Namvazhvu
மரியியல் தொடர் 19 மரியாவின் முன்னடையாளங்கள்
Saturday, 19 Aug 2023 08:09 am
Namvazhvu

Namvazhvu

மத்தேயு நற்செய்தியின் தலைமுறை அட்டவணையில் காணப்படும் நான்கு பெண்கள்

மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் பழைய ஏற்பாட்டுக் கதை மாந்தர்கள் நால்வர் இடம் பெற்றுள்ளனர். தாமார், இராகாபு, ரூத்து, பத்சேபா. இந்நால்வரும் எவ்வாறு மரியாவை ‘முன்னறிவிப்பவர்களாய்’ உள்ளனர் எனக் காண்போம். இந்நான்கு பெண்களின் வரலாற்றைப் பார்க்கும்போது பாலியல்பு (Sexuality) என்பது ஒரு பிரச்சினையாக இருப்பதாகத் தோன்றுகின்றது.

தாமார்:  விலைமாதர் போன்று பாசாங்கு செய்து மயக்கிய பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார் (தொநூ 38:6-30). அநீதிக்கு உட்படுத்தப்பட்டபோது தன் மாமனார் யூதா மூலம் தனக்கு வாரிசைத் தேடிக்கொண்ட பெண் இவர்.

இராகாபு: யோசுவா அனுப்பிய இரண்டு ஒற்றர்களைக் காப்பாற்றிய எரிகோ நகர்   விலைமாதாகப் பிழைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்ட பெண் (யோசு 2:1-24).

ரூத்து: மோவாபிய இனத்தைச் சார்ந்தவர். லோத்தின் மூத்த மகள், தனது தந்தையுடன் உறவு கொண்டதால் பிறந்தவர்தான் மோவாபு (‘மோவாபு’ என்பதற்கு எபிரேயத்தில் ‘தந்தையின் மூலமாக’ என்பது பொருள்). இன்றுவரை இருக்கின்ற மோவாபியருக்கு  மோவாபுதான் தந்தையாக உள்ளார் (தொநூ 19:30-38).

பத்சேபா: தாவீதுடன் விபசாரம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்ட பெண் (2 சாமு அலகு 11).

மத்தேயு நற்செய்தியாளர் இந்நான்கு பெண்களையும் தலைமுறை அட்டவணையில் சேர்த்ததற்கான காரணம், இந்நான்கு பெண்களையும் மீட்பின் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு பணியை ஆற்ற கடவுள் அவர்களைத் தெரிவு செய்தார் என்பதோடு, அவர்களும் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைத்தனர் என்பதே.

இவ்வகையில் இந்நான்கு பெண்களுமே மரியாவை ‘முன்னறிவிப்பவர்களாய்’ உள்ளனர். மரியாவும் மீட்பின் வரலாற்றில் ஒரு சிறப்பான பணியை ஆற்ற கடவுளால் தெரிவு செய்யப்பட்டார். மரியாவும் கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். கடவுளின் அழைப்புக்கு ‘ஆம்’ எனக் கூறி, இயேசுவைத் தன் வயிற்றில் கருதாங்கினார்.  இவ்வாறு, மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவின் மூதாதையர் பட்டியலில் காணப்படும் நான்கு பெண்களையும், மரியாவின் ‘முன்னடையாளமாகக்’ காட்டுகின்றார்.

அன்னாவும், யூதித்தும்

பழைய ஏற்பாட்டுக் கதைமாந்தர்களாகிய அன்னா, யூதித்து ஆகிய இருவரையும் கூட ஒருவகையில் மறைமுகமாக மரியாவை ‘முன்னறிவிப்பவர்களாய்க்’ காண முடியும்.

அன்னா (Hannah): பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல பிள்ளைகளைப் பெற்றெடுப்பது என்பது கடவுளின் ஆசியாகக் கருதப்பட்டது. அதே வேளையில், மலட்டுத்தன்மை என்பது அவமானமாகக் கருதப்பட்டது. அன்னா மலடியாக இருந்தார்; இருப்பினும், தனக்குப் பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டி, கடவுளிடம் தொடர்ச்சியாக வேண்டினார் (1சாமு 1:10-13). கடவுளும் அவரின் செபத்தைக் கேட்டார்; சாமுவேல் எனும் பிள்ளையை அன்னா பெற்றெடுத்தார்; அவரைக் கடவுளின் பணிக்கென அர்ப்பணித்தார். இவ்வாறு கடவுள் அவரில் ஆற்றிய செயலைக் கண்டு வியந்து அன்னா மன்றாடிக் கூறியது 1 சாமு 2:1-10 இல் இடம்பெற்றுள்ளது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது; ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!”

