கனிவான செயல்களுக்கு மிகச் சிறந்த வரலாற்று உதாரணமாகச் சொல்லப் படும் நிகழ்ச்சி எது தெரியுமா? முதல் உலகப் போரின்போது இது நடந்தது.
1914 ஜூலை 28 இல் இருந்து ஆஸ்திரியா-ஹங்கேரிப் பேரரசு, ஜெர்மனி, பல்கேரியா, ஆட்டமென் பேரரசு ஒருபுறமும், அவற்றிற்கு எதிரணியில் இரஷ்யா, ஃபிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் கடும் போரில் இறங்கிச் சண்டையிட்டன.
1914 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்குச் சில நாள்களுக்கு முன்பு சண்டையிட்டு, ஒருவர் ஒருவரைக் கொன்று கொண்டிருந்த இந்த இரு அணிகளின் வீரர்கள் கனிவோடு செயல்படத் தொடங்கினர்.
பதுங்குக் குழிகளில் பயந்து, பதுங்கி வாழ்ந்த வீரர்கள் மெல்ல வெளியே வந்து, இறந்து கிடந்த வீரர்களின் உடல்களைப் புதைத்தனர். டிசம்பர் 23 ஆம் நாள் ஜெர்மன் வீரர்கள் பதுங்குக் குழிகளுக்கு வெளியே கிறிஸ்துமஸ் மரங்களை நட்டு அலங்கரித்தனர். ஓரணியின் வீரர்கள் ‘கிறிஸ்மஸ் கேரல்ஸ்’ எனப்படும் கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாட, தங்கள் இடங்களில் இருந்துகொண்டே மற்ற அணியின் வீரர்கள் சேர்ந்து பாடினர்.
கிறிஸ்துமஸ் விழாவன்று இரு அணிகளின் வீரர்களும் இணைந்து வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். சேர்ந்து கால்பந்து விளையாடினர். உணவையும், பரிசுப் பொருள்களையும் பகிர்ந்தனர்.
பகையுணர்வும், கொலைவெறியும் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்த இந்த வீரர்களின் உள்ளங்களில் கனிவைத் தோற்றுவித்து, யாரும் எதிர்பாரா விதங்களில் அவர்களை நடந்துகொள்ள வைத்தது அனைத்துலகும் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு விழா.
ஆண்டுக்கொரு முறை மட்டுமே வரும் இந்தத் திருவிழாவுக்காகக் காத்திராமல், ஆண்டு முழுவதும் கனிவோடு செயல்படுவது தனி மனிதருக்கும், சமுதாயத்திற்கும் பல விதங்களில் உதவுகிறது.
கனிவோடு செயல்படுவது அன்றாட வாழ்வின் அநேகச் சவால்கள் கொண்டு வரும் மன இறுக்கத்தைக் குறைக்கிறது. நேர்மறையான, நல்ல உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. இதனால் கனிவு உடல்நலத்திற்கும் உதவுகிறது. நட்புறவுகளை உருவாக்கி, ஒரு சமுதாயம் நல்லிணக்கத்தோடு செயல்படத் தூண்டுகிறது. எல்லா வளர்ச்சியும், முன்னேற்றமும் இணக்கத்தோடு ஒற்றுமையாய் வாழும் சமுதாயங்களில் மட்டுமே சாத்தியம் என்பதால், சமுதாய மேம்பாட்டுக்கும் கனிவு உதவுகிறது.
‘கைண்ட்னெஸ்’ (Kindness) என்ற ஆங்கிலச் சொல்லைத்தான் நாம் ‘கனிவு’ என்று தமிழில் மொழிபெயர்க்கிறோம். கனிவிற்குள் நல்லவை பல அடங்கியுள்ளன. பரிவோடு, இதமாய் நடந்து கொள்வது, தாராளமாய் மனமுவந்து கொடுப்பது, மனிதநேயத்தோடும், இரக்கத்தோடும் பேசுவது, செயல்படுவது, சக மனிதரின் தேவைகளை நாமே முன் வந்து நிறைவு செய்வது, யாரென்றே தெரியாத அந்நியரைக் கூட நட்புணர்வோடு நடத்துவது என்று பல காரியங்கள் இதில் உள்ளன. இவை அனைத்தும் ‘கனிவு’ என்ற இந்தப் பரந்து, விரிந்த கருத்திற்குள், சொல்லிற்குள் அடங்கும்.
ஒரு கனிவுச் செயல் யாரைச் சென்றடைகின்றதோ, அந்தப் பயனாளிக்குக் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
மகனுக்குப் பன்னிரண்டு வயது. எப்போதும் சேட்டை, குறும்பு, யாரையாவது வம்பிழுப்பது என்றே இருப்பவன். நடைப்பயிற்சிக்குத் தந்தை கிளம்பியபோது அவனையும் அழைத்தார். இருவரும் பத்து நிமிடங்கள் நடந்த பிறகு வலப்புறம் ஒரு பச்சை வயல் விரிந்தது. ஆண்கள், பெண்கள் பலரும் வயலில் வேலை செய்வது தெரிந்தது.
சாலைக்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் ஒரு ஜோடி செருப்புகள் கிடந்தன. தேய்ந்த, பழைய செருப்புகள். அந்தச் செருப்புகளைப் பார்த்ததுமே புரிந்தது, வயலில் வேலை செய்யும் ஏழைப் பணியாளர் ஒருவரின் செருப்புகளாக இருக்க வேண்டும்.
