Namvazhvu
​​​​​​​இளைஞர் மாமன்றம் 2023 மாமன்ற வரைவு அறிக்கை (SYNOD STATEMENT)
Tuesday, 10 Oct 2023 05:21 am
Namvazhvu

Namvazhvu

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இளைஞர் மாமன்றத்தை நாம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 2021, ஏப்ரல் 24 அன்று 16வது ஆயர் மாமன்றத்தைக் கூட்டுவதற்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்தார். இம்மாமன்றத்தில் கீழிருந்து மேல் செல்லும் அணுகு முறையைப் பின்பற்ற அழைப்பு விடுத்தார். ‘இணைந்து பயணிக்கும் திரு அவையாக: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி அறிவிப்புஎன்ற கருப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அனைத்து இறை மக்களின் குறிப்பாக, குழந்தைகள், சிறார், வளரிளம் பருவத்தினர், இளைஞர், பெண்கள், விளிம்பு நிலையினர், துறவிகள், திருநிலையினர், ஆயர்கள், பிற சபையினர், சகோதர சமயத்தார், சமயம் சாராதோர் எனப் பல்வகையினரின் பங்கேற்பும் இம்மாமன்றத்தில் நிறைந்திருக்க வேண்டுமென்பது உறுதி செய்யப்பட்டது. குரலற்றவர்களின் மெல்லிய குரலும் கேட்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை மாமன்றத்தின் ஆழமான அணுகுமுறையை வெளிப்படுத்தியபோது, நமது இளைஞர் மாமன்ற கனவுத் திட்டம் மீண்டும் உயிர்பெற்று வேரிடத் தொடங்கியது.

2022, மார்ச் 27 அன்று நடைபெற்ற நம் பொதுக் குழுக் கூட்டத்தில், இளைஞர் மாமன்றம் ஒருங்கிணைப்பதன் தேவை முன்மொழியப்பட்டு, மாமன்றத்தை முன்னெடுப்பது தீர்மானமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துஇணைந்து இயங்கும் இளைஞராகஎன்ற கருப்பொருளில் மாமன்றம் ஒருங்கிணைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. 2022, ஆகஸ்டு 7 அன்று அனைத்துப் பங்குகளிலும் இளைஞர் ஞாயிறு கொண்டாட்டத்துடன், இளைஞர் மாமன்றம் தொடங்கப்பட்டது. மாமன்றத்தை அணியப்படுத்தும் ஆவண உதவியுடன் பங்குகளில் இளைஞர் மாமன்றம் நடத்தப்பட்டது. மறைவட்டங்களில் பங்குகளின் அறிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் மறைமாவட்ட அளவில் மாமன்றத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இளைஞர் மாமன்றம் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. அனைத்து மறைமாவட்டங்களின் இளைஞர் மாமன்றத் தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இளைஞர் மாமன்றச் செயல்வரைவு தொகுக்கப்பட்டது.

2023, அக்டோபர் 1 அன்று மாமன்ற உறுப்பினர்கள் வேளாங்கண்ணியில் ஒன்றுகூடி, இணைந்து பயணிக்கும் திருத்தந்தையின் மாமன்ற அணுகு முறைக்குச் செயல்வடிவம் கொடுக்க தோழமை ஆட்சியின் (Sociocracy), குறுகிய வட்டக்குழு (Principle of Small Circle), எல்லோரின் ஒப்புதலோடு முடிவுகள் எடுத்தல் (Decision Making by Consent) போன்ற இயங்குமுறையில் செயல்பட்டது.

2023, அக்டோபர் 01-02 ஆகிய நாள்களில் வேளாங்கண்ணியில் நடைபெற்ற தமிழக இளைஞர் மாமன்றத்தில், 17 மறைமாவட்டங்களிலிருந்து 95 பெண் இளைஞர் பகராளிகளும், 144 ஆண் இளைஞர் பகராளிகளும், 58 வழிகாட்டிகளும் கலந்து கொண்ட மாமன்றத்தின் வரைவு அறிக்கை (Synod Statement):

1. இன்று நாம் வாழும் சூழலில் மானுடநேயத்திற்கும், நமது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை விழுமியங்களான இறையாண்மை, சமத்துவ சமூகத்துவம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி போன்றவற்றிற்கும் எதிரான செயல்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இளைஞர்கள் இயக்கமாக இணைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகிறது. இச்சூழலில், நம் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தையும், இளம் மாணாக்கர் இயக்கத்தையும் பங்குகளிலும், கல்விக்கூடங்களிலும் பரவலாக்கி, அவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆற்றல் மிக்க இயக்கமாகச் செயல்படுவதைக் கடவுளின் அழைப்பாகவும், மானுடச் சமூகத்தின் தேவையாகவும் உணர்கிறோம். அதற்கான செயல்பாட்டில் இளைஞர்கள், அவர்களை ஊக்குவிக்கும் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலை நம்பிக்கையாளர்கள், திருநிலையினர் போன்றோரின் உடனிருப்பையும், ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துதல்.

