கடவுள் தாம் தெரிவு செய்த பணியாளர்களை அவர்கள் பிறக்கும் முன்பே அறிந்திருந்தார்; அவர்களைப் புனிதப்படுத்தினார் எனத் திருவிவிலியம் கூறுகின்றது; “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (எரே 1:5). அவ்வகையில், மரியாவை “அருள்மிகப் பெற்றவரே” (லூக் 1:28) என வானதூதர் வாழ்த்துவதையும், “பெண்களுள் நீர் ஆசி பெற்றவர்” (லூக் 1:42) என எலிசபெத்து வாழ்த்துவதையும் காண முடியும். இவ்வாறாக, கிறிஸ்துவின் மீட்கும் அருள் மரியாவைப் பொறுத்தமட்டில் அவரின் தொடக்கத்திலேயே, அதாவது, அவர் கருவாக உருவான பொழுதே அவருக்கு வழங்கப்பட்டது; இதன் மூலம் அவர் தொடக்கப் பாவத்தில் இருந்து கிறிஸ்துவின் மீட்கும் அருளால் பாதுகாக்கப்பட்டார்; மேலும், அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது பாவம் ஏதும் அவரை அணுகாதபடி அதே கடவுளின் அருள் அவரைக் காத்தது என்கிறது இந்த ஏடு.
மரியாவின் விண்ணேற்பைப் பொறுத்தமட்டில் நேரடி திருவிவிலிய ஆதாரமோ, வரலாற்று ஆதாரங்களோ இல்லை என்பதை இந்த ஏடு சுட்டிக்காட்டியது. இருப்பினும், திருவிவிலியத்தில் விண்ணகத்திற்கு எடுக்கப்பட்ட நபர்களைச் சுட்டிக் காட்டி மரியாவின் விண்ணேற்பை விளக்குகின்றது இவ்வேடு:
1. “ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில், கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்” (தொநூ 5:24).
2. “ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ள இருந்த பொழுது...” (2அர 2:1).
3. மனம் வருந்திய குற்றவாளியை நோக்கி இயேசு, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” (லூக் 23:43) என்று கூறினார்.
இவர்கள் அனைவரும் எவ்வாறு இறவாமல் விண்ணகம் எடுக்கப்பட்டார்களோ, அவ்வாறே மரியாவும் விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார் எனக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்கிறது இந்த ஏடு. மேலும், மரியாவின் விண்ணேற்பை உலக முடிவில் மானிடர்களாகிய நாம் அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் விண்ணகப் பேரின்பத்தின் முன்னடையாளமாய்க் காண வேண்டும் என்கிறது இந்த ஏடு. இவ்வாறு, மரியாவின் விண்ணேற்பைப் பொறுத்தவரை மானிடர்களுக்கு உலக முடிவில் நிகழவிருக்கும் நிகழ்வு, மரியாவைப் பொறுத்தமட்டில், அவரின் இவ்வுலக வாழ்வின் இறுதியில் நடந்த ஒன்றாகக் காண வேண்டும் என்கிறது இந்த ஏடு. தவிர, கடவுளின் திட்டத்தில் யாரெல்லாம் மிகச் சிறப்பான பங்காற்றுகின்றார்களோ, அவர்கள் அனைவரும் கடவுளின் திருமுன் அழைத்து வரப்படுவார்கள்: “இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்” (1தெச 4:14). இவ்வாறு, மரியாவின் விண்ணேற்பானது, விவிலியத்தில் வேரூன்றியதாய் உள்ளது என்கிறது இந்த ஏடு.
‘மிகைப்படுத்தப்பட்ட’ மரியா வணக்கத்தையும், ஆங்கிலிக்கத் திரு அவையைத் தோற்றுவித்த முன்னோடிகள் ஏற்க மறுத்ததையும் இந்த ஏடு கோடிட்டுக் காட்டியது. இருப்பினும், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியா பற்றிய புதிய பார்வைக்குப் பின்பு, மரியாவுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என ஏனையத் திரு அவைகளும் எண்ண ஆரம்பித்தன என்கிறது இந்த ஏடு. இவ்வகையில், ஆங்கிலிக்கத் திரு அவையில் 1561, 1662 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட திரு வழிபாட்டு அட்டவணையில் திருவிவிலியத்தில் வேரூன்றிய மரியாவுக்கு உரிய ஐந்து விழாக்கள் இடம்பெற்றுள்ளதை இந்த ஏடு குறிப்பிடுகின்றது. மேலும், மரியாவின் விண்ணேற்பானது முதன்மையான விழாக்களில் ஒரு விழாவாக ஆங்கிலிக்கத் திரு அவையில் கொண்டாடப்படுகின்றது என்பதையும் இந்த ஏடு சுட்டிக்காட்டுகின்றது. அவ்வாறே, அத்திரு அவையின் நற்கருணைக் கொண்டாட்டத்திலும் மரியாவின் பெயர் இடம்பெறுகின்றது என்றும் இந்த ஏடு கூறுகின்றது. தவிர, மரியாவுக்குச் செலுத்தும் வணக்கத்தையும், மரியா திரு அவையின் முதன்மைச் சீடர் எனும் வகையில் அவர் ஒட்டு மொத்தத் திரு அவைக்காகச் செபிக்கின்றார் என்பதையும், இரண்டு திரு அவைகளுமே ஏற்றுக்கொள்வதாகவும் இந்த ஏடு கூறுகின்றது.
