Namvazhvu
அன்னை மரியா: எதிர்நோக்கின் விடியல்
Wednesday, 13 Sep 2023 05:57 am
Namvazhvu

Namvazhvu

ஒருவருடைய வரலாறு என்பது ‘பிறந்த நாள்’ என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்குகிறது. ஆகவே, ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் என்பது தவிர்க்க முடியாத நாள். அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்த, வாழ்கின்ற, ஒவ்வொருவருக்கும் அந்நாள் விழாக்கோலம் கொண்டிருப்பது பேரின்பத்தின் வெளிப்பாடு.

குடும்பம், சமூகம், நாடு என விழாவுக்கான எல்கை வட்டம் பரந்து விரியும் சூழலில், அன்னை மரியாவின் பிறந்த நாள்…ஒரு பெருவிழாவாகவே உலகளாவிய திரு அவையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள், உலகோர் மகிழும் உன்னத நாள்; இது மனுக்குலம் கொண்டாடும் மங்கள விழா; திரு அவைச் சிறப்பிக்கும் திருவிழா; அது பெருவிழா!

திரு அவை, திருவழிபாடு கால அட்டவணை நான்கு பெருவிழாக்களைக் கொண்டாட அழைக்கின்றது. கிறிஸ்து பிறப்பு விழா, திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா, திரு அவையின் பிறப்பு விழா (ஆவியார் பெருவிழா) மற்றும் அன்னையின் பிறப்பு விழா.

அன்னை மரியாவுக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் திரு அவையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆயினும், முத்தாய்ப்பாய் அமைவது அவரின் பிறப்புப் பெரு விழா; இது மனுக்குலத்திற்கு விடியலைப் பறைசாற்றிய விழா. அன்னையின் பிறப்புப் பெரு விழா அவரின் அமல உற்பவப் பெருவிழாவுடன் தொடர்பு கொண்டதே! மனுக்குல மீட்பரின் பிறப்பிற்கு நல்லதோர் இல்லிடமாய் இறைவன் தேர்ந்துகொண்ட மரியாவை, அவருடைய தாய் அன்னாள் வயிற்றில் கருத்தரித்த நாள் முதலே மாசு அணுகாது மாசில்லாக் கன்னிகையாக, அழகு ஓவியமாக, இறை அருள் நிறைந்த பெட்டகமாக, அருள் மிகப் பெற்றவராகப் பிறக்கச் செய்தார். ஆகவேதான் திருத்தந்தை பிரான்சிஸ், “நம் அன்னை மரியா முழுமையும் அழகு; ஏனெனில், அவர் அருள் நிறைந்தவர்” என்கிறார்.

அழகு... அழகு... நம் அன்னையோ பேரழகு!

அவ்வாறே,

“பால்நிலவு திருமுகமே பளிங்கு ஒளி கருவிழியே

வில்புருவ மணியழகே கார்கூந்தல் நிறையழகே!

மலர்விழியின் ஒளியழகே ஒளிசிதறும் விரல் அழகே

செவ்வான நிறஅழகே திருக்கரம் வடித்த பேரழகே!

தேவன் வரைந்த ஓவியமே தேவலோகக் காவியமே

மாசில்லாக் கன்னிகையே மாபரனின் தாய்மரியே!

வானக நீலம் வாங்கித் தொடுத்தநல் நீல அங்கி

பெண்மையின் தாய்மை பொங்கிப்

பேரருள் நிறைகுடம் தங்கி!

வானத்துச் செங்கதிரில்

பொன்னொளி வீசிநிற்கும் பேரொளியே அருள்நதியே தேவலோகத் திருமதியே!”

என்கிறது ‘திருக்குடும்பத் திருக்காவியம்’.