லூக்கா நற்செய்தியில் உள்ள மரியாவின் பாடலில் (லூக் 1:46-55) அன்னாவின் பாடல் எதிரொலிப்பதாக விவிலிய அறிஞர்கள் காண்கிறார்கள். இவ்வாறு, அன்னாவின் வரிகளை மரியாவிற்கு ஏற்றிக் கூறுவதன் மூலம், லூக்கா நற்செய்தியாளர் மரியாவையும், அன்னாவையும் தொடர்புப்படுத்துகிறார். அன்னாவைப் போன்றே தாழ்நிலையில் இருந்த மரியாவையும் கடவுள் கண்ணோக்கினார் (லூக் 1:48) எனக் கூறுவதன் மூலம், அன்னாவை மரியாவின் ‘முன்னடையாளமாகக்’ காட்டுகிறார்.

யூதித்து: கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்த யூதித்து என்ற கைம்பெண் மூலம், கடவுள் எவ்வாறு இஸ்ரயேல் மக்களை விடுவித்தார் என்பதை யூதித்து நூல் எடுத்துரைக்கிறது. யூதித்து, கடவுளின் பாதுகாப்பை நம்பித் தனது உயிரையும் பொருட்படுத்தாது, அசீரியர் படையை எதிர்த்துப் போராடுகிறார். “உமது வலிமை ஆள் எண்ணிக்கையைப் பொறுத்ததன்று; உமது ஆற்றல் வலிமை வாய்ந்தோரைப் பொறுத்ததன்று; நீர் தாழ்ந்தோரின் கடவுள்; ஒடுக்கப்பட்டோரின் துணைவர்; நலிவுற்றோரின் ஆதரவாளர்; கைவிடப்பட்டோரின் காவலர்; நம்பிக்கையற்றோரின் மீட்பர்” (யூதி 9:11). இவ்வாறு கடவுளை நம்பிய யூதித்து, இஸ்ரயேல் மக்களைப் பாதுகாக்கும் பணியில் வெற்றி கண்டார். அதற்காக, தலைமைக் குருவாகிய ஊசியாவின் பாராட்டையும் பெற்றார்: “மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னதக் கடவுளின் ஆசி பெற்றவள்” (யூதி 13:18). மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது, எலிசபெத்து உரத்தக் குரலில் “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்” (லூக் 1:42) என்று மரியாவை வாழ்த்திய அந்தக் கூற்றைத் தலைமைக் குரு ஊசியாவின் வாழ்த்துடன் இணைத்துப் பார்க்கின்றனர் விவிலிய அறிஞர்கள். இவ்வாறு, மரியாவின் ‘முன்னடையாளமாக’ யூதித்தைக் காண்கின்றனர்.

2. மரியாவைக் குறிக்கும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள்

I. தொடக்க நூல் 3:15

“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” (தொநூ 3:15). இந்தப் பகுதி எந்தப் பின்னணியில் எழுதப்பட்டதோ, அந்த நோக்கில் அது வாசிக்கப்பட வேண்டும். தொநூ 3:15 பகுதி என்பது பொதுவாக ‘முதல் நற்செய்தி’ (Protoevangelium) என அழைக்கப்படுகின்றது. காரணம், இப்பகுதி மனிதரின் கீழ்ப்படியாமையால் ஏற்பட்ட வீழ்ச்சி பற்றிய பகுதிக்கு அடுத்ததாக உள்ளது; இவ்வாறு, இப்பகுதி மீட்பின் நற்செய்தியை முதல் முறையாக அறிவிக்கும் பகுதியாக உள்ளது. அதாவது, சோதிப்பவனுக்கும், மானிடருக்கும் இடையேயான தொடர் போராட்டத்தில், இப்பகுதியானது கடவுள் வழங்கும் மீட்பின் வாக்குறுதியை விளக்குவதாய் உள்ளது.

தொநூ 3:15 இல் ‘பெண்ணுக்கும், பாம்புக்கும் இடையேயும், பெண்ணின் வித்துக்கும், பாம்பின் வித்துக்கும் (சந்ததிக்கும்) இடையேயும் பகைமை உண்டாகும்’ எனக் காணப்படுகின்றது. இங்கு அழுத்தம் பெறுவது பெண் அல்ல; மாறாக, அவளின் வித்து. இந்தப் பகைமை என்பது பெண்ணுடனோ, பாம்புடனோ நிறைவு பெறவில்லை; அது பெண், பாம்பு ஆகியவற்றின் வித்துக்கும் கடந்து செல்கின்றது. இப்பகைமை இறுதிக் காலம் வரை தொடர்ந்து நடைபெறும்: “அரக்கப் பாம்பு அப்பெண்மீது சினங்கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது” (திவெ 12:17). பாம்பின் வித்து, பெண்ணின் வித்தின் குதிங்காலைக் காயப்படுத்தும் என உள்ளது. இங்குக் ‘குதிங்காலைக் காயப்படுத்தும்’ என்பது  பாம்பு இறுதியில் வெற்றி அடையாது என்பதைக் குறிப்பதாய் உள்ளது. மாறாக, பெண்ணின் வித்து, பாம்பின் தலையைக் காயப்படுத்தும் என உள்ளது. இங்கு ‘தலையைக் காயப்படுத்தும்’ என்பது பாம்பின் (சாத்தானின்) இறுதித் தோல்வியைக் குறிக்கிறது; ‘பெண்ணின் வித்து’ இறுதியில் வெற்றிபெறும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

