மணிப்பூரின் அண்டை மாநிலமான நாகலாந்தில் ஐந்து கிறிஸ்தவ சபைகள் இணைந்து குடியரசுத் தலைவர் திரவ்பதி முர்மு அவர்களுக்கு, மணிப்பூர் நிலைகுறித்துத் தங்கள் ஆழ்ந்த கவலையைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளன. நான்கு மாதத்திற்கு மேலாகப் பற்றியெரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் விவகாரத்தில் தலையிட்டு, அங்கு அமைதியான தீர்வு காண உதவுவதோடு, இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவக் கோவில்கள் மற்றும் கட்டடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்பட ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அக்கடிதம் வழியாகக் கேட்டுள்ளன.
மணிப்பூரில் இடம்பெறுவது மனித உரிமை மீறல்கள் எனவும், மணிப்பூரில் அமைதி, ஒப்புரவு, சமுதாய முன்னேற்றம் எனப் பல துறைகளில் பாடுபட்டு உழைத்த கிறிஸ்தவச் சமூகங்கள் அண்மைக் காலங்களில் தாக்கப்பட்டு வருவது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளன. குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும்படி தங்கள் கடிதத்தை நாகலாந்து ஆளுநர் இல. கணேசனிடமும், இதன் பிரதி ஒன்றை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அவர்களிடமும் இக்கிறிஸ்தவ சபைகள் வழங்கியுள்ளன.