Namvazhvu
சிந்தனைச் சிதறல் – 6 உருவக் கேலி
Thursday, 26 Oct 2023 10:36 am
Namvazhvu

Namvazhvu

வ்வொரு மனிதரையும் பார்க்கும்போது முதலில் ஈர்ப்பது அவரின் உடல் தோற்றமே. பார்க்கும் நபர்களின் உடல் தோற்றம் அழகாகவும், கண்ணியமாகவும் இருந்தால் அவர்களைச் சற்று உற்றுப் பார்ப்பது இயல்புதான். அதே சமயம், சற்றே பருமனாகவும், கறுப்பாகவும், உயரம் குறைவாகவும், பல்வரிசை சற்று எடுப்பாகவும் இருந்தால், அவர்களை இயல்பாகக் கடந்து செல்லாமல், சற்று புன்னகையுடன் கடந்து செல்வோம். அவர்களின் உடல் அமைப்பை வைத்து விமர்சனம் செய்வோம். இது மிகவும் கீழான செயல். இது உலகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் உருவத்தை வைத்துக் கேலி செய்வது அன்றாட நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

2022-ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அடிக்கடி இணையத்தில் தேவையில்லாத, நாகரிகமற்றப் பதிவுகளைப் பதிவிடுவது அவரது வழக்கமான செயலாகவும், விளம்பரத்திற்காகவும் செய்து கொண்டிருந்த தருணம். ‘ஆப்பிள்நிறுவனத்தால் வெளியிடப்பட்டஎமோசியைக் கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவரின் புகைப்படத்தையும் வைத்து உடல் கேலி செய்திருக்கின்றார். பில்கேட்ஸ் அவரின் தொப்பையும், எமோசியில் உள்ள தொப்பையும் இணைத்துக் கிண்டல் செய்துள்ளார். மேலும், அதில்நீங்கள் ஓர் எலும்பை விரைவாக இழக்க வேண்டியிருந்தால்...’ என்று ஆண் கருவுற்றிருப்பது என்ற கருத்தில் பதிவு செய்துள்ளார்.

கருத்து சுதந்திரம் வேண்டும். தனிப்பட்ட நபரின் தவறான சொல்லையும், செயலையும் விமர்சனம் செய்யலாம். அது நம்முடைய உரிமை. ஆனால், உருவத்தை வைத்துக் கேலி செய்வது தவறான செயலாகப் பார்க்கப்படுகின்றது. உலகப் பணக்காரர்களில் முதன்மையான இடத்தில் இருந்தவர்; தன்னுடைய நிறுவனத்தின் பெயரால் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றார். இப்படியாக, சமூகத்தில் நல்ல பெயரில் இருப்பவரை, சமூக தளத்தில் அவரின் உருவத்தை வைத்துக் கிண்டல் செய்வது மிகவும் தரமற்றச் செயல், கீழ்த்தரமான செயல் என்று பொது வெளியில் இருப்பவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு வயது 32. சற்றுக் குறைவான உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி. கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது நாகராஜ் மது போதையில் வாகனத்தை இயக்கி வந்திருக்கிறார் என்று காவலர் குற்றம் சாட்டினார். போதையின் மயக்கத்தால் காவலர்களைத் திட்டியுள்ளார் நாகராஜ். அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கும் அவர் காவலர்களைத் திட்டிக்கொண்டு இருந்துள்ளார். அதனைக் கண்டு அங்குள்ள காவலர்கள்நீ என் காலு உயரம் கூட இல்ல, எதுக்குச் சவுண்டு விடுற?’ என்று கூறி அவரை அடித்தார்கள். அடுத்த நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கால் கட்டுடன் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் நாகராஜ் செய்தது தவறு என்றாலும், படித்த, பயிற்சிப் பெற்ற காவலர்கள் செய்த தவற்றை மறந்து விடக்கூடாது. அவர் செய்த செயலுக்குத் தண்டனை கொடுக்கலாம். ஆனால், அவரின் உயரத்தை வைத்துக் கிண்டல் செய்தது மிகவும் தவறான செயல்; கண்டிக்க வேண்டிய செயல்.

