கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் களமசேரி எனும் இடத்தில் ‘ஜெகோவா விட்னஸ்’ அமைப்பு சார்பாக மூன்று நாள்கள் செபக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்தனர். ஏறக்குறைய காலை 9:40 மணி அளவில் செபக்கூட்டத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் மூவர் இறந்தனர். மேலும், 54-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் உள்ளனர். இது சம்பந்தமாக டோமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், “இது போன்ற கொடிய நிகழ்வுகள் மாநிலத்தில் இதுவரை நடந்ததில்லை. மாநிலத்தின் மதச் சகிப்புத்தன்மையைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை நிகழ்வு இது. ஒரு சாதாரண மனிதரைக் கைது செய்துவிட்டு, இக்கொடிய நிகழ்விற்குப் பின் இருப்பவர்களைக் காவல்துறை மறைக்க விரும்புகிறது. எனவே, இது தொடர்பான விசாரணைகள், வழக்குகள் அனைத்தும் தேசியப் புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட வேண்டும்” என்று கேரளக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தனது அறிக்கையில் கூறியுள்ளது.