அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே,
இந்த ஆண்டின் நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு செய்திக்கான கருப்பொருளின் தூண்டுதலை லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் (24:13-35) எம்மாவு வழியில் சீடர்களின் அனுபவ நிகழ்விலிருந்து பெற்றுக்கொண்டேன். இறைவார்த்தையிலும், அப்பம் பிட்குதலிலும் கிறிஸ்துவைச் சந்தித்த நிகழ்வு, அந்நேரமே புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்று, ‘ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார்’ என்ற செய்தியை அறிவிக்க அவர்களைத் தூண்டியது.
1. ‘அவர் மறைநூலை விளக்கும்போது எங்கள் உள்ளங்கள் பற்றியெரிந்தன.’ நற்செய்தி அறிவிப்புப்பணிச் செயல்பாடுகளில் இறைவார்த்தை நம்மை ஒளிர்வித்து உருமாற்றுகிறது.
மெசியா என்று அவர்கள் எதிர்பார்த்த இயேசு கொல்லப்பட்டார் என்பதால், அச்சீடர்கள் மனம் சோர்ந்திருந்தனர். அவர் கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவரின் ‘தோல்வியை’ எதிர்கொண்டதால், ‘இயேசு மீட்கப் போகிறார்’ என்ற அவர்கள் நம்பிக்கை தளர்ந்து போயிற்று (காண்.வ 21). இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும், வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார் (வ.15). நம்மை அறிவிலிகளாகவும், மந்த உள்ளத்தினராகவும் (வ.25), நம்பிக்கைக் குன்றியவர்களாகவும் ஆக்கும் தோல்வி பயம், சந்தேகங்கள், வலுவின்மைகள், கலக்கங்கள், ‘தீயதே விளையும்’ என்ற மருள் நோக்கு ஆகியவை நம்மில் இருப்பினும், அன்று போலவே இன்றும் தம் அணைகடந்த இரக்கத்தை முன்னிட்டு, அவர் நம்முடன் நடக்கவும், இருக்கவும் தயங்குவதில்லை, சோர்ந்து போவதுமில்லை.
இன்றும், குறிப்பாக நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் நோக்கு நிலையற்றிருக்கும் போதும், துணிவிழந்திருக்கும் நிலையிலும் தவறுகளும், அநியாயங்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு வெற்றி கொள்ள முற்படும் போதும் ஆண்டவர் அவர்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறார், நெருங்கி உடன் நடக்கிறார். எனவே, ‘நாம் நம்பிக்கையினை இழந்து விடாமல் இருப்போமாக!’ (நற்செய்தியின் மகிழ்ச்சி, 86). நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் பார்த்துக்கொள்வார். ஏனெனில், நற்செய்தி அறிவிப்புப் பணி அவருடைய பணி; நாம் அவருடைய எளிய தாழ்ந்த உடன் பணியாளர்களே; பயனற்ற பணியாளர்களே!
(லூக் 17:10).
உயிர்த்த ஆண்டவர் உங்களோடு என்றும் இருக்கிறார்! தூரத்து நாடுகளில் நற்செய்தி பணியாற்றுவதில் நீங்கள் காட்டும் தாராள மனத்தையும், செய்யும் தியாகங்களையும் அவர் காண்கிறார். பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவர் தம் நண்பர்களிடம் கூறிய உறுதியூட்டும் சொற்களை நாம் மறக்கக்கூடாது. ‘உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும், துணிவுடன் இருங்கள்; நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன்” (யோவா 16:33).
‘வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது, நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?’ என்று அவ்விருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆம், இயேசுவே வாழும் இறை வார்த்தை. அவர் மட்டுமே அவ்விருவரில் விளைவித்தது போல நம் உள்ளங்களைப் பற்றியெரியச் செய்ய வல்லவர். நம் உள்ளங்களை ஒளிர்வித்து, நம்மை உருமாற்ற வல்லவர்.
ஆண்டவரே நமக்கு அறிமுகம் செய்யாவிடில், திருவிவிலியத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள இயலாது. மறைநூலை நாம் பெற்றிராவிடில், இயேசு இவ்வுலகில் ஆற்றிய பணிகள் பற்றியும், அவரைத் தொடர்ந்து திரு அவை ஆற்றி வரும் மறைத்தூதுப் பணிகள் பற்றியும் அறிந்துகொள்ள இயலாது (அபெருயித் இல்லிஸ் 1). எனவே, கிறிஸ்தவ வாழ்வுக்கு மறைநூலை அறிந்திருப்பது இன்றியமையாதது; கிறிஸ்துவையும், அவரது நற்செய்தியையும் அறிவிக்க மிகவும் தேவையானது. இறைவார்த்தையால் பற்றியெரியாமல் குளிர்ந்து, தணிந்து போன இதயம் பிறருடைய இதயங்களைப் பற்றியெரியச் செய்ய இயலாது.
