், கடவுளோ எவரையும் புறக்கணிக்காமல், ‘அனைவரும் எனக்குச் சொந்தம்’ என்கிறார். அனைவரும் எருசலேம் ஆலயத்தில் பலி செலுத்த, வழிபட உரிமை பெற்றவர்கள் என்கிறார். ‘எருசலேமும், நீங்களும் புதுவாழ்வு பெறுவீர்கள்’ என்கிறார். அனைவரையும் அரவணைக்கும் யாவே இறைவன், ‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு’ என்று சொல்லி தம்முடைய சொந்த மக்களாக ஏற்றுக் கொள்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகம், கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறும் நிகழ்வை மிக அழகாக எடுத்துரைக்கிறது. முதலில், கானானியர்கள் என்பவர்கள் யார் என்று புரிந்துகொள்வோம். பாலஸ்தீன் நாட்டில் யூதரல்லாத முதற்குடியினர் தான் கானானியர் (தொநூ 10:18; 12:6). இஸ்ரயேல் மக்கள் பாலஸ்தீன் நாட்டைக் கைப்பற்றியதும், இவர்கள் வடக்கே பெனிசியா வரை சென்று குடியேறினர். ஆகவே, பெனிசியா பகுதி மக்களும் சில வேளைகளில் கானானியர் என்றே அழைக்கப்பட்டனர் (விப 3:8:17). இப்பகுதிகளில் கிரேக்கக் கலாச்சாரத் தாக்கம் அதிகம் இருந்ததினால், மாற்கு இப்பெண்ணைச் சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த ஒரு கிரேக்கப் பெண் என்று குறிப்பிடுகிறார் (மாற் 7:26).
இவர்கள் கடவுளின் சொந்த மக்களாகக் கருதப்படாதவர்கள். யூதர்கள் இவர்களை இகழ்ந்து ஒதுக் கித் தள்ளினர். யூதர்கள் இந்த இனத்தில் பெண் கொள்வதும், கொடுப்பதும் கிடையாது. இப்படிப் பட்ட தாழ்த்தப்பட்ட ஒரு பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கதறி நிற்கின்றார். “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறுகிறாள் (மத் 15:22). இந்தப் பெண்ணின் கதறலை முதலில் கேட்காதவரைப்போல அமைதி காத்த இயேசு, இந்தப் பெண் கொண்டிருந்த மிகப்பெரும் நம்பிக்கையைக் கண்டு வியப்புறுகிறார்; நலமளிக்கிறார்.
இயேசு கானானேயப் பெண்ணைப் பார்த்து, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” (மத் 15:26) என்று சொல்லும்போது, அவரை ‘நாய்’ என்று சொல்லிவிட்டாரோ என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், உண்மை அதுவல்ல; பிற இனத்துப் பெண்ணை அவமதிக்க வேண்டும் என்பது இயேசுவின் நோக்கமல்ல.
யூத சமூகத்தில் ‘நாய்’ என்ற சொல் ஒருவரை இழிவுப்படுத்தும் சொல்லாகப் பயன்பட்டது. பிற இனத்தார்மீது யூதர்கள் கொண்ட இறுக்கமான மனநிலையால், இவர்களை நாயெனக் கருதும் ஓர் இழிவுச் சொல்லை யூதர்கள் பயன்படுத்தினர். பிற இனத்தார் கடவுள்மேல் நம்பிக்கையில்லாதவர்கள் என்னும் யூதர்களின் எண்ணம் பொய் என்பதை இங்கே எடுத்துக்காட்ட அந்தப் பெண்ணை நம்பிக்கையின் கருவியாக இயேசு பயன்படுத்துகிறார். இந்தப் பார்வையில்தான் இயேசு ‘நாய்’ என்று சொன்ன வார்த்தையையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இவரின் நம்பிக்கையால் வியப்பில் ஆழ்ந்த இயேசு, தம்மைச் சூழ்ந்து நின்ற யூதர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இப்பெண்ணைச் சுட்டிக்காட்டுகிறார். எனவே, இயேசுவால் எப்படி இப்பெண்ணை இழிவாகப் பேசியிருக்கக் கூடும்?
மேலும், பல நூறு ஆண்டுகளாக ஒரு சமூகத்தையே அவமானப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சொல்லாடலை இயேசு இங்கே ஆய்வுக்கு உட்படுத்தி, இந்நிகழ்வு வழியாக, ஒரு சமூகத்தின் வெறுப்பையே நலப்படுத்துகிறார். இந்தக் கானானேயப் பெண்ணின் வேண்டலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பிற இனத்தாரும் மீட்புக்கு உரியவரே என்பதை இயேசு யூதர்களுக்குப் புரிய வைக்கிறார். அவர்களின் வெறுப்பு மனநிலையை உடைக்கிறார். தமது இறையாட்சியிலும், அதன் பயன்களிலும் பிற இனத்தாருக்கும் பங்கு உண்டு என்பதைத் தெளிவுபட உணர்த்துகிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், மீட்புப் பற்றிய மறைபொருளை விவரிக்கும் பொழுது, எல்லாப் பிற இனத்தாரும் மீட்பு அடைந்தோர் சமூகத்தில் வந்து சேருவர். இயேசுவில் நம்பிக்கை கொள்ளாமல், தவறிலே வாழும் இஸ்ரயேல் மக்களும் ஒரு நாள் கடவுளின் இரக்கத்தினால் மீட்பு அடைவர். எனவே, நம் கடவுள் அனைவரையும் அரவணைக்கும் இறைவன் என்றுரைக்கிறார். எனவே,
1. யூதர்கள் - பிற இனத்தார்கள் இவர்களின் பிளவுகளுக்கு இணைப்புப் பாலம் அமைக்க விரும்பும் இயேசுவைப்போல மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் நல்லிணக்கத்தை வளர்த்துக்கொள்வோம்.
2. ஒரு குறிப்பிட்ட இனம், சாதி, சமயத்துக்குத் தான் என மீட்பு ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாந்தரும் அவரது இறையாட்சியில் பங்குபெற வேண்டும் என்பதே இறைவனின் திருவுளமாக இருக்கிறது. இறையாட்சி என்பது யூதருக்கு மட்டு மல்ல, இயேசுவில் நம்பிக்கைக் கொள்ளும் அனைவருக்கும் உரியது என்பதை உணர்ந்துகொள்வோம்.
3. புறக்கணிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், ஏழை எளியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், ஆதரவில்லாத கைம்பெண்கள், தெருக்களில் சுற்றித்திரியும் சிறார், கைவிடப்பட்டோர், அனாதைகள், நோயாளிகள் இவர்களும் நம் வாழ்வோடு இணைத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதைக் கற்றுக்கொள்வோம்.
“ஏனெனில் கடவுள் நம்மீது இரங்கி, நமக்கு ஆசி வழங்கியுள்ளார்” (திபா 67:1).