கடவுள் படைத்துள்ள ஒவ்வொன்றும் அழகானது! அவரது படைப்பாகிய நாமும் அழகானவர்கள்; அற்புதமானவர்கள். அவ்வாறு அற்புதமானவர்களாக இவ்வுலகில் மனிதப் பிறப்பெடுத்து, விண்ணில் நிறைந்த இறைவனையும், அவரது மாட்சியையும், விழுமியங்களையும் மண்ணில் தியாகமிக்க வாழ்வால் வாழ்ந்து, வாழ்விக்கப்பட்டவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்து கொள்வது எத்துணை நன்று! எத்துணை இனியது!
சிறிய செயல்களைச் செய்தாலும், ஆரவாரத்தோடு, ஆர்ப்பாட்டத்தோடு செய்கிறவர்கள் மத்தியில், மிகப்பெரிய செயல்களையும் சத்தமின்றி அமைதியாகச் செய்து முடிப்பவர்கள் உள்ளனர். பொறுமையாக, அமைதியாக இருப்பவர்கள் கோழைகள் அல்லர்; தண்ணீர் தனக்குள் வைத்திருக்கும் நெருப்புக்குப் பெயர்தான் மின்சாரம்.
பழைய ஏற்பாட்டில் யாவே கடவுள் தமது உரிமைச் சொத்தான இஸ்ராயேல் மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க மோசே, ஆபிரகாம் போன்ற பல இறைவாக்கினர்களையும், தீர்க்கத்தரிசிகளையும் அழைத்து, காலத்தின் குரலாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்தியதைப் போல, பின்பு புதிய ஏற்பாட்டில் வார்த்தையின் மனுவுரு எடுத்து, மீட்பினை விலைமதிக்க முடியாத திருஇரத்தத்தின் வழியாகத் தம் உயிரைத் தியாகமாக்கிப் பெற்றுத் தந்த இயேசு கிறிஸ்துவைப் போல, அவரைப் பின்பற்றி சாதியக் கொடுமைக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக அமைதியையும், சமாதானத்தையும் விதைக்கும் சிறந்த இறைக் கருவியாய், இந்திய நாட்டில் கொங்கு மண்ணில் மறைப்பரப்புப் பணி செய்த பிரான்சு நாட்டு பாரிஸ் அந்நிய வேத போதக மறைப்பரப்புச் சபையைச் சார்ந்த அருள்பணியாளரும், புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையின் நிறுவுநருமான எம் தந்தை இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சுருக்கமாக உங்கள் ஆன்மிக வாழ்வுக்கு எப்போதும் அசை போடும் சிந்தனைகளாகத் தொகுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். “ஏனெனில், ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம்; இறப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம்; அமைதிக்கு ஒரு காலம்; கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும்”(சபை உரையாளர் 3:1-14).
பிரான்ஸ் நாட்டில்
பெயர் : ஜோசப் லூயிஸ் இரவேல்
மண்ணகப் பிறப்பு : 24.08.1824 (பிற்பகல்)
பிறந்த இடம் : வலெர்ன், பிரான்ஸ்
தந்தையின் பெயர் : பியர் ஜோசப் இரவேல்
தாயாரின் பெயர் : பிரான்கோயிஸ் அர்மன்ட்
திருமுழுக்குப் பெற்ற நாள் : 25.08.1824
திருமுழுக்குப் பெற்ற இடம் : தீங் - மறைமாவட்டம்
கல்வி : 1. ஆரம்பக்கல்வி, வலெர்ன்
2. உயர்நிலைக்கல்வி, சிஸ்ட்ரோன்
மறைமாவட்ட குருத்துவப் பயிற்சி : 1844
பாரிஸ் அந்நிய வேதபோதகப் பயிற்சி : 11.07.1846
திருப்பொழிவு அருளடையாளத்தின்
தயாரிப்பு நிலைகள் (Minor orders) : 29.12.1846
குருத்துவத் திருப்பொழிவு : 17.06.1848
குருத்துவத் திருப்பொழிவு பெற்ற இடம் : 128 Rue du Bac, Paris
திருப்பொழிவு வழங்கியவர் : மேதகு டெனிஸ் அகஸ்டின் அப்ரி
இந்திய நாட்டில் - மறைப்பரப்புப் பணிகள்
பாரிஸிலிருந்து இந்தியாவிற்குப் புறப்படுதல் : 06.07.1848
இந்திய மண்ணில் தடம் பதித்தது : 26.11.1848
பாண்டிச்சேரி வருகை : 30.11.1848
கோவையில் - மறைத்தூதுப் பணி : 01.01.1849
புனித செபஸ்தியார் ஆலயம், பாலக்காடு - பங்குத்தந்தை : 1849-1852
புனித செபமாலை அன்னை ஆலயம்
- பங்குத்தந்தை கருமத்தம்பட்டி, குருமட அதிபர் : 1852-1861
புனித காணிக்கை அன்னை சபை நிறுவிய நாள் : 21.11.1853
பாலக்காட்டில் மறைப்பணி தொடர்தல் : 1861 -1863
புனித வளனார் ஆலயம், வெலிங்டன் – பங்குத்தந்தை : 1863 -1866
புனித செபஸ்தியார் ஆலயம், பாலக்காடு – பங்குத்தந்தை : 1866 -1872
குருமட அதிபர், பேராலயப் பங்குத்தந்தை, கோவை : 1872 -1875
புனித அந்தோணியார் ஆலயம், குன்னூர் : 1875 -1880
விண்ணகப் பிறப்பு : 31.01.1881
சுங்கம் கல்லறையிலிருந்து தந்தை இரவேல் அவர்களின்
உடலின் எஞ்சிய பாகங்கள் சபைத்
தலைமையகத்திற்கு மாற்றம் : 01.06.2009
இறை ஊழியராக அறிவிக்கப்படுதல் : 08.03.2019
அருளாளர் / புனிதர் நிலை உயர்த்துவதற்கான
திருப்பணிகளின் தொடக்கம் : 14.01.2020
அருளாளர் / புனிதர் நிலை உயர்த்துவதற்கான
திருப்பணிகளின் இறுதி அமர்வு : 05.11.2023
அருள்சகோ. பிரான்சிஸ்கா நிர்மலா
வரலாற்று ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர், கோவை