Namvazhvu
அருளாளர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பம்
Wednesday, 13 Sep 2023 10:50 am
Namvazhvu

Namvazhvu

திரு அவை வரலாற்றில் முதன் முறையாக, பிறக்காத தாயின் வயிற்றில் இருந்த குழந்தை உள்பட, ஒரு குடும்பத்தில் மறைசாட்சியாக மரித்த அனைவரும் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானிய நாசிப்படைகளால் யூதர்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டனர். இத்தகைய நேரத்தில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு, போலந்தின் மர்க்கோவாவில் வாழ்ந்து வந்த ஜோசப் உல்மா மற்றும் விக்டோரியா குடும்பமானது அடைக்கலம் தந்து ஆதரவளித்து வந்தது.

இக்குடும்பம் மிகவும் அன்பானவர்களாக, கிறிஸ்தவ பக்தி உடையவர்களாக, எல்லோருக்கும் உதவும் நல்ல சமாரியர்களாகப் போற்றப்பட்ட நிலையில், எட்டு யூதர்களுக்கு நட்புறவுடன் தங்குமிடம், உணவு போன்றவற்றை அளித்துப் பாதுகாத்து வந்தனர். நாசிப் படைகளுக்கு இவர்களின் செயல் தெரியவர, நிறைமாதக் கர்ப்பிணியான தாயும்-தந்தையும் குழந்தைகளின் முன் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின் பிள்ளைகள் ஆறு பேர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தன்னலமற்ற சேவைகளால் மறைசாட்சியாக மரித்த தாயின் வயிற்றில் இருந்த குழந்தை உள்பட உல்மா குடும்பத்தினர் அனைவரும் செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை அன்று போலந்தில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.