எனவே, மறைநூலின் பொருளை விளக்கிக் கொண்டே நம்முடன் நடக்கும் உயிர்த்த ஆண்டவருடன் நாமும் பயணிப்போமாக. அவர் நம் உள்ளங்களை நமக்குள் பற்றியெரியச் செய்வாராக. தூய ஆவியாரிடம் இருந்து வரும் வல்லமையுடனும், ஞானத்துடனும் நாம் மீட்பின் மறைபொருளை உலகிற்கு அறிவிக்க, அவர் நம்மை ஒளிர்வித்து உருமாற்றுவாராக.
2. அப்பம் பிடுதலின்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். நற்கருணையில் வாழும் இயேசுவே தூதுரைப் பணியின் ஊற்றும் உச்சமும் ஆவார்.
இயேசு செய்த ஒன்றன்பின் ஒன்றான செயல்கள், அவர்களுடைய கண்கள் திறக்கப்படக் காரணமாய் இருந்தன. அவையாவன: அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தது. உயிர்த்த இயேசுவின் செயல் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது சிலுவைப் பலியின் நினைவாக நிறுவப்பட்ட நற்கருணை அருள்சாதனத்தைப் புதுப்பிக்கின்றது. எனினும், அப்பம் பிடுதலில் அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்ட உடனே, அவர் அவர்களிடம் இருந்து மறைந்து போனார் (லூக் 24:31). என்னவெனில், அப்பத்தைப் பிடும் இயேசு, இப்போது பிடப்பட்ட அப்பம் ஆகிறார். பிடப்பட்ட அப்பம் சீடர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. அவர்கள் அதை உட்கொள்கின்றார்கள். பிறகு அவர் கண்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில், அவர்களுடைய உள்ளங்களை மேலும் பற்றியெரியச் செய்ய அவர் அவர்களின் உள்ளங்களுக்குள் நுழைந்துவிட்டார். இது அவர்கள் உடனே புறப்பட்டுபோய் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்ததில், தாங்கள் பெற்ற தனித்தன்மை வாய்ந்த அனுபவத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வதற்கான தூண்டுதலைத் தருகின்றது. எனவே, அப்பத்தைப் பிடுபவர் உயிர்த்த ஆண்டவரே! நமக்காகப் பிடப்பட்ட, உடைப்பட்ட அப்பமும் அவரே! ஒவ்வொரு மறைத் தூதுப் பணியாளரும் தூய ஆவியாரின் செயலாற்றல் வழியாக, இயேசுவில், இயேசுவைப்போல அப்பத்தைப் பிடுபவராகவும், உலகிற்காக உடைபட்ட அப்பமாகவும் மாற வேண்டும்.
திரு அவையின் வாழ்விலும், தூதுரைப் பணியிலும் நற்கருணை ஊற்றும், உச்சமுமாக இருப்பதால், கிறிஸ்துவையே உள்ளீடாகக் கொண்டு, நற்கருணையின் அப்பம் பிடுதல் திருப்பலி மிக மிக உயர்ந்த தூதுரைப் பணியாகும். திருப்பலியில் நாம் கொண்டாடும் அருள்சாதன அன்பை நமக்கு மட்டுமே உரியதென வைத்துக்கொள்ள முடியாது. அக்கொண்டாட்டத்தின் இயல்பே, அந்த அன்பை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்துகொள்ள நம்மைக் கேட்டுக்கொள்வதுதான். நற்கருணையில் ஆழமாகவும், உண்மையாகவும் ஊறிய திரு அவையே தூதுரைக்கும் திரு அவை (அன்பின் அருட்சாதனம். 84).
கனிதர நாம் இயேசுவோடு இணைந்து இருக்க வேண்டும் (காண்: யோவா 15:4-9). கிறிஸ்துவுடனான இந்த ஒன்றிப்பை விரும்பி வளர்த்துக் கொள்வதன் வழியாகத் தூதுரைப் பணியாற்றும் சீடர், ஆர்வமாய் செயல்படும் இறை உணர்வாளர் ஆக முடியும்.
3. உயிர்த்த கிறிஸ்துவைப் பற்றிப் பிறருக்கு அறிவிக்கும் மகிழ்ச்சியுடன் எங்கள் பாதங்கள் பயணப்பட்டன. என்றும் இளமையாக மிளிரும் திரு அவை பணி செய்ய எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கிறது.
ஆண்டவரைச் சந்தித்த மகிழ்ச்சியைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்துடன் அவர்கள் புறப்பட்ட வேகம், ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ இயேசுவைச் சந்தித்தவர்களின் உள்ளத்திலும், வாழ்விலும் நிறைந்து இருப்பதை நிரூபிக்கின்றது. இயேசுவைப் பிறருக்கு அறிவிக்கும் ஆர்வத்தினால் பற்றியெரிந்தாலன்றி, உயிர்த்த இயேசுவைச் சந்திக்க இயலாது. உயிர்த்த கிறிஸ்துவை மறைநூலிலும், நற்கருணையிலும் அனுபவித்து உணர்ந்தவர்களே அவர்கள் தங்கள் உள்ளத்தில் பற்றியெரியும் பணியார்வத்தையும், பார்வையில் அவரது ஒளியையும் தாங்கிச் செல்கிறார்கள்.
