திருப்பலி முன்னுரை
இன்று நாம், ஆண்டின் பொதுக்காலத்தின் 21 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இந்த ஞாயிறை சமூக நீதி ஞாயிறாகக் கொண்டாட தாயாம் திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் பார்த்து, ‘நான் உனக்கு யார்?’ என்று கேட்கிறார். ‘நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?’ என்ற ஆண்டவர் இயேசுவின் கேள்விக்கு, மற்றத் திருத்தூதர்கள் மக்கள் அளித்த பதிலையே தந்தார்கள். ஆனால், பேதுருவோ, ‘நீர் மெசியா! வாழும் கடவுளின் மகன்!’ என்று தான் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தை ஆண்டவர் இயேசுவுக்குப் பதிலாகத் தருகிறார். இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தைப் பதில் மொழியாகத் தந்த பேதுருவுக்கு ஆண்டவர் இயேசு இறையரசின் திறவுகோல்களைப் பரிசாகத் தருகிறார். தூய பேதுரு ஆண்டவர் இயேசுவை ‘மெசியா’ அல்லது ‘ஆண்டவர்’ என்று அழைப்பது இது முதல் முறை அன்று; இதற்கு முன்பாக கலிலேயக் கடற்கரையிலே மிகுதியான மீன்பாட்டைக் கண்ட பேதுரு, இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, எம்மை விட்டுப் போய்விடும்; நான் பாவி’ என்று கூறுகிறார். ‘நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?’ என்று கேட்ட ஆண்டவர் இயேசுவிடம், ‘நாங்கள் எங்கே போவோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று பதில் மொழி தருகிறார். இவ்வாறு ஆண்டவர் இயேசுவிடம் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தின் வழியாக, ஆண்டவர் இயேசு தனக்கு யார் என்பதைப் பேதுரு வெளிப்படுத்துகிறார். இன்று நமக்குள் ஏற்பட்டிருக்கும் இறையனுபவம் ‘நான் உனக்கு யார்?’ என்று கேட்கும் ஆண்டவர் இயேசுவுக்கு, எத்தகைய பதில் மொழி தரப்போகிறது என்று சிந்தித்தவர்களாய் இந்த ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை
மக்களை நல்வழிப்படுத்த ஆண்டவர் தந்த அரியணையை, மக்களை வதைப்பதற்காகப் பயன்படுத்துகிறபோது, ஆண்டவர் அந்த அரியணையை வேறொருவருக்கு அளிப்பார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஆண்டவருடைய ஞானமும், அறிவும் மிக ஆழமானவை. அவர் தரும் தீர்ப்புகள் மனித அறிவுக்கு எட்டாதவை. அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
கருணைக் கடவுளே இறைவா! உம் திரு அவையின் திருப்பணியாளர்கள், வாழும் கடவுளான நீர், உமது மக்களுக்கு யாராக இருக்கின்றீர் என்பதைத் தங்களது இறையனுபவத்தால் அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தை அருள்பவரே! எமது ஊரையும், நாட்டையும், உலகையும் ஆளும் தலைவர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மக்களை வழி நடத்தாமல், உமது விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களை நல்வழிப்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நீதியை வழங்குபவரே! மதத்தால், இனத்தால், பிரிவு மனப்பாட்டினால் ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீர் நீதியை வழங்கும் அரசராக இருந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அனைத்துலகோரின் ஆண்டவரே! நீதிமன்றங்களில், நீதியை எதிர்நோக்கி இருக்கும் பிற இடங்களில் நீதியை வழங்குவோர் உண்மையாக, நேர்மையாக, நீதியை வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.