Namvazhvu
பார் போற்றும் தமிழக அருள்பணியாளர் ச. இஞ்ஞாசிமுத்து சே.ச.
Tuesday, 07 Nov 2023 07:35 am
Namvazhvu

Namvazhvu

தேனி மாவட்டம், சிந்தலச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட அருள்பணியாளர் ச. இஞ்ஞாசிமுத்து அவர்கள் சேசு சபையைச் சார்ந்த குருவானவர். தற்போது பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் உலகம் போற்றும் ஓர் ஆய்வாளர். இதுவரை 80 புத்தகங்களையும், 800-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ளசுற்றுச்சூழல் ஆன்மிகம்எனும் நூல் மிகவும் பாராட்டப்படுகின்றது. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணை வேந்தராகவும், சென்னை இலயோலா கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதல்வராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் உலக அளவிலும், தேசிய அளவிலும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அண்மையில் கூட சுதந்திர தின விழா அன்று டாக்டர் A.P.J அப்துல் கலாம் விருதானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது. இன்று உலக அளவில் சிறந்த சித்த மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவராகவும், இந்திய அளவில் பத்தாவது இடத்தையும் அருள்பணியாளர் அவர்கள் பெற்றிருப்பது உண்மையாகவே நமது தமிழ்நாட்டுக் குப் பெருமை சேர்க்ககூடிய ஒன்று.

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகமானது உலக அளவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஆய்வுகள் மற்றும் ஆய்வாளர்கள் குறித்து ஒரு பட்டியலைத் தயாரித்தது. 1,00,030 பேர்களின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் அருள்பணியாளர் இஞ்ஞாசிமுத்து அவர்கள் 832-வது இடத்தை உலக அளவில் பிடித்து நமது இந்திய நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.

இவர் தனது ஆய்வுகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். முதலாவதாக, சமூகத்திற்குப் பயன்படக் கூடிய சத்து மிகுந்த உணவு தானியங்களைக் குறைவான தண்ணீர் மற்றும் உரங்களைப் பயன்படுத்தி எப்படி உற்பத்தி செய்வது என்பது. இதில் ஆய்வு மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இரண்டாவதாக, சித்த மருத்துவ மூலிகைகள் எந்த அளவுக்கு அறிவியல்பூர்வமாக உண்மையானவை மற்றும் குணமளிக்கக்கூடியவை என்பதைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார். மூன்றாவதாக, விவசாயத்திற்குச் சாதகமாக இருக்கும் பூச்சிகள் மற்றும் பாதகமாக இருக்கும் பூச்சிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். விவசாயத்தில் மகசூலைப் பெருக்க பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரித்துள்ளார்.

பூச்சியியல் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி ஒரு பூச்சி இனத்திற்குஜாக்த்ரிப்ஸ் இஞ்ஞாசிஎனும் இவரது பெயரானது சூட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஓர் இயற்கை மூலக்கூறுக்குஇக்னாசி யோமைசின்எனும் இவரது பெயரே கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிச் சமூகத்திற்காக, இயற்கைக்காக, விவசாயிகளுக்காக, மாணவச் சமுதாயத்திற்காக அரும்பணி ஆற்றி, நமது இந்தியத் திருநாட்டிற்குக் குறிப்பாக, நமது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வரும் அருள்பணியாளர் இஞ்ஞாசிமுத்து அவர்களையும், அவரது ஆய்வுகளையும் உளமாறப் போற்ற வேண்டியது நமது கடமை.