‘பயணப்படும் பாதங்கள்’ என்ற கருத்துரு பிற இனத்தார் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது என்பதை உறுதிப் படுத்துகிறது. பல்வேறு அநீதிச் சூழல்கள், பிரிவினைகள் மற்றும் போர்களால் காயப்பட்டுள்ள இன்றைய மானிடக் குடும்பத்திற்கு, அமைதியின் நற்செய்தியும், கிறிஸ்து தரும் மீட்பின் அருள் செய்தியும் முன் எப்போதையும்விட இப்போது அதிகம் தேவைப்படுகின்றது.
‘கிறிஸ்துவின் பேரன்பே நன்மை ஆட்கொண்டு உந்தித்தள்ளுகிறது’ (காண்: 2கொரி 5:14). இந்த அன்பு இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று, கிறிஸ்து நமக்குக் காட்டும் அன்பு. இரண்டு, நாம் அவருக்குக் காட்டும் பதில் அன்பு. இப்பதிலன்பை அவரே நம்மில் தூண்டி எழுப்புகிறார். கிறிஸ்துவின் அன்பு திரு அவையைப் புத்தெழுச்சியுடனும், இளமைப் பொலிவுடனும் தொடர்ந்து பயணிக்கச் செய்கின்றது. நம் இறை வேண்டல்கள், பணிச் செயல்பாடுகள், நிதி உதவி, நம் வாழ்வின் துன்பங்களை ஒப்புகொடுத்தல், தனி நபர் சாட்சிய வாழ்வு ஆகியவற்றின் வழியாக நற்செய்தி அறிவிப்புப் பணி அமைப்புகளுக்கு நம் பங்களிப்பை அளிக்க முடியும். திருத்தந்தையின் தூதுரைப் பணி அமைப்புகள், ஆன்மிக உதவி மற்றும் நிதி உதவி வழியாகத் தூதுரைப் பணிக்கு நாம் ஒத்துழைப்புத் தருவதை வளர்த்தெடுக்கின்றன.
திரு அவையின் இத்தூதுரைப் பணி மிக அவசரமானது. உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது. ஈடுபாட்டுடன் ஒத்துழைக்க திரு அவையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றன. திரு அவை தொடங்கியுள்ள கூட்டியக்கப் பயணத்தில் இன்றியமையாத இலக்காகும். இப்பயணத்தின் வழிகாட்டு நெறிமுறைகளாவன: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி மறைத்தூதுப் பணி. இப்பயணம் எம்மாவு பாதையில் பயணித்த சீடர்களைப் போல, உயிர்த்த ஆண்டவருக்குச் செவிமடுத்துக் கொண்டே புறப்பட்டு, பணியின் பாதையில் பயணித்த சீடர்களைப் போல உயிர்த்த ஆண்டவருக்குச் செவிமடுத்துக் கொண்டே புறப்பட்டு, பணியின் பாதையில் பயணிக்கும் செயல்முறை. ஏனெனில், மறைநூலை விளக்கவும், அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கவும் அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். அதனால், தூய ஆவியார் தரும் வல்லமையின் துணையுடன் அவருடைய நற்செய்திப் பணியை ஆற்ற முடியும்.
அவ்விரு சீடர்களும் நடைபெற்றவற்றை மற்றவர்களுக்கு அறிவித்தது போன்று (காண்: லூக் 24:35), நாமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, போதனைகள், வல்ல செயல்கள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, அவரது பேரன்பு நம் வாழ்வில் நிகழ்த்திய அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் பிறருக்கு மகிழ்வுடன் பறைசாற்ற வேண்டும். எனவே, உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த அனுபவத்தால் ஒளியூட்டப் பெற்று, தூய ஆவியின் வல்லமையால் தூண்டப் பெற்றவர்களாய் மீண்டும் புறப்படுவோம். பற்றியெரியும் உள்ளங்களோடு கண்கள் திறக்கப்பட்டு ஒளி பெற்றவர்களாக, நற்செய்தி அறிவிப்புப் பணியில் மீண்டும் பாதம் பதித்துப் பயணிப்போம். பிறருடைய உள்ளங்களையும் இறைவார்த்தையால் பற்றியெரியச் செய்யப் புறப்படுவோம். நற்கருணை யில் அவர்கள் இயேசுவைக் கண்டுகொள்ள, அவர்களுடைய கண்களைத் திறப்போம், தந்தை இறைவன் கிறிஸ்துவில் நமக்கு வழங்கியுள்ள மீட்பின் பாதையில், அமைதியின் வழியில் நடை பயில அனைவரையும் வரவேற்போம்.