தொநூ 3:15 இல் காணப்படும் ‘பெண்ணின் வித்து’ என்பது, யாரைக் குறிக்கின்றது எனக் காண வேண்டும். தொநூ 3:15 இல் காணப்படும் பகுதி ‘பெண்ணின் வித்து’ யார் என்பதை விளக்கவில்லை. இதை ஒரு தனிப்பட்ட நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ புரிந்துகொள்ளலாம். திருவிவிலி யத்தின் உடனடிச் சூழலில் (Immediate Context), பெண்ணின் வித்து என்பது பொதுவாக மனுக்குலத்தைக் குறிக்கிறது. சிறப்பாக, ஆபேல் தொடங்கி மீட்படைந்த மனுக்குலத்தைக் குறிக்கிறது.

இருப்பினும், பிற்காலத்திய இறை வெளிப்பாட்டின் பின்னணியில் (பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயான தொடர்பை இவ்வுலகின் தொடக்கத்தில் பார்த்துள்ளோம். அதை இங்கு மனதில் கொள்ள வேண்டும்) தொநூ 3:15 ஐக் காணும்போது, சாத்தானைத் தோற்கடிக்கும் கிறிஸ்துவைக் குறிப்பதாய்ப் ‘பெண்ணின் வித்து’ கருதப்பட்டது. அதாவது, ‘பெண்ணின் வித்து’ என்பது இயேசு கிறிஸ்து எனும் ஒரு தனி நபரைக் குறிப்பதாகவும், அவரின் பணி என்பது சாத்தானின் சக்திகளை அழிப்பதாகவும் கருதப்பட்டது. இதை அவர்தாமே, தம்மைச் சிலுவைச் சாவுக்குக் கையளித்ததன் மூலமாக நிறைவேற்றியதாகக் காணலாம். இவ்வாறாக, நம் அனைவருக்காகவும் பாம்பின் தலை நசுக்கப்படும் அந்நாளைத் திருவிவிலியம் எதிர் நோக்கி உள்ளது எனக் காண வேண்டும்: “அமைதி தரும் கடவுள், சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்” (உரோ 16:20).

பாம்பின் தலையைக் காயப்படுத்துபவர் என்பது மரியாவைக் குறிக்கின்றதா என இங்குக் காண்போம். தொநூ 3:15 இன் மொழிபெயர்ப்புக் காரணமாக, பாம்பின் தலையைக் காயப்படுத்துபவர் மரியா எனத் திரு அவையின் மரபில் நீண்ட காலம் கருதப்பட்டது. புனித ஜெரோம் அவர்கள், திருவிவிலியத்தை இலத்தீனில் மொழிபெயர்க்கும்போது  (Vulgate), “அவன் உன் தலையைக் காயப்படுத்துவான்” (அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும் - எனத் திருவிவிலியப் பொது மொழிபெயர்ப்பில் உள்ளது) என்பதை, “அவள் உன் தலையைக் காயப்படுத்துவாள்” என மொழிபெயர்த்துவிட்டார். அதாவது, எபிரேய மொழியில் ‘hu’ (He) என்பதை ‘Ipsa’ (She) என மாற்றிவிட்டார். இவ்வாறாக, திரு அவையின் நீண்ட கால மரபில், புனித ஜெரோமின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, மரியா என்பவர் பாம்பின் தலையைக் காயப்படுத்துவதாக விளக்கினர். இருப்பினும், இன்று எல்லா விவிலிய ஆசிரியர்களுமே, ‘அவள் வித்துதான்’ பாம்பின் தலையைக் காயப்படுத்தும் என்பதுதான் சரி என ஏற்கின்றனர். எனவே, மூலப் பாடம் மரியாவைக் குறிக்கவில்லை என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து.

இருப்பினும், தொடக்க நூல் 3ஆம் அதிகாரத்தை நாம் முழுமையாக வாசிக்கும்போது, மனிதனின் கீழ்ப்படியாமையையும், கடவுளின் மீட்புத் திட்டத்தையும் முதன் முதல் விளக்கும் விவிலியப் பகுதியாக அது அமைந்துள்ளது; அதாவது, மீட்பரைப் பற்றிய முதல் வாக்குறுதியை அது விளக்குகின்றது. இவ்வாறு, தொநூ 3:15 இல் காணப்படும் பகுதி, நீண்ட காலமாக இறைவாக்கினர்கள் முன்னறிவித்த ஒரு பெண்ணின் வித்தில் இருந்து தோன்றி, ‘வரவிருக்கும் மெசியாவுக்கு’ ஒரு தொடக்கமாக உள்ளது. அந்த மெசியாவை நாம் இயேசுவில் காண்கின்றோம். அவர் மரியா எனும் பெண்ணின் வித்திலிருந்து வந்தவர்.                (தொடரும்)