சிறுவன் ஓடிப்போய் அங்கிருந்த இரண்டு செருப்புகளில் ஒன்றை எடுத்து அருகிலிருந்த இன்னொரு மரத்திற்குப் பின்னே வைத்து விட்டு அப்பாவை அழைத்தான். “இங்க வாப்பா. இந்த மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்குவோம். செருப்பை மரத்தடியில போட்டுட்டுப் போன ஆள் வந்து தேடுவார்ல? ரெண்டு செருப்புல ஒண்ணைக் காணாம அவர் குழம்பிப் பதறுவார்ல? அதையெல்லாம் பார்த்து, ரசிச்சுட்டு, அப்புறம் இந்தச் செருப்பைக் கொண்டு போய் காட்டி, ‘கவலைப்படாதீங்க. இதோ உங்க செருப்பு, இங்கதான் இருக்கு. சும்மா ஒரு ஜாலிக்கு எடுத்து மறைச்சு வைச்சேன்’னு சொல்லி, சிரிச்சுட்டே கொடுத்திடலாம்” என்றான்.
அப்பா அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார். “இங்க பாரு, நான் சொல்றதைக் கவனமாக் கேட்டுக்கோ. ஒரு மனிதனோட குழப்பத்தையும், கவலையையும் பார்த்து ரசிக்கிறவன் நீன்னா, நீ என் பிள்ளை இல்ல” என்றார்.
“அப்ப நான் எதை ரசிக்கணும்?”
“ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியத்தை நீ அவருக்குக் கொடுத்தா, அவர் அப்போதும் குழம்புவார். ஆச்சரியப்படுவார். ஆனா, அது மகிழ்ச்சியான குழப்பம். அதை நீ ரசிக்கலாம். இந்தா நூறு ரூபா! இதை நீ எடுத்த அந்தச் செருப்புக்குள்ள ஒளிச்சு, அதை எங்கிருந்து எடுத்தியோ அங்க வச்சுட்டு வா. அவர் வந்து அந்தச் செருப்பைப் போடும்போது அதுக்குள்ள இருக்குற பணத்தைப் பார்ப்பார். இதை வச்சது யாருன்னு தெரியாம சுத்துமுத்தும் பார்ப்பாருல்ல. அதை நீ ரசிக்கலாம்” என்றார்.
செருப்புக்குள் பணத்தை ஒளித்து வைப்பது ஒரு கனிவுச் செயல். இதன் பயனாளி அந்த விவசாயப் பணியாளர். அவர் அடையும் மகிழ்ச்சி நமக்கு எளிதில் புரியும்.
ஆனால், இந்தக் கனிவுச் செயலைச் செய்யும் மகனுக்கும், தந்தைக்கும் கிடைக்கும் பயன்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய கனிவுச் செயல்களைச் செய்யும் நபர்களுக்கும் மனநலம், உடல்நலம் சார்ந்த பயன்கள் உள்ளதை ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்தக் கனிவுச் செயல்களில் ஒரு வகை மேலை நாடுகளில் மிகவும் பிரபலம். இவற்றை ஆங்கிலத் தில் ‘ராண்டம் ஆக்ட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்’ (Random acts of kindess) என்கின்றனர். எவ்விதத் திட்டமிடலோ, முன்தயாரிப்போ இன்றி, அன்றாடம் நாம் சந்திக்கிற, பார்க்கிற சக மனிதரை முன்னிறுத்தி, அவர்கள் வியந்து மகிழும் விதத்தில் செய்யப்படும் கனிவுச் செயல்கள்தான் இவை.
இத்தகைய கனிவுச் செயல்களைச் செய்யத் தூண்டுகிற நிறுவனங்கள் உள்ளன. எத்தகைய கனிவுச் செயல்களைச் செய்து, நீங்கள் இன்னொரு மனிதருக்கு மகிழ்ச்சியான வியப்பைத் தரலாம் என்ற பட்டியல்களை இவை தொடர்ந்து வெளியிடுகின் றன. ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய கனிவுச் செயல்களைச் சொல்கிற நாள்காட்டிகளை இவை விநியோகிக்கின்றன.
எடுத்துக்காட்டுகளாக இவை தெரிவிக்கும் யோசனைகளில் சிலவற்றைச் சொல்லவா?
அருகிலிருக்கும் முதியோர் இல்லம் ஒன்றில் வாழும் முதியவர் ஒருவரின் பிறந்த நாளை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அன்று அங்கு போய் அவரை வாழ்த்தி பரிசு கொடுங்கள்.
மனைவியின் சமையலைப் பாராட்டி குறிப்பொன்று எழுதி, நீங்கள் வீட்டை விட்டுச் சென்ற பிறகு அவர் பார்க்கும் விதத்தில் வையுங்கள்.
கணவனை இழந்த துயரத்தினின்று இன்னும் மீளாமல் இருக்கும் ஒரு விதவைப் பெண்ணைத் தொலைபேசியில் அழைத்து, அவரது கணவரிடம் நீங்கள் கண்ட ஒரு நற்குணத்தை அல்லது அவர் உங்களுக்குச் செய்த ஒரு உதவியைச் சொல்லுங்கள்.
இத்தகைய கனிவுச் செயல்களைச் செய்யும் போது, நீங்கள் யாரென்று பயனாளிக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வது இன்னும் உயர்ந்தது. எல்லா வேளைகளிலும் இது சாத்தியப்படாது என்பதால் முடிந்த போதெல்லாம் செய்யலாம்.
நீங்கள் செய்யும் கனிவுச் செயல்களால் உங்கள் வாழ்வும், உங்கள் சமுதாயமும் மேலும் வளம் பெறும் என்பது நிச்சயம்!