அருள்சகோதரி மேரி குளோரி 1887 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இவரைக் கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்த்தனர். தான் விரும்பியவாறு ஒரு சிறந்த கண் மருத்துவராக மாறினார். கத்தோலிக்கக் கிறிஸ்தவராக மாறிய ஸ்காட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆக்னஸ் மெக்லரின் சுயசரிதைப் புத்தகத்திலிருந்து இந்தியாவில் இருக்கும் பெண்கள் மருத்துவ உதவி பெற முடியாமல் தவிக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டார். புத்தகத்தை வாசித்த அருள்சகோதரி மேரி 1920 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் ‘இயேசு-மரியா-யோசேப்பு’ (JMJ) சபையில் இணைந்தார். அருள்சகோதரியாக, மருத்துவராகத் தனது பணியைத் தொடர்ந்தார். முதன் முதலில் குண்டூரில் செயின்ட் ஜோசப் மருத்துவமனையை நிறுவினார். ஜூலை 29, 1943 ஆம் ஆண்டு இந்தியக் கத்தோலிக்க மருத்துவமனைகளின் கூட்டமைப்பைத் (CHAI)) தோற்றுவித்தார். ஒரு கத்தோலிக்க மருத்துவக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என்பதுதான் இவரது மிகப்பெரிய கனவு. இவரின் இறப்பிற்குப் பிறகு, 6 வருடங்கள் கழித்து 1957 இல் பெங்களூருவில் செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியானது திறக்கப்பட்டது. இவ்வருடம் இக்கல்லூரி தனது வைர விழாவினைக் கொண்டாடுகிறது.
அருள்சகோதரி மேரி 2010 இல் இறையடியாராக அறிவிக்கப்பட்டார். இவரைப் பற்றிய ஆவணங்கள் அனைத்தும், புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான காரணங்களை ஆய்ந்தறியும் தீர்ப்பாயத்திடம் தற் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்று அருள்சகோதரி மேரி உருவாக்கியிருக்கும் இந்தியக் கத்தோலிக்க மருத்துவமனை கூட்டமைப்பானது (CHAI) 3500க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களையும், சமூகச் சேவை பணித்தளங்களையும் உலகம் முழுவதும் கொண்டுள்ளது. பல்வேறு சபைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருள்சகோதரிகள் CHAI இல் மருத்துவர்களாகச் சேவை செய்து வருகின்றனர்.