நவம்பர் மாதம் என்றாலே, அதிகம் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். வருங்காலத்தில் உலகை ஆளப்போகிற இவர்கள், வெள்ளை மனம் கொண்டவர்கள். எனவே, இவர்களை மகிழ்விப்பதற்காக, இவர்களின் திறமைகளை ஊக்குவித்து வளர்ப்பதற்காக, இவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் நல்வாழ்வுக்கு வழி அமைப்பதற்காக உலக நாடுகள் குழந்தைகள் நாளை வசதிக்கேற்பச் சிறப்பிக்கின்றனர்.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். குழந்தைகள் அவரை ‘நேரு மாமா’ என்று அன்போடு அழைத்தனர். அவரின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாளை ‘குழந்தைகள் தினமாக’ நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். ஐக்கிய நாடுகளின் சபையால் உலகக் குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.
“இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள். அவர்களை நாம் வளர்க்கும் விதம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்” (The children of today will make the India of tomorrow. The way we bring them up will determine the future of the country) என்றார் ஜவஹர்லால் நேரு. “நம் குழந்தைகள் சிறந்ததொரு வருங்காலத்தைக் கொண்டிருக்கும் பொருட்டு, இன்றைய நம் காலத்தைத் தியாகம் செய்வோம்” என்று சொன்னார் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்.
நாட்டின் வருங்காலத் தலைவர்களுக்கு நல்லொழுக்கத்தின் விதைகளை விதைக்கும் நாளே நாம் கொண்டாடும் குழந்தைகள் தினம். இத்தினத்தன்று குழந்தைகளைப் பாராட்டுவதும், வாழ்த்துவதும், அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இன்று நம் சமூகத்தில் கூட்டுக் குடும்பங்கள் சுருங்கி, ஒற்றைக் குடும்பங்கள் வளர்ந்துவிட்டன. தாத்தா-பாட்டிகளோடு விளையாடுவதும், தூங்குவதும், கதைப்பதும் இன்றைய குழந்தைகளால் அனுபவிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கே நேரம் இருப்பதில்லை. எனவேதான் குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்கள் “உங்களது பிள்ளைகளுக்காக நேரத்தை அர்ப்பணியுங்கள்” என்கின்றனர்.
நம் நாட்டின் செல்வங்களாகிய குழந்தைகள் சில நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள், வீடு, பள்ளி, பொதுவிடங்கள் எனப் பல இடங்களில் அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றனர். குழந்தைகள் நன்முறையில் செழித்து வளர்ந்தால் மட்டுமே, இவ்வுலகம் வாழ முடியும் என்பதை அறிந்திருந்தாலும், உலகின் எந்த ஒரு நாடும், தன் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கவில்லை என்று ஐ.நா. அவை 2020, பிப்ரவரி 19, புதன் அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக வெளியான ஐ.நா. அறிக்கையில், குழந்தைகளின் உடல்நலக் குறைவு, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் வாய்ப்புகள் மறுப்பு என்ற மூன்று ஆபத்துகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ‘முதல்தர நாடுகள்’ என்றழைக்கப்படும் செல்வம் மிகுந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை காட்டப்படுவதில்லை என்று இவ்வறிக்கை கூறுகிறது.
இவ்வுலகில் வாழும் குழந்தைகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 25 கோடி குழந்தைகள், தங்கள் முழு வளர்ச்சியையும், நலனையும் அடைய இயலாத சூழ்நிலையில்தான் வளர்கின்றனர். 1975-ஆம் ஆண்டு 1 கோடியே 10 இலட்சம் குழந்தைகள் உடல் பருமன் என்ற குறையால் பாதிக்கப்பட்டிருந்த நிலை மாறி, தற்போது 17 கோடியே 75 இலட்சம் குழந்தைகள் உடல் பருமன் என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் குழந்தைகளை இலக்காக்கி, இணையதள விளையாட்டுகளை விளம்பரம் செய்யும் போக்கு முக்கியக் காரணம் என்பதும் ஐ.நா. தெரிவிக்கும் அதிர்ச்சி அறிக்கை. குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் விளம்பரங்களே இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.
மேலும், நாளைய உலகின் எதிர்காலத்தை உருவாக்கும் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்காமல், பணிபுரியச் செய்வது மிகப்பெரிய கொடுஞ்செயலாகும். இந்தியாவில் வீடு, சாலையோரக் கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 1,01,00,000 குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கின்றனர் என்கிறது பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO).
இந்தியாவில் உள்ள பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடிக் கொண்டிருப்பதால், தங்களின் வருமானத்திற்கான வழியாகக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களின் துன்பத்தை அகற்றி, அவர்களின் வாழ்வில் கல்வி என்னும் தீபம் ஏற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
நிறைவாக, ஒரு குழந்தையானது, தான் பெற்ற அனுபவங்களைத் திறந்த காதுகளுடன் கேட்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறது. அப்போது அலட்சியம் செய்வது, காது கொடுக்காது தொடர்பற்றக் கேள்விகளை வெளிப்படுத்துவது, எரிச்சல் படுவது, இடைநிறுத்தம் செய்வது எல்லாம் குழந்தைகளின் உணர்வுகளைக் காயப்படுத்துகின்றன என்பதை உணர்வோம். குழந்தைகளைப் பிறரோடு ஒப்பீடு செய்து கொள்வது, முன்னேற்றத்திற்கான தூண்டுதல் என நாம் தவறாகக் கணிக்கின்றோம். எங்கு ஒப்பீடு இருக்கிறதோ, அங்குப் போட்டியும், பொறாமையும், அடுத்தவர் மீது கோபமும், எரிச்சலும் உண்டாகிறது என்பதை உணர்வோம்.
குழந்தைகள் வளரும்போது, எதிர்மறையான வார்த்தைகளையும், அர்த்தமற்றப் பேச்சுகளையும் தவிர்த்து, அவர்களுக்குச் செவிசாய்ப்பவர்களாகவும், அவர்களை ஊக்கப்படுத்துபவர்களாகவும் நாம் மாறுவோம். போர்களில்லாத அமைதியான சூழலை நம் குழந்தைகளுக்கு வழங்குவோம்.