Namvazhvu
தமிழ்நாட்டில் கிறிஸ்தவம்
Wednesday, 15 Nov 2023 11:16 am
Namvazhvu

Namvazhvu

மறவ நாட்டின் கடற்புரங்களில் போர்த்துக்கீசியர் ஆட்சி செலுத்தத் தொடங்கிய 1540 முதல் நற்செய்திப் பணி நடைபெற்றாலும், நாட்டுப்புறங்களில் 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான்  ஆரம்பித்தது. 1640-இல் தந்தை பல்தசார் தெ கோஸ்தா போர்த்துக்கீசியப் படைகளுக்கு ஆன்மிகப் பணி ஆற்ற இராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். 1663-இல் தந்தை அந்தோணி புரோ வென்சா மறவநாட்டில் முதன்முறையாக 252 பேர்களுக்குத் திருமுழுக்களித்தார். அவர்களில் ஒருவர் இந்து சந்நியாசி, முடியப்பன் எனத் திருமுழுக்குப் பெற்று மிகுந்த வாஞ்சையுடன் மறைப்பணி ஆற்றினார். அவரின் சொத்துகள் எல்லாம் பறிக்கப்பட்டன. ஆனால், எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல், இயேசுவைப் பற்றி மட்டும் அறிவிப்பதிலே பேரார்வம் கொண்டார். தனது சகோதரர் அருளப்பன் துணையுடன் கூவத்தூரில் ஓர் ஆலயமும், குருக்கள் இல்லமும் எழுப்பினார்.

சேதுபதி படைவீரர் ஒருவரும் கிறிஸ்தவத்தில் இணைந்து, அளப்பரிய பணி செய்தார். மறவ நாட்டில் மறைப்பணி ஆற்றத் தடையும், பெரும் தண்டனையும் இருந்ததால், மறவ நாட்டுக் கிறிஸ்தவர்கள் ஆன்மிகக் காரியங்கள் பெற காந்தலூருக்கும், பின்னாள்களில் முள்ளிப்பாடிக்கும் சென்று வந்தனர். இவ்வாறு மறவ நாட்டில் வட எல்லையான கரையாம்பட்டியில் பணியாற்றிய புனித அருளானந்தரை 1679-80 ஆகிய ஆண்டுகளில் சந்தித்தனர். 1682-இல் கூவத்தூரில் புனித அருளானந்தர் நிகழ்த்திய பாஸ்கு திருப்பலியில் பங்கேற்று, தங்களது மறவ நாட்டிற்கு மறைப்பணி ஆற்ற அழைப்பு விடுத்தனர்.

கிழவன் சேதுபதி ஆட்சியில் சமயத் துன்புறுத்தல்

1683-இல் 4000 கிறிஸ்தவர்கள் இப்பகுதியில் வாழ்ந்தனர். அருளானந்தர் 1686, மே 5 அன்று மறவ நாட்டிற்குள் நுழைந்தார். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துதல் 1669-ஆம் ஆண்டே இங்கு துவங்கியது. அருளானந்தர் தடைகளைத் தாண்டி நற்செய்தி வேட்கையுடன் ஆயிரக்கணக்கானவர்களுக்குத் திருமுழுக்களித்தார். 1690-இல் அருளானந்தர் போர்த்துக்கல் சென்ற போது அவரின் நம்பிக்கைக்குரிய உபதேசியார் சிலுவை நாயக்கர் உதவியுடன் தந்தை லூயிஸ் டி மெல்லோ பணியாற்றினார். அருளானந்தர் கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்டப் பிறகு, தந்தை மெல்லோ மற்றும் பெர்னார்டு தெ சா 1694 முதல் 1699 வரை மறவ நாட்டில் பணியாற்றினார். தந்தை மெல்லோ 22 மாதங்களுக்குள் 10,000 பேர்களுக்குத் திருமுழுக்களித்தார். இவர் தஞ்சை பணித்தளத்திலிருந்து மறவ நாட்டைப் பிரித்துத் தனி பணித்தளமாக உருவாக்கினார். 1704-இல் தந்தை மெல்லோ மற்றும் நான்கு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

1709-ஆம் ஆண்டு தந்தை மார்ட்டின் கடிதத்தின்படி ஐந்து மறைப்பணியாளர்கள் இப்பகுதியில் கொடுமைப்படுத்தப்பட்டனர். 1710-இல் கிழவன் சேதுபதி (80) இறந்தபோது, அவனின் 47 மனைவிகளும் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். அவனுக்குப் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய விஜயரகுநாத சேதுபதி புதிய கிறிஸ்தவ ஆலயங்கள் எழுப்பிட அனுமதித்தார்.

1711 முதல் 1725 வரையிலான ஆட்சியில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தக்கூடாது எனப் பிரகடனப்படுத்திய போதும், ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் நடந்தேறின. தந்தை மார்ட்டின் மற்றும் இரண்டு உபதேசியார்கள் கைது செய்யப்பட்டு, காளையார் கோவில் சிறையில் இரண்டு மாதங்கள் வாடினர். 1713-இல் அறந்தாங்கி இளவரசர் ஆதரவுடன் 2000 பேர்கள் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். மேலும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதிலிருந்து  காத்தார்.