2. என்றும் வாழும் இளைஞர் இயேசுவின் நற்செய்தி விழுமியங்களை உள்வாங்கி, இயேசுவின் மனநிலையோடும், பார்வையோடும் ஆளுமையோடும் இளைஞர்கள் ஆழமான அருள் வாழ்வில் வேரூன்றி, ஆற்றல் மிக்க தூய ஆவியாரால் உறுதிப்படுத்தப்பட்டு, அறிவு, உணர்வு, உறவு சார்ந்த வளர்ச்சியையும், நம்பிக்கையையும், உறவையும் பெற்று, அஞ்சா மனநிலையோடு சமூக மாற்றத்திற்காகச் செயலாற்றுதல்.

3. அளப்பரிய ஆற்றலுடன் பன்முகத்திறன்கள் கொண்டு சாதிக்க முனையும் இளைஞர்களைத் தலைமைத்துவப் பயிற்சி, சமூக அரசியல் பகுப்பாய்வுப் பயிற்சி, திறன்வளர் பயிற்சி போன்றவை வழியாக ஆற்றல்படுத்தி, முடிவெடுக்கும் திரு அவை, சமூகத் தளங்களில் இன்றியமையாத பங்கேற்பாளர்களாக உருவாக்குதல்.

4. அன்றாட வாழ்வியல் தளங்களில் இளைஞர்களை விழத்தாட்டும் சவால்களான வேலைவாய்ப்பின்மை, போதை, ஊடக அடிமைத்தனம், மன அழுத்தம், உறவுச்சிக்கல்கள், சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வுகள், தலைமை வழிபாடு, வெறுப்பரசியல், ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றைத் துணிவுடனும், மனத்தெளிவுடனும் எதிர்கொள்ளவும், தெளிந்த உள்ளத்துடன் எழுந்து நடக்கவும், வெற்றியாளர்களாகத் திகழவும் திரு அவை உடனிருந்து வழிகாட்டுதல்.

5. தங்களின் சமூகப் பங்களிப்பை உணர்ந்த இளைஞர்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, சமூக நீதி படைக்க ஒத்தக் கருத்துடையவர்களுடனும், தோழமை இயக்கங்களுடனும் இணைந்து செயல்படுதல்.

6. இன்றைய நுகர்வுப் பண்பாடும், முதலாளித்துவத்தின் இலாப வெறியும் இயற்கை வளங்களைப் பெருவாரியாக அழித்துக் கொண்டு வரும் இக்காலச் சூழலில், இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையிலிருந்து நாம் அந்நியப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றோம். இச்சூழலில், இளைஞர்கள் இயற்கையைப் பாதுகாக்க அறச்சினம் கொண்டு போராடவும், இறைவனின் அழகிய படைப்பாம் இயற்கையோடும், பல்லுயிர்களோடும் இணைந்து வாழும் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றவும், மானுடச் சமூகத்தின் பொது வீடாம் புவியைப் பாதுகாக்கவும் முனைந்து செயல்படுதல்.

மேற்கூறப்பட்ட வரைவு அறிக்கைத் தொடர் குழு ஆய்விற்குப்பின், கொள்கை வரைவை நோக்கிப் பயணிக்கும். அதைத் தொடர்ந்து நமது இளைஞர் மாமன்றச் செயல்திட்டங்களை உருவாக்கி, செயல்தளத்திற்கு விரைய இருக்கின்றோம். நமது செயல்திட்டங்கள் குறுகிய, நீண்ட காலத் திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, செயல்திறனோடு செயல்பட நம்மை உந்தித் தள்ளட்டும். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் மாமன்றத்தில் இணைந்து செயல்படும் நாம், தொடர்ந்து மாமன்ற நெறியோடும், உணர்வோடும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். நம் அனைவரையும் ஒன்றுபடுத்தி, உண்மையை நிலைநாட்ட உறுதியூட்டும் தூய ஆவியாரின் துணையோடும், இறையாட்சி எனும் மாற்றுச் சமூகத்தைக் கட்டியெழுப்ப உடனிருக்கும் நண்பர் இயேசுவின் தோழமையோடும் மானுட நேயத்தோடு பணியாற்றஎழுந்து விரைந்து சென்ற’ (லூக் 1:39) வேளை நகர் அன்னை மரியாவின் வழி நடத்துதலோடும் எழுந்து விரைந்து செயல்படுவோம்.