திருவிவிலியம் உருவக் கேலியை நேரடியாகப் பேசவில்லை என்றாலும், மனிதப் படைப்பைப் பற்றிக் கூறும்போது, “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால் நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” (தொநூ 1:26) என்றார் கடவுள்.

மானிட உருவம் என்பது இறைவனின் உருவம். எனவே, மானிட உருவத்தைக் கிண்டல் செய்வது, இறைவனையே கிண்டல் செய்வதற்குச் சமம். புனித பவுல்ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால், கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில்” (1கொரி 3:17) என்கிறார். கோவிலைப் போல உடலைத் தூய்மையாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிறார். நம் உடலைப் பேணிப் பாதுகாப்பதைப் போல், அடுத்தவர்களின் உருவங்களை மதிக்க வேண்டும் என்கிறது திருவிவிலியம்.

புனித இரண்டாம் யோவான் திருத்தந்தையாக இருந்தபோது 129 சொற்பொழிவுகளில்உடல்இறையியலைப் பற்றிக் கூறியுள்ளார். “உடலின் நோக்கம் என்பது கண்ணுக்குத் தெரியும் உடலை வைத்து, கண்ணுக்குத் தெரியாத இறைவனைப் புகழ்வதே உடலின் நோக்கம்என்றார் திருத்தந்தை. உடலை மரியாதையாகவும், கண்ணியமாகவும், நேர்த்தியாகவும் மதிக்க வேண்டும் என்றார்

கடந்த செப்டம்பர் மாதம் தெற்கு ஆசிய மாணவர்களுடன் நம் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடிக் கொண்டிருந்தார். அதில் இந்திய நாட்டு மாணவி மெர்லின் அவர்களும் கலந்துகொண்டார். அவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றார். அவர் திருத்தந்தையிடம் தன் கருத்தைத் தெரிவித்தார்: “உடல் கேலி என்பது செயற்கையாக  இருக்கின்றது. அது மற்ற இதயங்களை இணைத்து, இணக்கமாக வாழும் திறனைக் குறைக்கின்றதுஎன்றார்.

இதனைக் கேட்ட திருத்தந்தை தன் இளமை வாழ்வை நினைவுகூர்ந்தார். அவரும், அவரது நண்பர்களுடன் இணைந்து குண்டாக இருந்த நபரைக் கிண்டல் செய்வாராம். மேலும், நண்பர்களுடன் இணைந்து அவரைக் கீழே தள்ளி விடுவார்களாம். அதனால், தன் தந்தை அந்தக் குண்டான நண்பருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, இவர்கள் செய்த தவற்றிற்கு மன்னிப்புக் கேட்க வைத்தார். தற்பொழுது அந்த நபர் நற்செய்தியை அறிவிக்கின்ற நல்ல ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

குண்டாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தா லும், குட்டையாக இருந்தாலும், உயரமாக இருந்தா லும் தனிமனிதனின் ஒற்றுமையில்தான் அழகு இருக்கிறது. உங்கள் இதயங்களில் நல்லிணக்கத்துடன் வாழ்வதே முக்கியம்என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். எனவே, அழகு நம்மை வளர வைக்கிறது. நம் மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒவ்வோர் ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வோர் அழகு உள்ளது. அதை எப்படிப் பார்ப்பது? எப்படி அடையாளம் காண்பது? என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடுத்தவர்களின் உருவத்தை வைத்துக் கேலி செய்வது அவர்களுக்கு மன வேதனையை மட்டுமன்றி, தற்கொலை செய்யக்கூடிய அளவுக்கு அவர் களைச் சிந்திக்க வைக்கும் என்ற வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக்கொள்வோம். தன் அன்பையும், பிறர் அன்பையும் இரு கண்களாக நினைத்து வாழ்வோம்.