இத்தகைய அருள் மிகப் பெற்ற நம் அன்னையின் சிறப்பைக் கூறும் திருத்தந்தை புனித இரண் டாம் யோவான் பவுல், “மரியா அருள்மிகப் பெற்றவர் என்பது, அவர் முழுமையாகத் தெய்வீக அன்பினால், எல்லா நன்மைத்தனங்களால், முழுமையான எழிலினால், முழுமையான புனிதத்தால் நிறைந்திருந்தார்” என்றே விளக்கம் தருகிறார் (She was filled with Divine Love, all goodness, all beauty and all holiness). கடவுளின் கண்களில் விலையேறப்பெற்று, மீட்பின் திட்டத்திற்கு வழியமைக்க கடவுள் முன் குறித்த இந்த ‘விடியற்கால விண்மீனின்’ பிறப்பைக் கொண்டாடும் நாம், அவரை அனைத்துலகோரின் நம்பிக்கையாகவும், மீட்பின் விடியலாகவும், அந்த விடியலின் எதிர் நோக்காகவும் எண்ணிப் போற்றுவது தகுமே.

இன்றைய நாளின் திருவழிபாட்டுச் செபங்கள், ‘நீதியின் கதிரவனை உலகிற்குத் தந்த கன்னி மரியின் பிறப்பைக் கொண்டாடுவோம்’ என்றே அழைப்பு விடுக்கின்றன. மரியாவின் பிறப்பை இயேசுவின் மீட்புச் செயலோடு ஒப்பிடும் தூய அகுஸ்தினார், “மரியா - பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கிய மலர்த்தோட்டம். அவரிடமிருந்தே உன்னத லீலி மலர் மலர்ந்து மணம் வீசியது” என்கிறார். ஆகவே, அன்னையின் பிறப்பு விழா மனுக்குலம் கொண்டாட வேண்டிய மங்கள ஒளிவிழா; மட்டில்லாப் பெருவிழா!

ஒவ்வொருவருடைய பிறப்பும் வரலாறாக அமையும் பொழுதில், ஒருசிலருடைய பிறப்பே வரலாறைப் புரட்டிப் போடுகிறது; புதிய வரலாறு படைக்கிறது. அந்த வரிசையில் அன்னையின் பிறப்பு மானுட விடியலுக்கு முன்னுரை எழுதியது; புதிய தொடக்கத்தைத் தந்தது.

அன்னையின் பிறப்பு நாளில் இரு செய்திகளை உள்வாங்கிக் கொள்ள உறுதி எடுப்போம்.  ஒன்று, அன்னை நம் பயணத்தின் வழித் துணை. கூட்டொருங்கியக்கத் திரு அவையாகக் கூடும் நமக்கு, நம் வாழ்வியல் பயணத்தில் அவர் என்றுமே துணையிருக்கிறார் என நம்பிக்கைக் கொள்வோம். அன்னையை நம் பயண பாதுகாவலியாக, வாழ்வின் வழிகாட்டியாக, இயேசுவிடம் அழைத்துச் செல்லும் துணையாளராகக் கொள்வோம். தூய லூயி மாண் போர்ட் குறிப்பிடுவது போல, “அவரே, நாம் இயேசுவை அடைய இனிமையான, எளிதான, உறுதியான வழி” எனப் பற்றிக் கொள்வோம்! இரண்டாவதாக, இன்றைய நாளில், அன்னையின் பிறப்பு நாளை உலகப் பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். பெண் குழந்தைகளின் பிறப்பு, வாழ்வு, வாழ்வியல் மேன்மை அடைய அனைத்துத் தளங்களிலும் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்போம்; அவர்களோடு துணை நிற்போம்.

இந்நாளில், வேளை நகர் திருத்தலத்தில் ஆரோக்கிய அன்னையாக, விடியற்கால விண்மீனாக காட்சித் தரும் நம் அன்னை மரியாவை நாடி வருவோம்! அன்னையின் பிறந்த நாளில் புகழ்பாக்களால் அவரை மகிழ்விக்கும் நாம், நாமும் ‘புதுப் பிறப்படைய’ வேண்டுவோம். நமது தனிப்பட்ட வாழ்வும், சமூகமும், இந்திய நாடும் புது விடியல் காண வேண்டுமென மன்றாடுவோம்.

அன்றும், இன்றும் நம் எதிர்நோக்கின் விடியலாக விளங்கும் அன்னை மரியா நம் அனைவருக்கும் ‘புது விடியல்’ தருவாராக!