கடவுளின் அருளைப் பெற்றுக்கொண்ட மரியா, அதை எப்படி வாழ்ந்தார் என ஒவ்வொரு திரு அவையுமே தன் மரபின் அடிப்படையில் இருந்து விளக்குகின்றது. அவ்வகையில், ஆங்கிலிக்கத் திரு அவை மரியாவின் பணியைத் திருவிவிலியப் பின்னணியில் இருந்து விளக்குகின்றது; கத்தோலிக்கத் திரு அவையோ மானிடர் சார்பாக அவர் ஆற்றும் பணியில் இருந்து விளக்குகின்றது. ஆங்கிலிக்கத் திரு அவையானது மரியாவின் பணியைத் திருவிவிலியத்தை மையப்படுத்தி அவர் இறைத்திட்டத்திற்கு எவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்பதோடும், அவரின் சீடத்துவ வாழ்வோடும் இணைத்துப் பார்த்தது. கத்தோலிக்கத் திரு அவையோ மானிடத்திற்கு மீட்பின் அருளைப் பெற்றுத் தருவதில் மரியாவின் தொடர்ச்சியான பணியை வலியுறுத்துகின்றது என்கிறது இந்த ஏடு.
“இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” (லூக் 1:48) என்ற மரியாவின் கூற்று, நாம் அனைவருமே மரியாவுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்பதற்கான அடிப்படை ஆதாரமாக உள்ளது என்கிறது இந்த ஏடு. இருப்பினும், மரியாவுக்கு நாம் செலுத்தும் வணக்கத்தில் அனைவரும் ஒருமித்தக் கருத்து கொண்டிருக்கவில்லை என்பதையும் இந்த ஏடு ஏற்கின்றது. ஆனால், இறை அருளால் நிரப்பப்பட்ட மரியாவின் வாழ்வு நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது; எனவே, நாம் அனைவரும் அவரைப் பின்பற்றி வாழ்வது என்பது தேவையான ஒன்று என்கிறது இந்த ஏடு.
மரியா நமக்காகப் பரிந்து பேசுகின்றார் என்பதை, மரியா தாய்க்குரிய பண்புடன் மானிட மீட்புக்காகப் பரிந்து பேசுகின்றார் எனக் காண வேண்டும் என்கிறது இந்த ஏடு. திரு அவையின் பல்வேறு பணிகளை ஆற்றுவதில் திரு அவை பலரைச் சார்ந்து உள்ளது. இவர்களின் இந்தப் பணியானது கிறிஸ்துவின் பணியை ஒருக்காலும் குறைப்பதில்லை. இவ்வாறே, விண்ணகத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகளை நமக்காகச் செபிக்க அழைப்பது என்பது தவறில்லை; இவர்களின் இச்செயலைக் கிறிஸ்துவின் பணிக்கு எதிரான ஒன்றாகக் காண வேண்டிய அவசியமில்லை. இம்மண்ணகத்தில் வாழும் நபர்களை நமக்காகச் செபிக்கக் கேட்கின்றோம். அவ்வாறே, விண்ணகத்தில் உள்ளவர்களையும் செபிக்கக் கேட்பது ஒன்றும் தவறில்லை. இதற்கு திருவிவிலிய ஆதாரம் இல்லையென்றாலும் கூட, இது திருவிவிலியத்திற்கு முரணான ஒன்றல்ல என்கிறது இந்த ஏடு. இருப்பினும், இச்செயல் மூவொரு கடவுளின் மீட்பின் அருளைக் குறைக்கும் செயலாக அமைந்து விடக்கூடாது என்கிறது இந்த ஏடு. அவ்வாறே, இறை நம்பிக்கையாளர்கள் கடவுளிடம் தாங்கள் நேரடியாகச் செபிப்பதைத் தடுக்கும் விதமாக மரியாவின் பரிந்துரைச் செபம் அமையக்கூடாது என்கிறது இந்த ஏடு. இருப்பினும், மரியாவிடம் நாம் வைக்கும் பரிந்துரைச் செபம் மரியாவுடனேயே நின்று விடுவ தில்லை; மாறாக, அது கடவுளிடம்தான் சென்றடைகின்றது என்பதும் இதில் சுட்டிக்காட்டப்பட்டது.
இறுதியாக...
மரியா பற்றிய கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்களை நாம் காணும்போது, அதில் நேர்நிலையான பல கூறுகள் காணப்படுகின்றன. தொடக்கக் காலத்தில் மரியா என்பவர் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே உரியவர் என்ற சிந்தனை இருந்தது; எனவே, மரியா பற்றிய கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்களே சாத்தியமற்றவை எனும் நிலைதான் காணப்பட்டது. ஆனால், காலப்போக்கில் திருவிவிலியத்தில் காணப்படும் மரியாவை அனைத்துத் திரு அவைகளும் ஏற்க முன்வர வேண்டும் என்கின்ற அளவுக்குக் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.
அவ்வாறே, மரியா பற்றிய கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில், கத்தோலிக்கத் திரு அவை வரையறுத்தபடி அவற்றை அப்படியே ஏற்காவிடினும், அவற்றில் பொதிந்துள்ள இறையியல் உண்மைகளைப் பல திரு அவையினரும் ஏற்க முன்வந்துள்ளனர். அவ்வாறே, சீர்திருத்தத் திரு அவையைப் பொறுத்தமட்டில், மரியாவுக்கு உரிய இடத்தை வழங்கத் தாங்கள் முன்வர வேண்டும் என அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்; கத்தோலிக்கர்களைப் பொறுத்தமட்டில் மிகைப்படுத்தப்பட்ட மரியா வணக்கத்தை விடுத்து விட்டு, அது திருவிவிலியம் சார்ந்ததாகவும், கிறிஸ்தியல் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இன்று வலியுறுத்துகின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் உரையாடல் நடைபெறும் தளங்களில் மட்டுமே உள்ளனவேயன்றி, இத்தகைய சிந்தனைப்போக்கு கிறிஸ்தவ இறைநம்பிக்கையாளர்களை இன்னும் அதிகமாகச் சென்றடையவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.