சேதுபதி விஜயரகுநாதன் இராமேஸ்வரம் சென்றபோது கிறிஸ்தவராகிய தனது மச்சான் (மனைவியின் சகோதரன்) திருவழுவாதேவனிடம் ஆட்சிப் பொறுப்பை விட்டுச் சென்றான். அந்நாள்களில் ஆலயங்களைச் சந்தித்து, கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கினார். அரண்மனை திரும்பிய சேதுபதி பிராமணர்களின் வஞ்சகத்தால் வழிநடத்தப்பட்டு, கிறிஸ்தவர்களிடமிருந்த செபமாலை, சிலுவை, புனிதப் பொருள்கள் மற்றும் படங்களைப் பறித்து அவர்களை அச்சுறுத்தினான். திருவழுவாதேவனும் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார். சேதுபதி கட்டத்தேவன் காலத்தில் 1726-இல் தந்தை பெர்த்தோலிடி அரண்மனைக்குச் சென்று அரசனைச் சந்தித்து மறைப் பணிக்கு அனுமதி பெற்றார். பெர்த்தோல்டி பல்லக்கில் அமர்ந்து சென்று சேதுபதியைச் சந்தித்தார் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், விஜயரகுநாத தேவனின் மகள் கிறிஸ்தவத்தைத் தழுவியது மறவ நாட்டுத் திரு அவைக்குப் புத்துயிர் தந்தது.

சின்ன சவேரியார்’ மறைப்பணி

‘சின்ன சவேரியார்’ எனப் போற்றப் பெறும் பிரெஞ்சு இயேசு சபைக் குரு தாமஸ் ஜேக்ஸ்தெரோசி 1736-இல் மறவ நாட்டில் மறைப்பணியைத் தொடங்கினார். இராம்நாடு, சிவகங்கை,  அறந்தாங்கி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் மறைப் பணியை மேற்கொண்டு ஓர் ஆண்டுக்குள் 740 பேர்களுக்குத் திருமுழுக்களித்தார். மரியன்னையின் பக்தி கொண்டு பல இடங்களில் புனிதமிக்க கன்னி மரியாவுக்கு ஆலயங்கள் எழுப்பினார். பண்டாரத்தார் ஆளுகையான பட்டுக்கோட்டையில் புனித சூசையப்பருக்கு ஆலயம் எழுப்பினார். புனித வியாகுல அன்னை, புனித சுவக்கின், புனித சூசையப்பர், புனித ஞானப்பிரகாசியார், புனித சவேரியார், அருளாளர் அருளானந்தர் பெயரால் பல புதுமைகளை ஆற்றி மக்களின் விசுவாசத்தைத் தட்டி எழுப்பினார். 13 ஆண்டுகளுக்குள் (1736-1748) 18,667 பேர்களுக்குத் திருமுழுக்களித்து ஆத்ம தாகத்துடன் பணியாற்றினார். எனவேதான் தந்தை ரோசி அவர்களைச் ‘சின்ன சவேரியார்’ என அன்புடன் அழைத்தனர்.

1746 முதல் தந்தை ரோசி இடைநிலை சாதிக் கிறிஸ்தவர்களையும், தந்தை ஜோசப் பெர்னார்டு தலித் கிறிஸ்தவர்களையும் பராமரித்தனர். தந்தை ரோசி 1748-இல் மரணியல் என்ற ஊரில் புனித வியாகுல அன்னைக்கு ஆலயம் எழுப்பினார். 38 ஆண்டுகள் மறவ நாட்டில் மறைப்பணியாற்றிய தந்தை ரோசி, 1774, அக்டோபர் 12 அன்று மறைந்தார். அவர் இம்மறைத்தளத்தைப் பற்றிய பல மடல்கள் எழுதியுள்ளார். அந்த ஓலைச்சுவடிகள் சருகணியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சருகணியை நடுவமாகக் கொண்டு தந்தை ரோசி 1736 முதல் 1774 வரை பணியாற்றினார். 18-ஆம் ஆண்டின் மத்தியில் இப்பங்கில் உடையார், சாணார், செட்டியார், வெள்ளாளர், பறையர், பள்ளர், அகமுடையார் மற்றும் மறவர் சாதிகளைக் கொண்ட 2600 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். ‘சத்திய வேதபோதகர்’ என்ற பெயரில் முன்னாள் இயேசு சபைக்குரு ஜோசப் தெ ரேம் 1780-களில் இப்பகுதியில் பணியாற்றினார். சருகணியைப் போன்று சூராணம் புனித சந்தியாகப்பர் மறைத்தளமும் பழமையானது.

1730-ஆம் ஆண்டு இயேசு சபை மடலின் மூலம் சூராணம் 170 கிறிஸ்தவக் கிராமங்களுக்குத் தலைமையிடமாகத் திகழ்ந்தது தெரிய வருகிறது. தந்தையர் ஜான் அலெக்சாண்டர், வியரா மற்றும் லியோனார்டு ஜோக்ஸ் இங்கு பணியாற்றினர். பாம்பன், வேதாளை, வேம்பார் மற்றும் பெரியப் பட்டினம் பகுதியில் புனித சவேரியார், மறைசாட்சி கிரிமினாலினி மற்றும் தந்தை பல்தசார் தெ கோஸ்தா பணியாற்றியுள்ளனர்.

பாம்பன், இராமேஸ்வரம் வேர்க்கோட்டில் வாழும் 450 கிறிஸ்தவர்களுக்கு 1644-இல் புனித சந்தியாகப்பருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இராமநாதபுரம் சேதுபதி இவ்வாலயத்தில் 1715-இல் வழிபட்டார். கடல் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஆற்றங்கரையில் புனித முடியப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்ததை 1715-ஆம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது. 1644-ஆம் ஆண்டே இங்கு திருச்சிலுவைக்கு எழுப்பப்பட்ட ஆலயமும், 80 கிறிஸ்தவர்களும் இருந்தனர்.

சேதுபதி கட்டத்தேவன் காலத்தில் முத்துப் பேட்டையில் புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இவ்வாறு 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவம் மறவ நாடு முழுவதும் பரவியது.       

(தொடரும்)